Header Ads



அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்வி செயற்பாடுகள் மாகாண மட்டத்தில் முன்னணியில்


(அனாசமி)

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள் முன்னிலையில்  வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இருநாள் செயலமர்வொன்று கடந்தவாரம் கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ. உதயகுமார் ஏற்பாட்டில் மாகாணத்தின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் செல்வி  அ. கனகசூரியம் தலைமையில் இடம்பெற்ற போது மேற்படி விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள மாகாணக் கல்வித்தினைக்களத்தின் கேட்போர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று, திருகோணமலை, மூதூர், கிண்ணியா, கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி அலுவலங்களின் ஆரம்பக்கல்விக்கான அதிகாரிகள் கலந்து கொண்டபோது கடந்தாண்டில் அனைத்து விடயங்களிலும் அக்கரைப்பற்று வலயம் முன்னணியில் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பேறுபேற்று தரப்படுத்தலில் அதிகூடிய அடைவினையும், 70க்கு மேல் புள்ளிகள் பெற்ற வரிசையிலும் இவ்வலயம் சிறப்பான அடைவினைப் பெற்றுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாம் அவர்களும் கலந்து கொண்டு எதிர்காலத்தில் இம்மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆரம்பக்கல்வி சம்பந்தமான செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.

அக்ரைப்பற்று வலயம் கடந்தாண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 333 மாணவர்கள் திறமைச் சித்திபெற்று தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் 70க்கு மேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் 79.20 வீதமாக காணப்பட்டனர். இவ்வாண்டிலும் 70புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெறுகின்ற மாணவர்களை அதிகரிக்கின்;ற நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பக்கல்வி மாணவர்களின் மேம்படுத்தலுக்கான திட்டங்கள் ஊடாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் தொடராக மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.ஏ. அபூதாஹிர் மற்றும் ஆசிரிய ஆலோசர் எஸ்.எல். மன்சூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.