ஐக்கிய அரபு இராச்சியத்தில் 94 இஸ்லாமியவாதிகள் மீது வழக்கு ஆரம்பம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கைது செய்யப்பட்ட 94 இஸ்லாமிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டோரில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்ட ரகசிய கட்டமைப்பொன்றை உருவாக்கி அரசுக்கு எதிராக செயற்பட்டதாக சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தற்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் வழக்கு விசாரணை பெரும் குறைபாடுகளை கொண்டது என்றும் நீதி கேலிக்குள்ளாக்கப் பட்டுவருவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏழு மாநிலங்களை ஒன்றிணைத்து அரச குடும்பத்தால் ஆளப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அரசியல் கட்சிகளை அமைக்கவோ ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரபு நாடுகளில் 2011 ஆம்ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட அண்டிய வளைகுடா நாடுகளான பஹ்ரைன், யெமன், ஓமான் மற்றும் சவூதி அரேபியாவிலும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதில் மேற்படி இஸ்லாமிய செயற்பாட்டாளர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். சிவில் சமூக செயற்பாட்டாளர்களான இவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலா னோர் இஸ்லாமிய குழுவான அல் இஸ்லாஹ்வுடன் தொடர்புபட்டவர்களாவர். இந்த அமைப்பு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்டது என சுமத்தப்படும் குற்றச்சாட்டை அல் இஸ்லாஹ் மறுத்துள்ளது.
இவர்கள் ஊடகம் மற்றும் சமூக இணையதளங்களை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசு மற்றும் ஆளும் அரச குடும்பத்திற்கு எதிராக மக்களை திசை திருப்புவதாக அரச தரப்பில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை வெட்கக்கேடான செயல் முறை என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டோருக்கு கடந்த இரு வாரம் வரையான காலப்பகுதியில் வழக்கறிஞர்களை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணத்தை மற்றும் ஆதாரங்களை பார்வையிடவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த 94 பேர் மீதான வழக்கு விசாரணை நாட்டின் அதி உயர் நீதி மன்றத்தினாலேயே நடத்தப்படுகிறது. எனவே நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை மேன்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. thnaharan
Post a Comment