Header Ads



இனவாத சக்திகளுக்கு முன்னால்..!


மார்ச் 2000, அல்ஹஸனாத் இதழில் வெளிவந்த "இனவாத சக்திகளுக்கு முன்னால் முஸ்லிம் சமூகம்" என்ற கட்டுரையிலிருந்து தொகுத்தெழுதியது
நன்றி அல்ஹசனாத், இணையம்

(By மலேசிய சொந்தம்)

உலகம் ஒழுக்கரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் யுத்தம் காரணமாகவும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் சில மதகுருமார்களும், அரசியல்வாதிகளும், இனவாதிகளும் தங்களது சுயநலத்திற்காக குரோதம். பொறாமை காரணமாக சில தீய சக்திகளுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களினூடாகவும், இணையம் போன்ற தொடர்பு சாதனங்களினூடாகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்தெதிராக இனவெறிளையும் துவேஷத்தையும் வளர்க்கின்ற வேலையை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளார்கள். 

இக்கட்டான இச்சமயத்தில் இனவாதத்திற்குத் துணைபோகத் கூடிய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் தவிர்த்துக்கொள்ளுவது மட்டுமல்லாது, இத்தகைய இனவெறியர்களின் விஷக் கருத்துக்களை அகற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு இனங்களுக்கிடையேயான விரிசல் நிலையையும் குரோத மனப்பான்மையையும் இல்லாதொழித்து சமூகங்களுக்கிடையே அன்பையும் இனக்கத்தையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த அனைத்து வழிகளிலும் உழைப்பது தவிர்க்க முடியாத கடமையாகிறது. அவற்றை சற்று சீர்த்துக்கிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

முஸ்லிம்கள் ஒரு கொள்கையை ஏற்ற சமூகத்தினர். எப்போதும் நடுநிலையாக நடந்தகொள்ள வேண்டியது அவசியமாகும். நமது சிந்தனை, செயற்பாடுகளில் நடுநிலை பேண வேண்டும் என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுகிறது. 

....உங்களை நடுநிலை சமூதாயமாக்கினோம். (அல்குர்ஆன் 2:143) 

இனவாத கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படும் இச்சூழலில் நாமும் சிந்தனைக் குழப்பத்தில் சிக்கி நிதானமிழத்தல் அறிவுடைமையாகாது. எப்போதும் தூரநோக்குடனும், சிந்தனைத் தெளிவுடனும் பிரச்சினைகளை அணுகுதல் அவசியம். இஸ்லாத்தின் வழிகாட்டலில் நிதானமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையென்ற வகையில் நாம் தவறு செய்கின்ற அல்லது நமது சிந்தனைக்கு வராத சில விஷயங்களை அலசலாம். 

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்). 

ஆயினும் இந்த நபிமொழிக் கருத்துக்கு மாற்றமாக, தனது இனத்தின் மீதான பற்று இனவெறியாக மாறும்போது கண்டிப்பாக அது தடுக்கப்பட வேண்டும். இனவெறி என்பது தானும் தனது சமூகமும் மட்டும் வாழ, ஏனைய சமூகங்களை இல்லாதொழிக்கவும், அவற்றுக்குக் குழிபறிக்கவும் முற்படும் நிலைப்பாடே!. 

இனப்பிரச்சினை காரணமாக எண்ணற்ற கலவரங்கள் நடந்துமுடிந்துவிட்டன. இனி நடப்பதற்கு நாட்களும் குறிக்கப்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் நாமும் நம் பங்குக்கு சிக்கலை உண்டாக்காமல் எச்சரிக்கையாகவும், சிந்தனைத் தெளிவோடும், தூரநோக்கோடும் முஸ்லிம் என்ற வகையில் நல்ல முன்மாதிரியாகவும் செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். இதற்காக சில விஷயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். 

