Header Ads



முஸ்லிம், கிறிஸ்த்தவ நாடுகளிடையே மோதல்



(Tn) பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் ஐ.நா. பிரகடனம் பெரும் இழுபறிக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மேற்கு நாடுகள் தமது கோரிக்கையை வாபஸ் பெற்றதை அடுத்தே முஸ்லிம் நாடுகள் தமது ஆதரவை வெளியிட்டன. 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஒழுக்க விதியை கொண்ட ஐ.நா. பிரகடனத்தை நிறைவேற்றுவதில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் கடும் பிளவு ஏற்பட்டது. இதில் லிபியா, ஈரான், சூடான் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் இந்த பிரகடனத்தை முடக்குவதாக விடுத்த எச்சரிக்கையை கைவிட்டு இறுதி நேரத்தில் உடன்பாட்டுக்கு வந்தன. 

இதன்படி பாரம்பரியம், சம்பிரதாயம் மற்றும் மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது எனும் மேற்படி பிரகடனத்தின் ஆரம்ப வசனங்கள் உள்ளடக்கப்பட்டன. ஆனால் மேற்கு நாடுகள் குறிப்பாக ஸ்கன்டினேவிய நாடுகள் இந்த பிரகடனத்தில் ஒருபாலின உரிமை மற்றும் பாலியல் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தன. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் இருவாரம் இழுபறி நீடித்தது. எனினும் மேற்கு நாடுகள் தமது கோரிக்கையை இறுதியில் வாபஸ் பெற்றுக் கொண்டன. 

இந்நிலையில் இந்த பிரகடனம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் கூடிய சுமார் 6000 பெண் உரிமை தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. அத்துடன் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என ஐ.நா. பெண்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்சல் பக்லட் அறிவித்தார். 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பக்லட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எனினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு சர்வதேச அளவில் கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற ஒரு சில நாடுகளின் நிலைப்பாட்டை ஈரான், வத்திக்கான், ரஷ்யா மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் ‘புனிதமற்ற கூட்டணி’ என விமர்சித்தது. இதில் கருக் கலைப்பு உரிமை மற்றும் கற்பழிப்பு தொடர்பிலும் கணவர் மற்றும் துணைவர்களின் நடத்தை தொடர்பிலும் மேற்படி ஒருசில நாடுகள் கோரிக்கை விடுத்தன. 

ஆனால் இந்த ஐ.நா. பிரகடனத்திற்கு எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இஸ்லாத்திற்கு முரணானது என கடும் எதிர்ப்பை வெளியிட்டது. எனினும் எகிப்து அரசு இந்த தீர்மானத்திற்கு ஆதரவை வெளியிட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் ஐ.நா. பிரகடனம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.