Header Ads



யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் இந்திய வீட்டுத்திட்டம் பற்றிய விளக்கம்


(Social Contribution of Jaffna Killinochchi Muslim Federation on Indian Housing Projects in Jaffna District)

யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதும், கடந்த 20 வருடங்களுள் அவர்களது வீடுவாசல்கள் நாசமாக்கப்பட்டதும், அவர்கள் ஒரு கடுமையான வாழ்வினை அனுபவித்தவர்கள் என்பதும் பல சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களே.  வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்” என அரசினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். எனினும் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்களின் விதிமுறைப்படி புதிய அகதிகள், பழைய அகதிகள் என்னும் வகைப்படுத்தல் காணப்பட்டது. இதன்கீழ் யாழ்ப்பாண முஸ்லிம்கள் “பழைய அகதிகள்” என்று அடையாளம் செய்யப்பட்டார்கள். பழைய அகதிகள் விடயத்தில் மீள்குடியேற்றத்திற்கான பெரும்பாலான உதவிகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் உதவிகளை வழங்கும் மாற்று வழிமுறைகளை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருந்தோம். அதற்கான முயற்சிகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. 

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிக அடிப்படையான மூன்று விடயங்களை அடையாளப்படுத்தியது 01- யாழ் முஸ்லிம்களின் வீடில்லாப்பிரச்சினை 02- காணியில்லாப்பிரச்சினை 03-தொழில் வாய்ப்பு சார்ந்த பிரச்சினைகள் என்பனவே அத்தகைய மூன்று அடிப்படைகளுமாகும், இவை தீர்க்கப்படும்போது மாத்திரமே யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையடையும். இதுவே எமது அடிப்படை நிலைப்பாடாகும். 

இவ்வாறான நிலையில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ் முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதில் தொடர்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை பல மட்டங்களிலும் நிகழ்த்தி வருகின்றது.

2011 பெப்ரவரி 08: வடமாகாண ஆளுனர் அவர்களுடனான சந்திப்பு
2011 மே 09: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான சந்திப்பு
2011 மே 29: அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுடனான சந்திப்பு
2011 ஜூலை 11: வடமாகாண ஆளுனர் அவர்களுடனான சந்திப்பு
2011 ஆகஸ்ட் 24: வடமாகாண ஆளுனர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், அனைத்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,  அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியோருடனான சந்திப்பு

போன்ற முக்கிய உயர் மட்ட சந்திப்புகளின்போது யாழ் மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்றகோரிக்கை முன்வைக்கப்பட்டது.

19 ஜனவரி 2012 இந்தியாவின் முன்னை நாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுடனான சந்திப்பின்போதும்
23-ஏப்ரல் 2012 இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சந்திப்பு
04-ஜூன்-2012 யாழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பு

போன்ற இந்திய பிரதிநிதிகளின் உயர் மட்ட சந்திப்புகளின்போதும் யாழ் முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இத்தகைய உயர் மட்ட சந்திப்புகளின் பயனாக, இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கில் இந்திய உயர் அதிகாரிகள் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்துடன் விஷேட சந்திப்புகளை நடாத்தினார்கள் 

13-பெப்ரவரி 2013 அன்று யாழ் மாவட்ட இந்திய கவுன்சூல் கௌ.மஹாலிங்கம் அவர்களுடனான சந்திப்பு
24-பெப்ரவரி 2013 அன்று இந்திய உயர்ஸ்த்தானிகர் அஷோக்.ஏ.காந்தா அவர்களுடனான சந்திப்பு
9-மார்ச்-2013 அன்று யாழ் மாவட்ட இந்திய கவுன்சூல் கௌ.மஹாலிங்கம் அவர்களுடனான சந்திப்பு

போன்ற மூன்று சந்திப்புகளும் குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்தல் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகளாகும். இதன்போது பினவரும் முக்கிய விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தினோம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக 30711 புதிய வீடுகள் தேவைப்படுகின்றன, 5400 வீடுகள் திருத்தியமைக்கபடவேண்டிய தேவையுடன் இருக்கின்றன. இவ்வாறாக யாழ் மாவட்டத்தில் தேவையான வீடுகளின் எண்ணிக்கை 36111 ஆகும். இதில் இந்திய வீட்டுத்திட்டத்தினால் 8700 புதிய வீடுகளும், 1000 வீட்டுத்திருத்தங்களும் மேற்கொள்வதற்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. எனவே தேவைகள் அதிகமாகவும் உதவித்திட்டங்கள் குறைவானதாகவும் இருப்பதை எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. விண்ணப்பிக்கின்ற 7பேருள் 2பேருக்கு மாத்திரமே வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதை எம்மால் கண்டுகொள்ள முடியுமாக இருக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 9700 வீடுகளும் யாழ் மாவட்டத்தின் 435 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் பகிரப்பட இருக்கின்றன, அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்கின்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலகப்பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவு, வேலனை பிரதேச செயலகப்பிரிவு ஆகிய பிரிவுகளில் வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவிற்குள் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கிராம சேவையாளர் பிரிவுகளாகிய ஜே-84,85,86,87,88 ஆகிய பிரிவுகளுக்கும் வீட்டுத்திட்ட ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன. எனவே குறித்த ஒதுக்கீட்டில் மிகவும் உரிய முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கிக்கொள்ளப்படவேண்டும் என்பது பொதுவான நிலைப்பாடாக இருக்கின்றது.

