சர்வதேச ஆதரவை இலங்கை சிதறவிட்டுள்ளது - இராஜதந்திரி தயான் ஜயத்திலக்க
சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் சிதறவிட்டிருப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்று அவர் பிபிசி யிடம் தெரிவித்தார்.
2009-ம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் எதனையும் சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், போர்க்காலச் செயற்பாடுகளுக்கான பொறுப்பு சுமத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தான் கோரப்பட்டிருக்கிறது என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதியினர் திருப்தியடைவார்கள் என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவித்தார்.
Post a Comment