Header Ads



மற்றுமொரு றிசானாவின் கதை..!


தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.

 ஏழை விவசாயியான கபிபுல்லாவின் மூத்தமகள் ரிசானாவின் உண்மையான பெயர் ஆரிபா. சவூதி செல்லும் போது  இவருக்கு வயது 17. பாரிச வாதத்தால் படுத்த படுக்கையில்  உள்ள தனது தாயின் மருத்துவச் செலவையும் சகோதரிகளின் கல்வியையும் கருத்தில் கொண்டு சென்றவர் கந்தளாயில் உள்ள வேறு ஒரு முகவரியில் உள்ள ஆரிபா என்னும் பெயருடையவரின் அடையாளத்திலேயே சென்றுள்ளார். இதனை கிண்ணியாவைச் சேர்ந்த உதவிமுகவர் ஒருவரே ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கும் முற்பணம் கூட தமது மகளுக்கு கிடைக்கவில்லை என மிகுந்த மன வேதனையுடன் ரிசானாவின் தந்தை கபிபுல்லா தெரிவிக்கிறார்.

மேலும் தெரிவிக்கையில், 

ரிசானா சென்று மூன்று மாதங்களாக எம்முடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றும் வீட்டின் எஜமானி நல்லவர் இல்லை. தனக்கு அடிப்பார். சாப்பாடு தருவதில்லை. நான் சவூதி மக்காவில் தான் இருக்கிறேன். என்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண்கள் இருவர் வேலை செய்கிறார்கள். எனவே என்னை நாட்டுக்கு திருப்பி எடுங்கள் என்று ரிசானா தெரிவித்தார் என்று அவர் கூறுகின்றார்.

 இவ்விடயம் தொடர்பாக தந்தையான கபிபுல்லா உதவி முகவரைச் சந்தித்து தெரிவிக்கையில், மூன்று மாதம் முடியும் வரை எதுவும் செய்ய முடியாது. பொறுமையாக இருக்கும் படியும் அதன் பின்னர் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 நான்காவது மாதம் ரிசானா என்ற பெயரில் சென்ற ஆரிபா இறந்து விட்டார் என்ற செய்தி உதவிமுகவர் ஊடாக குடும்பத்தாருக்குக் கிடைத்தது. இவருடைய சடலத்தை சவூதியிலேயே அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவம்  நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு தான் தனது உறவினர் ஒருவருடன் சென்று கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறையிட்டதாகவும் அப்போது இவரை அனுப்பிய முகவருக்கு எதிராகத் தாம் வழக்கு நடத்தவுள்ளதாகவும் நட்டஈடு பெற்றுத் தருவதாகவும் காப்புறுதி தருவதாகவும் தம்மிடம் உறுதியளித்ததாக கபிபுல்லா தெரிவிக்கின்றார்.
 பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு நான் சென்று கேட்ட÷ பாது இவ்வழக்கை தாம் மூடி விட்டதாகத் தெரிவித்தார்கள். இதில் என்ன தீர்ப்பு வந்தது என்று கூடத் தெரியவில்லை என்று கபிபுல்லா தெரிவிக்கின்றார்.

 இதேவேளை இவ்விடயம் தொடர்பாக உள்ளூர் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கூட முறையிட்டுள்ளேன். ஆயினும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. இவர் நான்கு மாதம் வேலை செய்த சம்பளம், விபத்தில் உயிரிழந்தமைக்கான காப்புறுதி என எந்தவொரு உதவியும் இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு சொல்லொணா துயரங்களுடன் கஷ்டப்படும் குடும்பங்களின் பக்கமும் அரசாங்கம், அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்களின் பார்வை திரும்ப வேண்டும் என அக்கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி நசீரா தெரிவித்தார்.

2 comments:

  1. இ வ்வாறு பாதிக்கப்படும் அப்பாவி ஏழைகளின் இரத்தத்தினையும் வியர்வையினையும் உருஞ்சிக் குடித்துபிழைப்பு நடத்தும் அநாகரீகமான கயவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். இவர்களின் பாதகச் செயல்களினால் எம்சமூகத்துக்கே இழுக்காகும். எனவே இவர்களை தோலுரித்துக் காட்டுவதும் சமூகத்தின் பர்ளுகிபாயாவான கடமைகளில் ஒன்றாகும்.

    ReplyDelete
  2. Hi Friends,

    ரிசானாக்களின் கதைகள் தொடருவது கவலையாகத்தான் உள்ளது. அதேவேளை நமது மூதூர் ரிசானாவின் கதையிலும் சில விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது

    ரிசானாவையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டுமே பார்ப்பது அத்தனை சரியான பார்வையாக இருந்துவிடாது. மீடியாக்களும் பிரமுகர்களும் அந்தக் குடும்பத்தின் மீது அனுதாபமழையைத் தொடர்ந்து பொழிந்து கொண்டேயிருப்பதை இனிமேல் மெல்லக் குறைத்துக் கொண்டு அவர்களை கிடைத்திருக்கும் உதவிகளைக்கொண்டு சுயமாகவும் இயல்பாகவும் வாழவிடுவதே நல்லது.

