Header Ads



துருக்கியுடன் போர்நிறுத்தத்திற்கு தயார் - குர்திஷ்தான் விடுதலை அமைப்பு அறிவிப்பு



துருக்கியுடனான போர் நிறுத்த அறிவிப்பினை குர்து இயக்கமான பி.கே.கே. தலைவர் அப்துல்லா ஒகலான் அறிவித்துள்ளார். 

சிறையிலிருக்கும் அப்துல்லா ஒக்கலானின் இந்த அறிவிப்பினையடுத்து துருக்கியில் 30 வருடமாக நடைபெற்று வந்த பிரச்னை தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த போராட்டத்தின் காரணமாக ஏறத்தாழ 40000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (21.03.2013) குர்து மக்களின் புத்தாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்கலான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதத்தினைக் கைவிட்டு, அரசியலுக்குத் திரும்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு முடிவல்ல என்றும், அரசியலுக்கான புதிய அத்தியாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  1999 முதல் சிறைவாசத்தினை அனுபவித்து வரும் அப்துல்லா ஒகலானுடன், துருக்கியின் ரகசிய உளவுத் துறை அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

இதனை வரவேற்றுள்ள துருக்கியின் உள்துறை அமைச்சர் முஅம்மர் குலர், ” பி.கே.கே.யின் நடைமுறையினை இனிப் பார்க்க வேண்டும் ”  எனத் தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏறத்தாழ 15 மில்லியன் குர்த் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மொழி உரிமைக்காகவும், அரசியலமைப்பில் அதிகளவு அங்கீகாரம் கோரவும் ஒகலான் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

துருக்கியில் உள்ள பி.கே.கே. போராளிகள் வெளியேறுவதற்கும் துருக்கி அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் ஒகலான் தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் உர்துகான் அனுமதி அளித்துள்ளார். வெளியேறும் எந்தப் போராளி மீதும் கைவைக்க மாட்டோம் என அவர் உறுதியளித்துள்ளார். உர்துகான் 2002 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தப் பிறகு, குர்து இன மக்களுக்கு அதிகளவு உரிமைகளை வழங்கி வந்துள்ளார். குர்து மொழியில் தொலைக்காட்சிச் சேவை நடத்த அனுமதியளித்தார்.

அரசிற்கும், பி.கே.கே.விற்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் டெவ்லட் பஹ்சலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பதவியைத் தக்கவைப்பதற்காக அதிபர் உர்துகான், தீவிரவாதிகளிடம் அடிபணிந்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். inneram

No comments

Powered by Blogger.