Header Ads



அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஈரானும், சிரியாவும் எதிர்ப்பு

சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டங்களை கிளர்ச்சிக் குழுக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கு 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உதவிகளை உயிரைக்கொல்லும் ஆயுதங்களாக வழங்காமல், கிளர்ச்சிக் குழுக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

தெஹரானில் நேற்று சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாலித் அல் மௌலெம் மற்றும் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அலி அக்பர் சலேஹி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது:-

சிரியா நாட்டு மக்களைக் கொலை செய்யும் கிளர்ச்சிக் குழுவினரை, எப்படி அமெரிக்கா ஆதரிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. அரசியல் தீர்வை விரும்புபவர்கள் இதுபோல் சிரியா மக்களை தண்டிக்கமாட்டார்கள்.

சிரியாவின் தற்போதைய நிலையை கண்டு நீங்கள் வருந்தினால்... எதிர் தரப்பினரிடம் பேச்சு வார்த்தைகள் நடத்த நிர்பந்திக்க வேண்டும். உயிரிழப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஏன் எதிர் தரப்பினரின் வன்முறை நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

சிரியாவின் அசாத் தலைமையிலான அரசை ஈரானும் ரஷ்யாவும் ஆதரிப்பதும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கிளர்ச்சிக் குழுக்களை ஆதரிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.