Header Ads



நாவிதன்வெளி பிரதேச சபையின் கவனத்திற்கு (படங்கள்)



(எம்.எம்.ஜபீர்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள சொறிக்கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அன்டனி வீதி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து செய்ய முடியாது குன்றும், குழியுமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பாதையானது சொறிக்கல்முனை-03 பிரிவில் வாழும் மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக காணப்படுகின்றது. இவ்வீதி சிதைவடைந்துள்ளதன் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளும் கிராம மக்களும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியின் அவலநிலை தொடர்பாக பிரதேச மக்கள் அப்பிரதேசத்திலுள்ள பிரதேச சபை உறுப்பினரிடம் விடுத்த  வேண்டுகோளின் பேரில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின்  மாதாந்த அமர்வில் சொறிக்கல்முனை பிரதேச மக்களினதும், விவசாயிகளினதும் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வீதியை துரிதமாக திருத்தித்தருமாறு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின்  கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 

இதனையடுத்து இவ்வீதியை துரிதமாக திருத்தியமைப்பதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் இப்பிரதேசத்திலிருந்து வேண்டுகோள் விடுத்த மக்களிடம் நாவிதன்வெளி பிரதேச சபையினால் இவ்வீதி துரிதமாக திருத்தியமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.சுதர்சன் மக்களிடம் தெரிவித்துள்ளார். 

எனினும், இத்தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு  இரு  மாதங்கள்   கடந்து சென்றுள்ள போதிலும்  இவ்வீதியை திருததியமைப்பதற்குரிய எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் நாவிதன்வெளி பிரதேச சபை மேற்கொள்ளவில்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.