ஹஜ்ஜூல் அக்பரின் சுதந்திர தினச் செய்தி
சுதந்திரம் ஒரு தேசத்தின் எழுச்சியினது அடிநாதமாகும். எமது தேசத்தை அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்கள் ரீதியாக எமது சுய கட்டுப்பாட்டில் வைத்து வழிநடத்தும் போதே சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. அரசியல், பொருளாதார, கல்வி, கலாசாரத் துறைகளில் இடம்பெறும் வெளியாரின் தலையீடுகள் எமது சுதந்திரத்தை இல்லாமல் செய்துவிடும் கிருமிகளாகும்.
ஒரு நாட்டில் குழப்பமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே வெளிச்சக்திகள் அங்கு ஊடுருவுகின்றன. அப்போது தேசத்துக்கு ஏற்படும் முதல் இழப்பு சுதந்திரம் பறிக்கப்படுவதாகும். மூன்று தசாப்தங்களாக நாட்டிலிருந்த பயங்கரவாத சூழ்நிலையை எத்தனை வெளிச்சக்திகள் பயன்படுத்தி இலாபம் பெற முயற்சித்தன என்பது இந்நாட்டு மக்களுக்குத் தெரியாத ஒரு விடயமல்ல.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசு எடுத்த உறுதியான தீர்மானத்தின் மூலம் நாடு பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு இரண்டாவது முறை சுதந்திரமடைந்தது. அந்த சுதந்திரம் எமது மானுசிகத்தையும் இராணுவ பலத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்தது.
இவ்வாறு பாரிய விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரத்தை நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நின்று பாதுகாக்க வேண்டும். எமது தேசத்தின் இனங்களும் மதங்களும் மொழிகளும் எமது தேசத்தின் வளங்களாகும். அவற்றை எமது வளங்களாகக் கருதாதபோது அந்த வளங்கள் வெளிச் சக்திகளின் கைகளுக்குள் இலகுவாகச் சென்றுவிடுகின்றன. அப்போது தேசத்தின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது. இத்தகையதொரு சூழல் மீண்டும் எமது நாட்டில் ஏற்படாமல் பாதுகாக்க 65 வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களனைவரும் கைகோர்ப்போம்; ஒன்றுபடுவோம். வாழ்க சுதந்திரம்! வளர்க நம் தேசம்!
ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Post a Comment