Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - அரசாங்கமும், சட்டமும் மௌனம் - ஹசன் அலி சாடுகிறார்


(பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆற்றிய உரை)

குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கடந்த மார்ச் மாதம் 05 ஆந் திகதி காலமான வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் அவர்கள்,  தான் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இலட்சிய இடதுசாரித் தலைவர் என்பதை மிகவும் காத்திரமான முறையில் நிரூபித்துக் காட்டிய ஒருவர். அவர் குறித்த இந்த ஒத்திவைப்புப் பிரேரணை மீது உரையாற்றுகையில் அவருடைய மறைவையொட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் இலங்கை முஸ்லிம்களின் சார்பிலும் நான் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆந் திகதி ஒரு சாதாரண உழைப்பாளிக் குடும்பத்தில் பிறந்த ஹுகோ சாவேஸ் அவர்கள் 1999 ஆம் ஆண்டு தொடக்கம் மரணிக்கும் வரை வெனிசுலாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அவரின் பெற்றோர் ஆரம்ப காலத்தில் ஒரு பாடசாலையில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். ஏழு பிள்ளைகளைக் கொண்ட மிகவும் வறுமையான ஒரு குடும்பத்தில் சாவேஸ் அவர்கள் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார். அந்த வகையில் அவர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் நிலைமையை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் அந்த நாட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அவர் கடுமையாக உழைத்தார். 

தனது பதவிக் காலத்தில் அந்த நாட்டில் 48.6 வீதமாக இருந்த வறுமையை எதிர்த்துப் போராடி, 2002 ஆம் ஆண்டில் புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி, 2011 ஆம் ஆண்டு அந்த வறுமைமையை 29.5 வீதமாகக் குறைத்தார். அதேநேரம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் சிறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்நிலையை மாற்றியமைத்தார். இது மிகப் பெரியதொரு சாதனை என்று கருதுப்படுகின்றது. உலகிலுள்ள பொருளாதார நிபுணர்கள் இதனை வெகுவாகப் புகழ்ந்திருக்கின்றார்கள். அதனால்தான் அந்த நாட்டு மக்கள் அவர் மீது அளப்பரிய பற்றுக் கொண்டிருந்தார்கள். 

அந்த வகையிலே சாவேஸ் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் சிறப்பான ஓர் இடதுசாரித் தலைவர் என்பதை  இந்த இடத்திலே ஐயம் திரிபறக் கூறிக் கொள்ளலாம். சாவேஸ் அவர்களின் வாழ்வு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது. ஏனெனில் உலகத் தலைவர்களின் செல்வங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது சாவேஸ் அவர்கள் இறக்கும் வரையிலும் ஓர் ஏழ்மையான நிலைமையிலேயே வாழ்ந்ததாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.  அந்த அளவுக்கு இந்த உலகத்திலே வாழ்கின்ற தலைவர்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 

சாவேஸ் அவர்கள் தலைமைதாங்கிய அந்த வெனிசூலா நாடு ஏற்கனவே வறுமைக் கோட்டின்கீழ் உள்ள நாடாக இருந்தாலும் இன்று அது ஒரு நடுத்தர நாடாக மாறியிருக்கின்றது. அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் மிகவும் உயர்ந்த ஒரு நிலைக்கு அந்த நாட்டைக் கொண்டு வந்திருப்பார் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் வெனிசூலாவும் ஒன்றாகும். அந்தவகையில், நாங்கள் சாவேஸ் அவர்களை இங்கு நனைவுகூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, 2004ஆம் ஆண்டு இந்த நாட்டைத் தாக்கிய சுனாமி அனர்த்தத்தின்போது, வெனிசூலா அரசாங்கம் எமது நாட்டுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றது. 

