Header Ads



முஸ்லிம்கள் ஜிஹாத் செய்யவேண்டிய நிலை எழக்கூடும் - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு


 ( இர்ஷாத் றஹ்மத்துல்லா )

ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා
( ஹுனைஸ் பாறூக்)
(Hunais Farook)

பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புப் பிரேரணை காலத்தின் தேவையாக இருக்கின்றது. கடந்த வாரம் நாங்கள்  வன்னி பிரதேசத்திற்கு  ஒரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். எங்களது குழுவிலே ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர். நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தபொழுது எங்களுடன் வந்திருந்த எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திகைத்து விட்டார்கள். ஏனென்றால், பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கே கொழும்பிலிருந்துகொண்டுதான் வடக்கிலுள்ள குறைபாடுகளைக் கதைப்பார்கள். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை நேரடியாகப் பார்த்தபொழுது உண்மையை - யதார்த்தத்தை  புரிந்துகொண்டார்கள். 

கடந்த யுத்த காலத்தில் அல்லது அதற்குப் பின்னரும்கூட  வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு செல்வதென்றால் 4 - 5 மணித்தியாலங்கள் செல்லும். ஆனால், இப்பொழுது 45 நிமிடத்தில் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்குச் செல்லக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு எந்த அபிவிருத்தியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சிறந்த நிலைதான் அங்கு காணப்படுகின்றது. கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், கிளிநொச்சி மாவட்டத்தில் 17 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கின்றார்; முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கின்றார். அதேபோன்று, 2009, 2010. 2011, 2012 ஆம் ஆண்டு O/L, A/L பெறுபேற்றை எடுத்துக்கொண்டால், அங்கு கல்வி மட்டம் உயர்ந்து செல்வதை எங்களால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓர் இடத்தில் வைத்தியசாலையொன்றை நாங்கள் திறந்து வைத்தோம். அது பாரியளவு நிதியைக் கொண்டு நிருமாணிக்கப்பட்ட ஒரு வைத்தியசாலையாகும். அங்கு நாங்கள் மக்களோடு நேரடியாகக் கதைத்தபொழுது, "இன்று நாங்கள் நிம்மதியாக, சந்தோசமாக இருக்கின்றோம்; அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் எங்களோடு கைகோர்த்து செயற்படுகின்றார்கள்; அவர்கள் எங்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றார்கள்" என்று அவர்கள் சொன்னார்கள். நாங்கள் மருதையன்பற்று பிரதேசத்திலிருக்கின்ற கேப்பாப்பிளவு என்ற ஓர் இடத்துக்கும் சென்றோம். அங்கு அரசாங்கத்தினால் 3,75,000 ரூபாய் செலவு செய்யப்பட்டு ஐம்பது பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்குப் பொறுப்பாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் இருக்கிறார். அங்குள்ள நிலைமைகளை நாங்கள் மக்களிடமும் அவரிடமும் கேட்டோம். பொதுவாக அப்படி ஒரு வீட்டைக் கட்டுவதற்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் செலவாவதாக அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு 3,75,000 ரூபாயினை அரசாங்கம் கொடுக்கின்றது. 97 இராணுவ சிப்பாய்களும் 3 இராணுவ உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 100 இராணுவத்தினர் சேர்ந்து அங்கு வீட்டுப் பணிகளைச் செய்கின்றார்கள். அதாவது, கட்டிட நிர்மாணத்துக்குத் தேவையான கல், மண் போன்றவற்றைக் கொண்டுவருவது முதல் அத்தனை வேலைகளையும் இராணுவத்தினர் செய்வதனால் ஒரு வீட்டுக்குச் செலவாகும் தொகையில் மூன்றேகால் இலட்சம் மீதமாகின்றது. அங்கு இராணுவத்தினர் மக்களுடன் மிகவும் சுமுகமாக இருந்து அந்த வேலைகளை முன்னெடுப்பதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த வகையில் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகவும் வேகமாக நடந்துகொண்டு வருகின்றன. சுமார் 30 வருடங்களாக  அழிவுக்குட்பட்டு அபிவிருத்தி காணாத அந்தப் பிரதேசம் இன்று அபிவிருத்திப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், இவ்வாறு  அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அரசாங்கத்தின் மீது பொறாமை கொண்ட சில விசமிகள் அங்கு பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகும். அதை   எங்களால் அவதானிக்க முடிந்தது. எதிர்காலத்தில் அரசாங்கத்தை அரசியல் ரீதியாக  பலவீனப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். நாங்கள் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களையும் சந்தித்தோம். அவர்களின் ஆதங்கத்தைக் கேட்டபொழுது மிகவும் கவலையாக இருந்தது. அங்கு மீளக் குடியேறுவதற்குச் செல்கின்ற அந்த முஸ்லிம்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. வடக்கின் வசந்தத்தின் மூலமாக அரசாங்கம் அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றது. மின்சார இணைப்புக்காக அரசாங்கம் பல கோடி ரூபாக்களை செலவு செய்கின்றது; பாதைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவ்வாறு அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்துகொண்டு வருகின்றது. அப்படியிருக்கும்பொழுது மீள் குடியேற்றத்தில் பல தடைகளை எதிர்நோக்குவதாக அந்த முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். 

