டுபாயில் குவியும் சுற்றுலா பயணிகள் - 10 மில்லியனை தாண்டியது
ஐக்கிய அரபுக் குடியரசின் ஒரு அங்கமான துபாய், இன்று சுற்றுலாத் துறையில் முன்னணியில் இருக்கிறது. கடந்த வருடம் இதன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது. இந்த செய்தியை,அந்த நாட்டின் வணிக மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறையின் பொது இயக்குநர் ஹிலால் அல்மர்ரி தெரிவித்தார்.
மேலும் 2012 ல் சுற்றுலா பயணிகளின் வருகை 9.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். நகர நிர்வாகத்தில் காணப்படும் ஒருமித்த திறமைகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், கிழக்கத்திய நாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அத்துறையினரின் இடைவிடா முயற்சிகளும், அதனால் பயணிகளுக்கு கிடைக்கும் பலன்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
ஹோட்டல்களில் தங்குவோரின் எண்ணிக்கையும், தங்கும் நாட்களும் அதிகரிப்பது ஹோட்டல் தொழிலின் வருமானத்தைப் , பெருக்கியுள்ளதால் இந்தத் துறையில் முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட கிரீக்சைட், ஹயாத் போன்ற ஹோட்டல்கள் 2012 ஆம் ஆண்டில் செயல்படத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு இதன் தொடர்ச்சியாக சோபிடேல் துபாய், தி பால்ம் & ஸ்பா மற்றும் தி ஒபராய் போன்றவை இந்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.
மேலும், அரபுக் குடியரசின் பொருளாதார வளத்தில் முதலிடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா ,ரஷ்யா மற்றும் சீனப் பயணிகளின் வருகையும் கணிசமாகக் கூடியுள்ளது. பயணங்களுக்காக சீனர்கள் ஆண்டுதோறும் செலவிடும் அதிகபட்ச தொகை இவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
"வளர்ந்து வரும் நாடுகளான சீனா போன்றவற்றுடன் செய்யும் எல்லை தாண்டிய வர்த்தகமும், முதலீடுகளும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. மேலும்,சுற்றுலாத் துறையின் கிளைகள் இருக்கும் இடங்களிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உற்சாகம் தரக்கூடியதாக உள்ளது" என்று ஹிலால் தெரிவித்தார்.
Post a Comment