மருதமுனை நகரில் 178 வீடுகளை அவரது அரசாங்கம் அமைத்துத் தந்துள்ளது. துரதிஷ்டவசமாக இந்த வீடுகள் முற்றாகப் பயனாளிகளுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றன. சவூதி அரசாங்கம் நன்கொடையாக நுரைச்சோலையில்  அமைத்துத்தந்த 500 வீடுகளும் இவ்வாறே முற்றுப்பெற்றிருந்த நிலையிலும்கூட, பயனாளிகளுக்குக் கொடுக்கப்படாமல் இருக்கின்றன. இந்த விடயங்களில் நாங்கள் கவனமெடுக்க வேண்டும். ஏனெனில், எங்களுக்கு நன்கொடை தருகின்ற அரசாங்கங்களைக் கெளரவித்து, நன்றி செலுத்த வேண்டுமென்றால், நாங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்கொடைகளை உரியமுறையில் பயனாளிகளுக்குக் கொடுக்கவேண்டும். நாங்கள் இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற உதவிகளை உரிய முறையில் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யாமல் - பகிர்ந்தளிக்காமல் - இருப்பது என்பது, நாங்கள் எங்களுக்கு இந்த உதவிகளைச் செய்தவர்களை அவமதிப்பது போலாகும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

இவ்விடயம் சம்பந்தமாக நாங்கள் அரசாங்கத்திலுள்ள - இதனுடன் தொடர்புடைய - முக்கிய அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கி, விடயங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், வெனிசூலா நாடானது எமக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே ஆதரவு அளித்ததுபோன்று 07 முஸ்லிம் நாடுகளும் எமக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இப்பொழுது, இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சிறு குழுவினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற அசம்பாவிதங்கள், அநியாயங்களை முஸ்லிம் நாடுகள் நன்றாகத் தெரிந்த நிலையிலும்கூட, அவர்கள் தங்களுடைய மனங்களை கல்லாக்கிக்கொண்டு இந்த நாட்டுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

எனவே, Organization of the Islamic Conference என்ற சர்வதேச அமைப்பு இந்த விடயங்களைத் தெளிவாக எமது நாட்டுக்கு அறிவித்து இருக்கிறது. இந்த நாடுகள் எல்லா விடயங்களையும் புரிந்து கொண்டும்கூட, எங்களுடைய நாட்டுக்கு ஆதரவு அளித்து இருப்பது என்பது ஒரு முக்கியமான செய்தியாகும். மிகவும் நாகரிகமாக அவர்கள் இந்தச் செய்தியை வெளிப்படுத்தி  இருக்கின்றார்கள். இந்த அரசாங்கமும் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற சிறிய குழுவும் இந்தச் செய்தியின் உள்ளாக்கத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கக்கூடிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதை நான் இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கையாகவும் காத்திரமாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில், இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் தனிநாடு கேட்கின்ற ஒரு சமூகமல்ல. 

1990ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட - கிழக்கு மாகாண சபையில் அங்கத்துவம் வகித்தபோது, நான் அச்சபையில் ஓர் உறுப்பினராக இருந்தேன். அன்று முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் அவர்கள் தமிழ் ஈழத் தனி நாட்டினைப் பிரகடனம் செய்தபொழுது, அதை நாங்கள் எதிர்த்து வெளிநடப்புச் செய்தோம். அதன்மூலம் நாங்கள் ஒரே நாடு, ஒற்றை ஆட்சிக்கொள்கை உடையவர்கள் என்பதை பிரகடனப்படுத்தினோம். 

அதுமட்டுமல்ல, இந்த நாட்டிலே முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாராத்தில் ஈடுபட்டு, ஏனைய ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து வழிதெரியாமல் போராடிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அவர்களை அந்த ஆயுதக் கலாசாரத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தனியான, காத்திரமானதொரு அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்கவேண்டுமென்பதற்காகத்தான் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். அதில் பாரிய வெற்றியையும் அவர் அடைந்தார். 

