எம்மைத் தோற்கடிக்கவோ அச்சுறுத்தவோ முடியாது - ஜனாதிபதி மஹிந்த
இலங்கையின் ஒரு பகுதியாக இருந்த ஈழ நாட்டை, இப்போது தாம் ஒரு கனவாக சுருக்கி விட்டதாக கூறியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. போயகலவில் உள்ள விஜயபா இலகு காலாற்படைப்பிரிவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“2009இற்கு முன்னர் இந்த நாட்டின் ஒரு பகுதி, ஈழப் பிராந்தியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. போர்நிறுத்த உடன்பாடு கூட அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. அனைத்துலக சமூகத்தினால் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை நாம் 2008இல் நாம் முடிவுக்குக் கொண்டு வராது போயிருந்தால், இன்று இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்?
அவர்கள் விரும்பியபடி, அனைத்துலக சமூகத்தின் உத்தரவாதத்துடன், போர்நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தி இந்த நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும். ஈழ நாட்டை நாம் தற்போது ஒரு கனவாக சுருக்கி விட்டோம். அதற்காக அவர்கள் இப்போது எம்மைப் பழிவாங்க நினைக்கிறார்கள்.
தீவிரவாதிகளுக்கு எதிராக மனிதாபிமானப் போரைத் தொடங்க முடிவு செய்தபோது, நடவடிக்கையின் வெற்றியைத் தொடர்ந்து ஏற்படக் கூடிய தாக்கங்கள், அதன் விளைவுகளை நாம் நன்றாகவே அறிந்திருந்தோம். உங்களின் மொழியில் விளக்குவதென்றால், எல்லாப் பக்கங்களிலும் எதிரிக்கு எதிராக எல்லா முனைகளிலும் அதிர்ச்சித் தாக்குதலை நடத்துவது முக்கியம்.
போர் வெற்றியின் பின்னர், சனல்-4 போன்ற தொலைக்காட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளுடன் இதுபோன்ற அதிர்ச்சித் தாக்குதலை எம் மீது நடத்த முனைகின்றன. வடக்கில் மனிதாபிமானப் போரின் போது, மற்றைய நாடுகளைப் போல ஊடகங்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.
ஊடகவியலாளர் ஒருவர் தற்போது டொலருக்கு விலைபோயுள்ளார். அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் என்பது எமக்குத் தெரியும். இந்தத் தாக்குதல்கள் எமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை. அவர்களால் எம்மைத் தோற்கடிக்கவோ அச்சுறுத்தவோ முடியாது.
Post a Comment