Header Ads



சில முடிவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஜீரணிக்க முடியாமல் போகலாம் - ரிஸ்வி முப்தி


(இ. அம்மார்)

சில முடிவுகள் வந்து நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அந்த நிர்ப்பந்தம் நாட்டின் சமாதானத்தையும் சக வாழ்வையும் கருதியே  பார்க்க வேண்டி உள்ளன. அது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சில வகையில் ஜீரணிக்க முடியாமை போகலாம். ஆனால் மறுபக்கத்தில் இந் நாட்டிற்கு முஸ்லிம்கள் செய்த தியாகமாக மாறலாம். ஆகவே எமது முடிவுகள் தேசிய மட்டத்தில் இன ஐக்கியத்தை நடைமுறைப்படுத்துவதும் நாட்டின் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதுமேயாகும் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் ஹலால் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை சம்மந்தமாக விளக்கமளிக்கும் நிகழ்வு கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் பஸ்லுல் தலைமையில் நேற்று 15-03-2013 மஃரிப் தொழுகை முதல் நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

ஜம்மியதுல் உலமாவுக்கும் இலங்கை முஸ்லிம்களைக் பொறுத்தவரையிலும் ஹலால் ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல. இது சேவை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றோமே ஒழிய இலாப நோக்கமாக அல்ல.  அதற்காக அறவிடப்படுகின்ற பணம் சேவை கட்டணமாகவே அறவிடப்பட்டது. இந்த சேவைப் பணத்தின் கட்டணத்தைக் கூட  நாட்டின் அமைதிக்காகவும் சக வாழ்வுக்காகவும் முஸ்லிம் சமூகம் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும். இதன் ஊடாக முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஹலால் பணத்தை வைத்து வெளிநாட்டுச் சகதிகளுக்கு நிதி உதவி வழங்குதல், இலங்கையில் பள்ளிகளைக் கட்டுவதற்கு உதவுதல் போன்ற குற்றச் சாட்டுகளெல்லாம் போலியானவை என்று நிரூபணமாகின்றது. இந்த முடிவை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஜீரணிக்க முடியாமல் போய் உள்ளன.

நாங்கள் விவாதத்திற்கு கலந்து கொள்ள விரும்பமில்லை. ஏனென்றால் முஸ்லிம் விரோத சக்திகளின் நோக்கமே விவாதம் ஒன்றின் மூலம் அவர்கள் தோல்வி அடைகின்ற போது அதனூடாக பெரும்பான்மை சமூகத்தின் அனுதாபத்தின் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சக்தியை அதிகரித்துச் செய்து வன்முறையைத் தூண்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவர். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. உதாரணமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொண்ட வழக்குகளில் எதிலுமே முஸ்லிம் சமூகம் தோற்றதில்லை. 1915 ஆம் ஆம் ஆண்டு வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான கலகம் வெடித்தன. விவாதங்களிலும் முஸ்லிம் சமூகம் வெற்றி பெற்றே உள்ளன. விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அஷ்ரப் வெற்றி பெற்றாலும் அவர் எம்மோடு இன்று இல்லை.

எனவே விவாதத்தின் முடிவு எமது வெற்றியாக இருந்தாலும் பெரும்பான்மை சமூகம் அதனை ஜீரணிக்குமா என்று அறிந்து நாம் புத்தி கூர்மையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு இக்கெட்டான காலகட்டத்தில் உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.