முஸ்லிம் சமூகம் ஆயுதம் தாங்குகின்ற ஒரு சமூகமல்ல; முஸ்லிம் காங்கிரஸினராகிய நாங்கள் ஒருநாளும் அதை அங்கீகரிக்க மாட்டோம். அதேபோன்று, இந்த நாட்டைப் பிரிப்பதற்கும் ஒருநாளும் நாங்கள் உதவி புரிய மாட்டோம். அந்த வகையில், நிம்மதியாக இந்த நாட்டிலே நாங்கள் வாழ விரும்புகின்றோம். எங்களது நிம்மதியைக் கெடுப்பதற்காக இந்த நாட்டிலே இப்பொழுது நடைபெறுகின்ற சில நிகழ்வுகள் பற்றி தெளிவாக - நன்றாக எல்லோருக்கும் தெரிந்திருந்தும்கூட நான் மிகவும் விசனத்துடன் இதைச் சொல்லவேண்டியிருக்கின்றேன். 

இந்த நாட்டிலே அநியாயங்கள், அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றபொழுது அரசாங்கம் கண்மூடி, மெளனமாக இருக்க முடியாது. ஏனெனில், இந்த நாட்டிலே ஒரு சட்டம் இருக்கின்றது. Socialist Republic of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற நாடு.  அரசியல் யாப்பிலே இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனியாக உரிமைகள் இருக்கின்றன. 

எனவே, அந்த உரிமைகளுக்குப் பங்கமேற்படுகின்றவாறு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற அசம்பாவிதங்களுக்குத் துணைபோகின்றவர்களுக்கு இந்த நாட்டிலுள்ள சட்டத்தின்படி சரியான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்; உரிய விசாரணைகள் முடுக்கி விடப்பட வேண்டுமென்பதை நான் இந்த இடத்திலே வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றனவென்பதை நான் உங்களிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். 

இப்பொழுது முஸ்லிம் பிரதேசங்கள் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றன. எங்களுடைய உணவு, உடை, கலாசாரம், மார்க்கம் என எல்லாவற்றிலும் இன்று தலையீடு இருந்துகொண்டிருக்கின்றது. நான் நேற்று ஒரு பத்திரிகையிலே பார்த்தேன். பிரான்ஸ் நாட்டிலே ஒரு பெண் பிள்ளையின் 'ஹிஜாப்' இனை இழுத்ததற்காக அந்த நீதிமன்றம் ஒருவருக்கு தண்டனை விதித்திருக்கிறது. ஆனால், இந்த நாட்டிலே அதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. ஆனால், சட்டம் மெளனமாக இருக்கின்றது. அவற்றைத் தடுப்பது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. எனவே, இனிமேலும் தாமதிக்காது இந்த அரசாங்கம் தன்னுடைய மெளனத்தைக் கலைக்க வேண்டுமென்று நான் மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயத்திலே அரசாங்கம் என்ன கொள்கையுடன் இருக்கின்றதென்பதை தெட்டத்தெளிவாக இந்த நாட்டு மக்களுக்கும் குறிப்பாக, முஸ்லிம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டு விடை பெறுகின்றேன்.


11 comments:

  1. நல்ல ஆரம்பம் செயலாளரினாலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் அமைச்சர்மார்களே பயப்பட வேண்டாம் பொதுமக்களாகிய நாங்கள் இருக்கிறோம் இனி பாராளுமன்றத்தில் முழங்கட்டும் உங்கள் குரல்கள்.

    ReplyDelete
  2. அல்ல்ஹம்துல்லிலாஹ் மூடப்பட்ட வாய்கள் UN வாக்கெடுப்புக்கு பின்னாவது திறந்ததுக்கு நன்றி பிரான்ஸ் நாட்டின் சட்டத்தை சுட்டி காடியடுகு மீண்டும் நன்றி sir இதை கௌரவ நீதி அமைச்சருக்கு சொல்ல வில்லையா நீதியை சரியாக செய்ய கூட முடியாத நீதி அமைச்சர் ஏங்க அந்த பதவில இருக்கனும் மக்களுக்கு ஒன்றுக்கும் இல்லாத JP post வழங்கவா அவரிடம் வாயை திறக்க சொல்லுங்க மௌன விரதம் முஸ்லிம் களுக்கு இல்லையே

    ReplyDelete
  3. Alhamdulillah ethir parkirom ennum ethu pondra miga mukkiya muslim manthiri margalin kuralgaly

    ReplyDelete
  4. Allah may grant you some more. Allah Akbar.

