Header Ads



''விடாமுயற்சி'' - 106 வயதில் பட்டம்பெற்ற மாணவர் (படம்)



அமெரிக்காவின் பெவர்லி நகரில் 1906ம் ஆண்டு பிறந்தவர் பிரெட் பட்லர். சிறுவனாக இருந்தபோது வீட்டின் அருகில் இருந்த அச்சுக்கூடத்தில் பகுதி நேரமாக பணியாற்றியபடி பெவர்லி பள்ளியில் கல்வி கற்று வந்தார். அச்சுக் கூடத்தில் முழுநேர வேலை கிடைத்துவிடவே, படிப்புக்கு 'குட்பை' கூறிவிட்டு குடும்ப பாரத்தை சுமப்பதற்காக, செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்துவிட்டார். 

எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே விதவைத் தாயையும், உடன் பிறந்தோர் 5 பேரையும் காப்பாற்ற வேண்டிய குடும்ப பாரம் அவர் மீது சுமத்தப்பட்டிருந்ததால் உயர் கல்வி பற்றிய ஆசை ஆழ்மனதில் குடிகொண்டிருந்தபோதிலும், வறுமை அந்த ஆசைக்கு தடைக்கல்லாய் அமைந்துவிட்டது. 

1941ம் ஆண்டு தனது 34வது வயதில் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்சில் பணியாற்றினார் பிரெட் பட்லர். 

41 வயதில் திருமணம் செய்துக்கொண்டு 65 ஆண்டு தாம்பத்ய வாழ்க்கையில் 5 பிள்ளைகளையும் பெற்று, அவர்கள் அனைவரையும் தான் படித்த பெவர்லி பள்ளியில் படிக்க வைத்து பட்டதாரிகளாக்கினார். 

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் 1975ம் ஆண்டு வரை பெவர்லி நகரின் குடிநீர் துறையில் பணியாற்றி, அப்பணியில் இருந்தும் ஓய்வு பெற்று, பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி என 4 தலைமுறைகளை உருவாக்கிய பின்னரும், தனது ஆழ்மனதில் படிந்துவிட்ட கல்வி ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் அவரை விட்டு விலகவில்லை. 

தற்போது, நர்சிங் ஹோம் ஒன்றில் தங்கியுள்ள பிரெட் பட்லர் அங்கிருந்தபடியே பெவர்லி பள்ளியின் இறுதியாண்டு தேர்வை எழுதி தேர்ச்சியும் பெற்றார். 

பெவர்லி பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவர் பட்டம் பெற்றபோது பிரெட் பட்லரின் குடும்பத்தாரும், 18 வயது கூட பூர்த்தியடையாத அவரது 'கிளாஸ் மேட்'களும் உற்சாக கூச்சல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். 

No comments

Powered by Blogger.