இந்திய வீட்டுத்திட்டத்தில் சமூகப்பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகரகம் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்துடன் மேற்கொண்ட சந்திப்பில், மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிகள் யாழ் மாவட்டத்தில் கடமைபுரியும் ஒரு சில அரச உயர் அதிகாரிகளினால் பாரபட்சமாக நடாத்தப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைவாக யாழ் முஸ்லிம் சமூகத்தவரின் இந்திய வீட்டுத்திட்ட விண்ணப்பங்களானது யாழ்ப்பாணம் அரச அதிபரினூடாக சமர்ப்பிக்கப்படுகின்ற அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகரூடாகவும் கையளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டது. இதற்கமைவாக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான துரித விண்ணப்பங்கோரல் செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தியது. இதன் பிரகாரம் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்த 310 விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு அவற்றின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய முறைப்படி மேலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றது. எனவே யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாக இந்திய வீட்டுத்திட்டத்தில் இத்தகைய குறிப்பிட்டுச்சொல்லும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மக்களும் புத்திஜீவிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேற்படி செயற்திட்டமானது முழுமையாக சமூகநோக்கினை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டமாகும், அரசியல் நோக்கங்களோ, இனத்துவ நோக்கங்களோ இங்கு காணப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமான விடயம் என்னவெனில் யாழ் முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் ஒரு சிலர் வழமைபோன்ற தமது அரசியல் சித்து விளையாடல்களை இவ்விடயத்திலும் காட்டியிருப்பதுவேயாகும். எனினும் மக்களும் இதுவிடயத்தில் தொடர்புடைய நிறுவனங்களும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தூய்மையான நோக்கத்தையும் அதன் நேர்மையான செயலொழுங்கையும் புரிந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் மேற்படி செயற்திட்டத்தில் நாம் காத்திரமான அடைவுகளை நாம் அடைந்திருக்கின்றோம்.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கான துரித விண்ணப்பங்கோரல் செயற்திட்டத்தின் நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம் மக்களிடம் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக விழிப்புணர்வூட்டி அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் துரித செயற்திட்டம் ஒன்றினை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அறிவித்தது. 

இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற முஸ்லிம் குடும்பங்களிடம் இருந்து இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை 2013 மார்ச் 10 முதல் தொடக்கப்பட்டது.

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் இவ்வாறாக இந்திய வீட்டுத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சேகரித்து அதனை அரச அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் கையளிக்கும் செயற்திட்டமொன்றினை மேற்கொள்கின்றது என்பதையும் அறிவிவிக்கவும், இதன்போது எழுகின்ற நடைமுறைப் பிரச்சினைகளை கையாளும் விதம் குறித்தும் கலந்துரையடவும் நாம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடனான சந்திப்பொன்றினை 2013 மார்ச் 13ம் திகதி நடாத்தினோம்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள, வீடில்லாத காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறாமல் இருக்கின்ற மக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையொன்றினை நாம் புத்தளம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தினோம்.

2013 மார்ச் 20 நாள் புத்தளத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது

2013 மார்ச் 21ம் நாள் புத்தளம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் பதிவுகளை புத்தளத்தில் கொண்டிருக்கவில்லை என்றும் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளபப்டவேண்டும் என்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டங்கள் குறைவாகவே வழங்கப்பட்டிருந்தது என்ற தகவலும் எமக்கு கிடைக்கப்பெற்றன.

தொடர்ந்து 2013 மார்ச் 21ம் நாள் நீர்கொழும்பிலும் மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டு அவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பிலான விளக்கம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு வெளியில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் மேற்கொண்ட விழிப்புனர்வூட்டும் நிகழ்வுகளுக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் பூரண ஒத்துழைப்பினையும் அனுசரனையினையும் வழங்கியிருந்தது.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கோரல் நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்கட்டமாக கையளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் சுருக்க வடிவம், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் திட்டப்பணிப்பாளர் சீறீகாந்த் முன்னிலையில் இந்திய உயர்ஸ்தானிக உயர் அதிகாரி எஸ்.டீ.மூர்த்தி அவர்களிடம் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் சகோ.கே.நிலாம் கையளித்தார், அருகில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் முக்கியஸ்த்தர்கள் பிரசன்னமாகியிருப்பதையும் காணலாம்

இந்திய வீட்டுத்திட்டத்திற்காக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினூடாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளிட்யிடப்பட்டுள்ளன அதன் பிரகாரம் குறித்த விண்ணப்பங்களை கையளித்த அனைவரும் தமது விண்ணப்பங்களை சரிபார்த்து, தேவையான அனைத்து ஆவணனகளையும் உரிய முறையில் சரிபார்த்துக்கொள்ளும்படி கோரப்படுகின்றார்கள், விண்ணப்பங்களை சரிபார்த்துக் கொள்வதற்கான இறுதித்திகதி மார்ச் 31ம் திகதியாகும், யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் கலீபா அப்துல்காதர் வீதி மஸ்ரஉத்தீன் பாடசாலைக் கட்டிடத்தில் இயக்கப்படும் இந்திய வீட்டுத்திட்ட செயலத்திற்கு நேரடியாக சென்று உங்களது ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றீர்கள், அத்துடன் உங்களை தொடர்புகொள்வட்தற்காக இயக்கத்தில் இருக்கும் தொலைபேசி இலக்கமொன்றினையும் குறிப்பிட்டுச் செல்லும்படியும் வேண்டிக்கொள்கின்றோம். உங்களது ஒத்துழைப்பு முழுமையாக இருக்கின்றபோது மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்தினை வெற்றிகரமாக எம்மால் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்க.

No comments

Powered by Blogger.