    ஊடகங்கள் இனிமேல் ரிசானாவின் வீட்டை, இதே போல வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொண்டு வெளியே காண்பிக்க வெட்கப்பட்டு வாழும் எத்தனையோ குடும்பங்களின் அடையாளச் சின்னமாகவே கருதிச் செயற்பட வேண்டும்.

    ரிசானா வாழ்ந்த பகுதியிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் எத்தனையோ குடும்பங்களும் படித்திருந்தும் வேலையில்லாத இளைஞர் யுவதிகளும் உள்ளனர். அவர்களை மனித வளமாகப் பயன்படுத்தி அந்தப்பிரதேசத்திலேயே நீண்டகாலத்திற்கு பயன்தரத்தக்க வகையில் பொருத்தமான தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நமது சமூகத்திலுள்ள புரவலர்களை ஊக்கப்படுத்தலாம். இதற்கு ஊடகங்களால் கணிசமான பங்களிப்புச் செய்ய முடியும்.

    தவிர இன்னுமொரு விடயமும் உண்டு....

    அது ரிசானாவின் அனுதாப வெளிச்சத்திலே மறைந்துபோன அல்லது மறைக்கப்பட்டுப்போன ஒரு மெழுகுவர்த்தியாக ஓர் உண்மையும் அதே ரிசானாவின் பகுதியிலேயே எரிந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா?.

    அதுதான் ரிசானாவை அவளது பெற்றோர்களின் வேண்டுகோளின்படி வயது மாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த துணை முகவரது குடும்ப நிலைதான் அது!

    அவர் இப்போது நீதிமன்றத்தீர்ப்பினால் சிறைவாசம் அனுபவிக்கின்றார். ஆனால் அவரது குடும்பமும் ஏறத்தாழ ரிசானாவின் குடும்பத்தைப்போலவே ஏழ்மையான குடும்பம்தான்.

    அந்த முகவர் செய்த விடயம் சட்டப்படி தவறுதான் என்பதிலே மாற்றுக்கருத்துகளில்லை. ஆனாலும் அவரது குடும்ப நிலை காரணமாகத்தான் இப்படியான தொழிலை அவர் செய்ய வேண்டியிருந்ததையும் நாம் அனுதாபத்துடன் பார்க்க வேண்டும். தவிர, ஒரு சிறுமியை வயதை அதிகரித்து ஆவணங்கள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களும் அவளது பெற்றோர்கள்தானே...?

    அவர்களின் ஒப்புதல், வற்புறுத்தல் இல்லாமல் அது நிகழ்ந்திருக்க முடியாது. எவ்வாறாயினும் அவர் முகவர் தான் புரிந்த தவறுக்காக சிறை சென்று விட்டார். ஆனால் அவரை நம்பியிருந்த அவரது ஏழைக்குடும்பம் இன்று உணவுக்கும் வழியின்றி நாதியற்று வாடுகின்றது.

    ரிசானாவின் குடும்பத்தை அனுதாபத்தோடு பார்க்கச் செல்பவர்கள் யாரும் அந்த வீட்டுக்கு அண்மையிலே இருக்கும் (தகப்பனது உழைப்புப் பறிபோன நிலையில் வாடும்) அந்த முகவரது குடும்பத்தை ஏறெடத்தும் பார்ப்பதில்லை. சொல்லப்போனால் ரிசானா குடும்பத்திற்கு அனுதாபத்தையும் முகவரின் குடும்பத்திற்கு வதுவா (சாபம்) வையும் வீசிவிட்டுத்தான் செல்கின்றார்கள்.

    ரிசானாவின் நிலைமையும் மரணமும் யாருமே எதிர்பாராத ஒன்று. வயதைக்கூட்டி அனுப்பியது குற்றம்தான் எனினும் அந்தக்குற்றத்திற்கான பொறுப்பிலே ரிசானாவின் தந்தை நபீக்கும் இருக்கின்றார். அனுதாப அலையினால் அவரது தவறு கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது என்றாலும் யதார்த்தம் அதுதான்.

    நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு குற்றத்திற்குக்காரணமாக இருந்த இருவரில் ஒருவருக்குச் சிறைவாசம் மற்றவருக்கு புதையல் போன்ற நிதியுதவிகள். முகவர் செய்த தவறுக்காக அவரது மனைவியும் பிள்ளைகளும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இது பரிதாபமல்லவா? அவர்களும் நம்போன்ற மனிதர்கள்தானே?

    மீடியாக்களே தயவு செய்து அவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!.

    ReplyDelete

Powered by Blogger.