சொந்த நாட்டு மக்களை கொல்ல ஒபாமா உத்தரவு - விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ஜே
சொந்த நாட்டு மக்களையே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்ஜே குற்றம்சாட்டியுள்ளார்.
அல்-காய்தா உள்ளிட்ட அமைப்புகளுடன் அமெரிக்கர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அல்-காய்தாளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது.
இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே, அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பது: தங்கள் நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க நாட்டு அரசியல் நடைமுறையையே ஒபாமா சிதைத்துவிட்டார்.
இதுபோன்ற அரசுகள் மக்களை மதிக்காமல் செயல்படும் போதுதான், அவர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்த விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகள் தேவைப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் அல்-காய்தாளுக்கு எதிராகவும், உளவு பார்ப்பதற்காகவும் ஆள் இல்லாத விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான விதிகளின் முழுவிவரங்களை வெளியிட அமெரிக்கா தயாரா?
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து யாராவது எங்களுக்கு உதவ முன்வந்தால் வரவேற்போம். அவர்களின் பெயரை ரகசியமாக வைத்திருப்போம். அமெரிக்காவின் திரைமறைவு நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்துவோம் என்றும் அசாஞ்ஜே கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் பலவற்றை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்ஜே.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் வெறுப்புக்கு உள்ளானாலும், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ஜே மீது, ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. இது தொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்போது பிரிட்டனில் இருந்து ஈக்வடார் செல்ல அவர் முயற்சித்து வருகிறார். ஆனால் பிரிட்டன் அதற்கு அனுமதி தராததால் அந்நாட்டில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தங்கியுள்ளார்.
அதே நேரத்தில் அசாஞ்ஜேயிடம் தாங்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், தங்களிடம் அவரை ஒப்படைக்க வேண்டுமென்று ஸ்வீடன் அதிகாரிகள் கோரி வருகின்றனர். அவர் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
Post a Comment