சவுதியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சர்வதேச சமூக பாதுகாப்புத் திட்டம்
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களுக்கு 15-03-2013 இன்று முதல் சர்வதேச சமூகப் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. சவுதி அரேபியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இன்று முதல் சர்வதேச சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சர்வதேச சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சவுதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் இலங்கையர்களுக்கு அங்குள்ள நிறுவனமொன்றின் மூலம் காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
புதிதாக சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காப்புறுதி வழங்கப்படும் என பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்பவர்களைப் பாதுகாப்பதற்கும், பெரும் தொகை பணத்தை செலவிட்டு அவர்களை வேலைக்கு அழைப்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் சர்வதேச சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் நிறைவேற்று அதிகாரி மொஹமட் அல்காரானி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார ஆகியோர் கையொப்பமிட்டனர்.
Post a Comment