1. ஒவ்வொருவரும் வேற்று மதத்தவர் உட்பட, அனைவரோடும் நீதமாக நடக்க வேண்டும். எத்தரப்பில் சத்தியம், உண்மை நீதி இருக்கிறதோ அத்தரப்பிற்கு குரல் கொடுகப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். மாற்றமாக, தான் சார்ந்துள்ள சமூகம் அசத்தியத்திலும், அநீதியிலும், அத்துமீறலிலும் இருக்கும் பட்சத்திலும் என் சமூகத்தின் பக்கம்தான் இருப்பேன் என்ற எண்ணம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனைப் பின்வரும் அல்குர்ஆன வசனம் எடுத்துக் காட்டுகிறது. 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்!. ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!. அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.(அல்குர்ஆன் 5:8) 

மேலும் அநீதி இழைப்பவர் முஸ்லிமல்லாதவராக இருப்பினும், அவரது பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்குமிடையே எந்தவித திரையும் கிடையாது. ஆதலால் முஸ்லிம் என்பதனால அநீதி இழைக்கும் போது, அது அனுமதிக்கப்பட்டது எனும் நினைப்பில் இருத்தலாகாது. கண்டிப்பாக அநீதி இழைக்கப்பட்டவனின் பக்கம் அல்லாஹ் இருப்பதோடு. அநீதி இழைத்தவர்களுக்கு எதிராகவும் இருப்பான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 

2. நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களது சொல்லாலும் நடத்தைகளாலும் இஸ்லாத்திற்கு நற்சான்று பகர வேண்டும். நமது வியாபாரம், கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக விவகாரங்களிலும் சிறந்த முன்மாதிரியாக வாழ கடமைப்பட்டுள்ளோம். 

3. நன்மையான விடயங்களுக்கு ஒத்துழைப்பதுடன், தீமையான, அநீதியான விடயங்களுக்கு எதிராகவும் செயலாற்ற வேண்டும். மாற்று மதத்தவர் நம்மீது வரம்புமீறி முறைகேடாக நடந்தாலும் நாம் அவர்களோடு முறையாக நடந்துகொள்ள வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நிலைபாடு ஆகும். ஏனெனில், தீமையை தீமையால் இல்லாதொழிக்க முடியாது. தீமையை நன்மையாலும், நன்மையான வழிமுறைகளாலுமே திருத்தவும், இல்லாதொழிக்கவும் முடியும் என்பதையே இஸ்லாம் போதிக்கிறது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது: 

புனித பள்ளியை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!. அல்லாஹ்வை அஞ்சுங்கள்!. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2) 

ஒருவர் முஸ்லிமாக இருப்பினும்கூட, நன்மையான விடயங்களில் மாத்திரமே உதவ வேண்டும். தீமைகளுக்குத் துணைபோகக்கூடாது. தனது இனத்திற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அநீதியிலும், அத்துமீறலிலும் தீமையான விஷயங்களிலும் துணை போவதே இனவாதமாகும் என்பதை ஏற்கனவே ஹதீஸ் ஒன்றின் மூலம் பார்த்தோம். 

4. மாற்று மதத்தவராயினும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. இதற்கு நபி முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்விலே நடந்த ஒரு சம்பவம் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது. 

ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபிகள் வியப்பாகக் கேட்கவே, "இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?" எனக் கூறினார்கள். 

அதேபோல, கலீபா உமர்(ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸை (ஃபலஸ்தீனில் உள்ள புனித பள்ளி) மீட்டபோது அதன் சாவியை ஒப்படைப்பதற்கென பாதிரிமாரின் அழைப்பிற்கிணங்க செல்லும் வழியில் தொழுகைக்கு நேரமானது. எதிர்ப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தில் தொழுமாறு கலீபாவிடம் வேண்டப்பட்ட போது அதனை கலீபா மறுத்துவிட்டார்கள். மற்றுமொரு முறை உமர்(ரலி) அவர்கள், வீடு வீடாக யாசகம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு யூத கிழவரைக் கண்டு அவருக்க இறக்கும்வரை பைத்துல்மாலிருந்து (பொதுக் கருவூலம்) உதவி நிதி வழங்கிட ஏற்பாடு செய்தார்கள். 

