இந்தியாவில் இவ்வருடம் ஹஜ் செய்ய 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு அனுமதி
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் புனிதக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ் புனித யாத்திரைக்காக உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் மக்காவில் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, ஆதி இறை இல்லமான 'கஃபா'வை வலம் வந்து இறைவனை பிராத்திப்பார்கள்.
வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு இஸ்லாமியரின் உயரிய லட்சியம். 'ஹாஜி' என்ற பட்டத்துடன் தாயகம் திரும்பும்போது, ஒருவர் செய்த சகல பிழைகளும், பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அன்று பிறந்த குழந்தையைப் போன்ற தூய்மையான உள்ளத்துடன் இறைப்பணிக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு புதிய வாழ்க்கையை துவங்குகிறார்.
அவ்வகையில், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை மத்திய அரசு ஆண்டு தோறும் செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விரும்புவோரின் விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருவதால், வழக்கமான அனுமதியைவிட, இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கான அதிக ஒதுக்கீட்டை வழங்குமாறு இந்திய அரசு சவுதி அரேபியா அரசிடம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.
Post a Comment