அதாவது அதிகரித்த சனத்தொகைக்கேற்ப உதவி அரசாங்க அதிபரினால் காணிகள் இனம் காட்டப்பட்டு அவர்கள் அந்தக் காணிகளை துப்பரவு செய்து அங்கு சட்ட ரீதியாக மீளச் செல்கின்றபொழுதும்கூட வனத் திணைக்களம் இது எங்களுடைய காணி என்று சொல்கின்றது. 

நாங்கள் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள வரைபடத்தைப்  பார்க்கும்பொழுது வனத் திணைக்களத்திற்கும் அந்தக் காணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர்கள் அங்கு வந்து அதில் கையைப் போடுகின்றார்கள். அது மாத்திரமல்ல இவ்வாறு இந்த மக்கள் குடியேறுகின்றபோது அங்கிருக்கின்ற இனவாதத்தைத் தூண்டுகின்ற இனவாதிகள் சிலர் முஸ்லிம்கள் அங்கு அத்துமீறி குடியேறுவதாகப் பத்திரிகைகளுக்குப் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்கின்றார்கள். இன்று நான் சுடர் ஒளிப் பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதாவது "வடக்கில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு. இந்துத் தலைவர்களுடன் பேச்சு" என்பதாகும். வடக்கில் இடம்பெறும் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்து சமயத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்குப் பொதுபல சேனா அமைப்புத் தீர்மானித்துள்ளது என இந்தப் பத்திரிகையில் மேலும் கூறப்படுகின்றது. இதைப் பார்க்கும்பொழுது மிகவும் ஆக்ரோசமாக இருக்கின்றது. 

ஒரு முஸ்லிமின் உரிமை, அவனது இடம், அவனது சொத்துக்கு மறுப்பு ஏற்படுகின்றபொழுது அல்லது அதனை யாராவது பலாத்காரமாக எடுக்க வருகின்றபொழுது அதற்கு எதிராக 'ஜிஹாத்' செய்வது அவனது கடமை என்று 'ஹதீஸ்'களில் கூறப்படுகின்றது. அல் குர்ஆனில் - முஸ்லிம்கள் நம்புகின்ற வேத நூலில் அதேபோன்று முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற நபி (ஸல்) அவர்களுடைய 'ஹதீஸ்'களில் சொல்லப்படுகின்றது ஒரு 'ஜிஹாத்' இல் மரணிக்கின்றவர் நிச்சயமாகச் சுவனத்துக்குச் செல்வார் என்று. அநியாயமாக இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றபொழுது முஸ்லிம்கள் 'ஜிஹாத்' ஐ நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இந்த நாட்டிலே எழக்கூடும்.   

எனவே, அநியாயமாக இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களைக் கொண்டு செல்லும்பொழுது இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்  'ஜிகாத்' தை நோக்கி எழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படக்கூடும்.   இன்று மன்னார் மாவட்டத்திலே  இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு குழு செயற்படுகின்றது.  'பொதுபலசேன' அமைப்பும் இந்தக்குழுவுடன் இணைந்து செயற்படுமாயின் நிச்சயமாக இந்த நாட்டின் அரசியல் வாதிகள் மட்டுமன்றி முழு முஸ்லிம் சமூகமும்  ஒன்று திரண்டு இச்செயற்பாட்டுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்காகச் செயற்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை  ஏற்படும். 