5. நாட்டுப் பற்றுள்ளவர்களாகவும், அதன் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுபவர்களாக வாழ்வது காலத்தின் தேவையாகும். இது இஸ்லாத்தின் அடிப்படையில், இஸ்லாத்திற்கு சான்று பகர்வதாக அமைய வேண்டும். மாறாக பயனற்றவர்களாக ஏனையோருக்கு தொல்லை தருபவர்களாக வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை. 

மேற்கூறப்பட்ட மிக முக்கியமான விஷயங்களோடு கால, சூழ்நிலை, சமூக மாற்றங்களை கவனத்திற்கொண்டு அவதானமாக நடந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அத்துடன் நம்மிடத்தில் காணப்படுகின்ற சில விஷயங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

1. தீமையான சமூக விரோதச் செயல்களுக்கு முஸ்லிம்கள் துணைபோகாதிருக்க வேண்டும். போதைவஸ்து வியாபாரம், வட்டி, மதுபான கடைகள் இவைகளை முஸ்லிம்களே நடத்துவது கவலைக்குறியது. 

2. ஆடம்பர, வீண்விரயங்களை திருமணம் போன்ற வைபவங்களில் முற்றாக தவிர்த்தல், வீடு வாகனங்கள் போன்றவற்றை தேவைக்கேற்ற அளவு மட்டும் அமைத்துக் கொள்ளல். 

3. வறுமை, பிணி போன்ற கஷ்டங்களினால் அல்லலுறுவோர் எந்த மதத்தவராயினும் அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுவதை இஸ்லாம் மிகவும் வரவேற்கிறது. 

4. தவறான விஷயங்களுக்கு பிற மத்தவர்களைக் காட்டி, அவற்றைத் திருத்த முனைவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். 

5. பிற சமூகத்தவரது மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களது மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மார்க்க விஷயமாயின் சமூகச் சூழலைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாகச் செயற்பட வேண்டும். 

6. இனப்பற்றை வெளிப்படுத்துதற்காக பட்டாசு கொளுத்துதல், பந்தயம் கட்டுதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். (உதாரணம் கிரிகெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பட்டாசு வெடிப்பது). 

அனைத்து விஷயங்களிலும் நடுநிலையான சிந்தனையும், செயற்பாடும் மிகமிக அவசியமானது. நடுநிலையாக அமைகின்ற போது ஒரு தீமையை அதன் வரையறைக்குள் வைத்து நோக்க முடிகின்றது. ஒரு சமூகத்தில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலை, முழு சமூகத்தின்மீதும் சாட்டி விடுகின்ற நிலையை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஏனெனில் நிரபராதிகளும் குற்றவாளிகளாக்கப்படும் அநியாயத்தைச் செய்துவிடும் நிலைமை ஏற்படுகிறது. 

ஆகையால் இனவாதிகளுக்குள் சிலரே இந்த சமூகத்திற்கெதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முயலவேண்டும். இதனை எதிர்க்கின்ற சமூகத்தின் மேல் நடுநிலையான மதகுருமார், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை, எழுத்துமூலம் விவாதங்கள், கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்க மாநாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும். 

1 comment:

  1. இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டனும் என்று நினைக்கிறேன், குர்ஆன் வசனங்களை பாதியாக்கி எழுதுவதை அல்ஹசனாத் விட வேண்டும். 2.143 மற்றும் 5.2 இந்த வசனங்களின் முழுவதையும் எழுதாது பாதியாக்கியமை கடந்த காலங்களில் நடந்து முடிந்து விட்டதாக இருக்கட்டும் இனி வரும் காலங்களிலாவது உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள் அல்லாஹ் எங்களுக்கு உதவுவானாக.

    ReplyDelete

Powered by Blogger.