இம்ரான் கானை எதிர்த்து நடிகை போட்டி
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான், தெஹ்ரிக்-இ-இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். வரும் மே மாதம் 11-ம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷரீப்பை எதிர்த்து இம்ரான் கான் போட்டியிட வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர்.
ஆனால், லாகூரில் உள்ள தொகுதி எண் 126-ல் போட்டியிட இம்ரான் கான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதி தனக்கு சாதகமான தொகுதி என்பதால், நவாஸ் ஷரீப்பின் சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்திக்க இம்ரான் கான் விரும்பவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இம்ரான் கானை எதிர்த்து நடிகை மீரா போட்டியிடுவார் என்று அவரது தாயார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த மீராவின் தாயார் ஜொஹ்ரா, 'தொகுதி எண் 126-ல் இம்ரான்கானை எதிர்த்து போட்டியிட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைமையிடம் மீரா சீட் கேட்டுள்ளார்.
அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் இரு பிரபலங்களுக்கும் இடையே சுவாரஸ்யமான போட்டி நிலவும்' என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரபல டி.வி. மற்றும் சினிமா நடிகையான மீரா, பல உருது மொழி படங்களிலும் 'நாசர்', 'கசக்', 'பாஞ்ச் கண்டே மே பாஞ்ச் க்ரோர்' ஆகிய இந்தி படங்களிலும் சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.
Post a Comment