    ReplyDelete
  5. Good speach, good start, Masha Allah... do not stop with this and the Almighty is always with us and he will shower his guidance to you and Muslim Ummah... come on all other leaders and join with him.

    ReplyDelete
  6. அடிக்கடி பல தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் . ஆம் நிந்தவூரில் வைத்து அது இருக்கட்டும். ஏன் இதுவரை தலைவருக்கே அருகதை அற்ற மனிதன் சனாதிபதிக்கு பின்னால் ஒழிந்து தள்ளாடும் அந்த புனிதமான கட்சிக்கே கேவலமான தலைவரும் மற்றும் அடங்க்கா பிடாரிகளும் நாங்கள் போட்ட பிச்சை வாக்குகளை திருப்பி தர முடியாவிட்டாலும் எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக உங்கள் உறுப்பினர் பதவி அன்று என்று சேனா நமது இஸ்லாத்தில் கை வைத்ததோ அன்று குடும்பத்துடன் வெளி ஏறி வீட்டுக்கு பெட்டி கட்டி இருந்தால் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அனைத்தும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டு இருக்கும். அதுதான் நடக்கவில்லை . உங்களுக்கு நன்றாக தெரியும் அன்று மறைந்த தலைவர் ஒரு வார்த்தை நமக்கு எதிரி இருக்ககூடாது என்று சொல்லி இருந்தால் இன்று பல கட்சிகள் முளைத்து இருக்காது . உங்கள் பதவிக்கு நீங்கள் ஆசைப்பட்டால் தொடருங்கள் உங்கள் பயணத்தை ..............?????????????

    ReplyDelete
  7. ஹசன் அலி சேர் அவர்களே நீங்கள் இருக்கின்ற அரசாங்கமே இதை செய்வதாகவே பலரும் கதைக்கிறார்கள் அப்படியானால் ஏன் இதை மந்திரி சபையில் உங்கள் தலைவர் பேசி முடிவு காண முடியாது ? உங்களை நம்பி மக்கள் இருக்கிறார்கள் இல்லை இல்லை என்பதில் இன்று நீங்களும் உங்கள் தலைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  8. neengal aarampithadu muslimkalukku oru mudi
    wu warum warai mulankattum allahu akbar

    ReplyDelete
  9. Please REPEAT your voice until break their silence and get an answer. Jasak Allah hairan.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும், இதுவரை உங்களைச் சாடி விமர்சித்தற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

    எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் பேச்சை வரவேற்கிறோம்.

    இது சமூக அக்கறை என்றால் இதை பாராளுமன்றத்தில் வரவேற்க அல்லது உம்மோடு சேர்ந்து குரல் கொடுக்க மறைந்த தலைவரின் பாசறையில் வளர்ந்தோமென சொல்லித்திரியும் ஒரு காக்கா, ஒரு குருவி கூட இல்லையா ?

    செயலாளரே பாராளுமன்றத்தில் உமது தலைவர், உமது தவிசாளர், உமது சக உறுப்பினர்கள், ஸ்ரீ.ல.மு.கா வில்லிருந்து பிரிந்து தலைவர்களான அமைச்சர்கள் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்ன சிலைகளாக மாறிவிட்டார்களா ? அல்லது பொது பல சேனாவின் அதி உயர் பீட உறுப்பினர்களா ? அல்லது ஹெல உறுமயவின் பிராந்திய அமைப்பாளர்களா?

    இனியாவது ரோசம், சூடு, சொரணை வராதா? நீங்கள் எல்லோரும் மரணித்தால், உங்களை தூக்கிச் செல்ல எம்மைபோன்ற பாமரனும், இழிச்சவாயனும் தான் வருவான் ஆனால் நீங்கள் ஆதரிக்கும் மஹிந்த அண்ட் கோ, பொது பல சேனா அல்லது ஹெல உறுமய கை கொட்டிச் சிரிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

    ReplyDelete
  11. mikka makichchi alhamdulillah, neegkal ippadi pesiyatharkku thalaivar enne sonnar. aver onrum pesamel iruppathan marmam enne , egkalukku avamanamake irukkirathu.

    ReplyDelete

Powered by Blogger.