கனடாவில் இப்படியும் நடந்தது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம் விக்டோரியா பகுதியை சேர்ந்த பெண் அலிசா. இவரது டீன் ஏஜ் மகள் லாரன். (கற்பனை பெயர்கள்) சமீபத்தில் அம்மாவுக்கும் மகளுக்கும் ஏதோ சண்டை. அதற்கு பிறகு, அம்மாவிடம் லாரன் முகம்கொடுத்து பேசவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றிருந்த லாரன் வீடு திரும்பவில்லை. தெரிந்த இடங்களில் அலிசா விசாரித்தும் தகவல் இல்லை. ‘மகள் என்ன ஆனாள்’ என்று அலிசா பதைபதைத்த நேரத்தில்.. அவளது செல்போனில் இருந்து அம்மாவுக்கு அழைப்பு. ‘‘அம்மா.. அம்மா..’’ என்று லாரன் கத்தினாள். யாரோ சிலர் ஓடும் சத்தமும் காதில் விழுகிறது. கூடவே ‘‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’’ என்று ரவுடி ஒருவனின் மிரட்டல் சத்தம்.
துப்பாக்கி சத்தம். திடீரென கூக்குரல். ஓவென்ற அலறல். அதோடு துண்டானது இணைப்பு. பீதியடைந்த அலிசா, மகளின் செல்போனில் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். பலனில்லாததால் அவசர போலீசை அழைத்தார். ‘‘அச்சச்சோ.. என் பொண்ணு ஒரு கொலைகார கூட்டத்தின் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறாள். காப்பாத்துங்க’’ என்று கதறினார். டீன்ஏஜ் பெண் என்பதால் விவகாரம் பரபரப்பானது. போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்ற தேடுதல் தொடங்கியது. சிறிது நேர தேடலுக்கு பிறகு, விக்டோரியா நகரில் உள்ள தியேட்டரில் அவர் இருப்பது தெரியவந்தது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலம் அரோரா நகரில் உள்ள செஞ்சுரி தியேட்டரில் கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு பயங்கர சம்பவம்.
‘த டார்க் நைட் ரைசஸ்’ என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது தியேட்டரில் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் கண்ணீர் புகை குண்டுகளை வீசிவிட்டு, தடுமாறி தவித்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 12 பேர் பலியாயினர். 58 பேர் படுகாயம் அடைந்தனர். அதுபோன்ற தாக்குதலாக இருக்குமோ என்று போலீஸ் படை பரபரப்பானது. அதிரடியாக தியேட்டருக்குள் நுழைந்து அட்டாக் நடத்துவது என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். அதற்குள், கடைசியாக, போலீஸ் குழுவில் உள்ள ஒருவர் இளம்பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டார்.
நல்ல காலம்.. அவளது அழைப்பு கிடைத்தது. ‘‘ஹலோ, யார் நீங்க.. ஒண்ணும் கேட்கல. சத்தமா பேசுங்க. தியேட்டர்ல சினிமா பார்த்துட்டு இருக்கேன்’’ என்றாள். ஆபரேஷன்.. தனிப்படை.. அதிரடி.. அட்டாக்.. எல்லாம் புஸ்! தியேட்டரில் கேபின் இன் தி வூட்ஸ் என்ற படத்தை பார்த்துக் கொண்டே மகள் பேச.. அதில் வந்த வசனங்களை வைத்து தாய் எக்கச்சக்கமாக கற்பனை செய்து, போலீசை குழப்பிவிட்டார் என்று தெரியவந்தது. கத்தியின்றி, யுத்தமின்றி, ரத்தமின்றி ஒரு ஆபரேஷன் முடிந்ததில் மகிழ்ச்சி ஒரு பக்கம்.. அத்தனை கூட்டத்தையும் அலைக்கழித்த டென்ஷன் ஒரு பக்கம்.. ‘‘நீ இனிமே சினிமாவுக்கே போகாத. அப்படியே போனாலும் அங்கிருந்து ஒங்கம்மாவுக்கு போன் பண்ணாத’’ என்று உச்சகட்ட டென்ஷனில் டீன்ஏஜ் பெண்ணுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போனது போலீஸ் குழு.
Post a Comment