15 வயதிற்கு கீழ்பட்டவர்கள் இனிமேல் மரதன் ஓடமுடியாது - புதிய சட்டம் அமுல்
பதினைந்து வயதுக்குக் குறைவான மாணவர்களை மரதன் போட்டிகளிலோ கிராமங்களினூடாக ஓடும் போட்டிகளிலோ ஈடுபடுத்துவதை தடை செய்துள்ளதாக விளையாட்டு மருத்துவ பிரிவு தெரிவித்தது.
1500 மீற்றரை விட கூடுதல் தூரஓட்டப் போட்டிகளில் மாணவர்களை சேர்ப்பதானால் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் விளையாட்டு மருத்துவப் பிரிவு பணிப்பாளர் நாயகம் டாக்டர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்ற சில மாணவர்கள் திடீரென மரணமான சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. இது குறித்து கூடுதல் கவனம் செலுத்திய ஜனாதிபதி, விளையாட்டு மருத்துவ பிரிவுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மரதன் போட்டிகளில் ஈடுபட தடைவிதிக்கப்படுவதாக டாக்டர் அர்ஜுன டி சில்வா கூறினார்.
விளையாட்டுக்களில் ஈடுபடுகையில் திடீர் நோய்களினால் மாணவர்கள் மரணமடைவதைத் தடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வயது மட்டத்தினரையும் ஈடுபடுத்த முடியுமான ஓட்டதூரம் குறித்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11வயதான மாணவர்களை 5 கிலோ மீற்றர் தூரம் வரையான ஓட்டப்போட்டியிலே ஈடுபடுத்த முடியும் 9 வயது மாணவர்கள் 3 கிலோ மீற்றரை விட தூரப் போட்டிகளில் ஈடுபடுத்த முடியாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
1500, 3000, 5000 மரதனோட்டம் 1 சைக்கிளோட்டப்போட்டிகள் என்பவற்றில் ஈடுபடுத்தும் மாணவர்களை போட்டிக்கு முன் கட்டாயம் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தி தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் எனவும் மருத்துவப் பிரிவு தெரிவித்தது.
இது குறித்து பாடசாலை அதிபர்கள் விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினூடாக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டுக் கழகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாக்டர் அர்ஜுன டி சில்வா கூறினார். வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தக் கூடாது என பெற்றோர் கோரப்பட்டுள்ளனர். இந்த வருடம் முதல், சகல மாணவர்களும் விளையாட்டுக்களில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் மாணவர்களுக்கு திடீர் சுகயீனங்கள் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு கூறியது. புலமைப் பரிசில் பரீட்சையின் பின் சகல மாணவர்களையும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தவும் விளையாட்டுத்திறமைகளை ஊக்குவித்து சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. க. பொ. த. சாதாரண தர வகுப்பில் விளையாட்டை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழக தெரிவின்போது விளையாட்டு சாதனைகளுக்கு புள்ளி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
Post a Comment