மனித சமூகத்தின் இயல்பு மார்க்கம் இஸ்லாம்
(A.J.M மக்தூம் இஹ்ஸானி)
1. இறைவன் இப்பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் மனிதர்கள் மற்றும் ஜின்னினங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்துள்ளான்.
2. அந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றும் பொருட்டு தேவையான எல்லா வளங்களையும், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.
3. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். (அல் குர்ஆன் 51: 56, 57,58)
4. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; (அல் குர்ஆன் 2:29)
5. இப்படியாக படைக்கப் பட்ட மனிதனின் உள்ளத்திலும் இறை நம்பிக்கையையும், இறை நேசத்தையும் இறைவன் இயல்பாகவே விதைத்துள்ளான்.
6. மனிதர்கள் அவர்கள் படைக்கப் பட்டுள்ள இயல்பு நிலையில் அப்படியே விடப்பட்டார்கள் என்றால் இறைவனை இயல்பாகவே நம்பிக்கைக் கொள்வார்கள், அவனுக்கு அடி பணிவார்கள், அவனை நேசிப்பார்கள், அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்க மாட்டார்கள்.
7. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல் குர்ஆன் 30:30,31)
8. ஒவ்வொரு குழந்தைகளும் அதன் இயல்பு மார்க்கத்திலேயே பிறக்கின்றன; அக்குழந்தைகளை திசைத் திருப்பி சிலை வணங்கிகளாக, இணைவைப்பாளர்களாக மாற்றுகின்றவர்கள் அவர்களை சூழவுள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே.
9. மனிதர்கள் இவ்வுலகில் படைக்கப் பட்டபோது ஆரம்பத்தில் அனைவரும் தூய மார்கத்திலேயே இருந்தனர். அனைவரும் ஓரிறைக் கொள்கையையே கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனினும் காலவோட்டத்தில் பிளவு பட்டுக் கொண்டு வெவ்வேறு கொள்கைகளை கடைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதன்போதே சரியான மார்கத்தை தெளிவு படுத்தும் பொருட்டு இறைவன் இவ்வுலகில் தனது தூதர்களை இறக்கிவைத்தான். அப்படி அனுப்பப் பட்டவர்களில் முதல் தூதரே நூஹ் (அலை) அவர்கள்.
10. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். (அல் குர்ஆன் 10:19)
11. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல் குர்ஆன் 2:213)
Post a Comment