அதேபோன்று  நாங்கள் மன்னார் மாவட்டத்திலே முஸ்லிம் மக்களை மாத்திரம்  குடியமர்த்தவில்லை. மடு றோட்டில்  கடந்த 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த 150 க்கும் மேற்பட்ட சிங்கள சகோதர மக்களையும் குடியமர்த்தியிருக்கின்றோம். அதே போன்று  இடம்பெயர்ந்து வாழ்ந்த மூன்று லட்சம் தமிழ் குடும்பங்களையும் நாங்கள் புதிதாகக் குடியமர்த்தியிருக்கின்றோம்.  இத்தகையதொரு நிலைமையில் முஸ்லிம் மக்கள் குடியேறும் பொழுது மாத்திரம் ஏன்  சில தமிழ் இனவாதிகளாலும் சில சிங்கள இனவாதிகளாலும்  பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன என நான் கேட்கின்றேன்.  

அது மட்டுமன்றி நான் துணுக்காய், பாண்டியன்குளம், மடு, முசலி, வவுனியா வடக்கு ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுத் தலைவராக இருக்கின்றேன். நான் இறைவனுக்குப் பயந்து நடப்பவன் என்பதால்  அப்பிரதேசங்களில் யார் யாருக்குக் காணி இல்லையோ அவர்களை இனங்கண்டு காணியில்லாத மக்களுக்குக் காணி வழங்குவதற்காகச் சிபார்சு செய்து காணிகளை வழங்கிக் குடியமர்த்தியிருக்கின்றேன்.   அண்மையில் துணுக்காயிலும், பாண்டியன்குளத்திலும், நெடுங்கேணியிலும் உள்ள தமிழ் சகோதரர்களுக்கு காணி வழங்குவதற்குச் சிபார்சு செய்து காணிகளை வழங்கியிருக்கின்றேன்.  இந்த மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும்  100 சதவீதமாக தமிழ் சகோதரர்களே வாழ்கின்றார்கள். அப்பிரதேச செயலகப்பிரிவுகளிலே காணி இல்லாத அத்தனை தமிழ் சகோதரர்களுக்கும் நான் காணி வழங்கி மீள்குடியேற்றியிருக்கின்றேன்.   அதே போன்று மடுப்பிரதேசத்திலே வாழ்ந்த 150 க்கும் மேற்பட்ட சிங்கள சகோதரர்களுடைய குடும்பங்களுக்கு நான் காணி வழங்குவதற்காக சிபார்சு  செய்திருக்கின்றேன்.  ஆனால், முசலிப்பிரதேசத்தில் வாழ்கின்ற காணியில்லாத முஸ்லிம் குடும்பங்களுக்கு  நாங்கள் காணி வழங்கும் பொழுது - கடந்த காலங்களில் சில தமிழ் இனவாதிகள் தூண்டிவிட்டிருந்த   பிரச்சினையை அந்த இனவாதிகளுடன் சேர்ந்து 'பொதுபலசேன' அமைப்பும்  செய்கின்றதென்றால் இதற்குத் தக்க  பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டதென்றே  சொல்ல வேண்டும். 

வட மாகாணத்தில் குடியேறுகின்ற முஸ்லிம் மக்கள் இன்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.  அங்கு குடியேறுபவர்களுக்கு பொது அமைப்புக்களால் வழங்கப்படுகின்ற நிதிக்கொடைகள்  பழைய அகதி, புதிய அகதி என்ற பிரிவினை ஏற்படுத்தப்பட்டு அத்தனை உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன.    அங்குள்ள அகதிகளுக்கு UNHCR ரூபா 25,000/- வை நன்கொடையாக வழங்குகின்ற அதே வேளையில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை புதிய அகதிகள் எனக் காரணங்காட்டி   அவர்களுக்கு அந்த நன்கொடை  கொடுக்கப்படாமல் மறுக்கப்படுகின்றது.  

சென்ற வாரம் நானும், அமைச்சர் றிஸாத் பதியுதீன் அவர்களும்  அப்பிரதேசத்துக்குச் சென்று பார்வையிட்ட பொழுது அங்குள்ள முஸ்லிம் மக்கள் மரநிழலில் தங்கியிருப்பதைப் பார்வையிட்டோம்.  அவர்களுக்கு ஒரு கொட்டில் தானும் வழங்கப்படாத நிலைமை காணப்பட்டது.  அரசாங்கத்தினால்தானும்    வழங்க முடியவில்லை.  

அங்கிருந்த NGO க்கள் இப்பொழுது அப்பிரதேசங்களிலிருந்து  வெளியேறி விட்டன.   இப்பொழுது அப்பிரதேசங்களிலே முஸ்லிம் மக்கள் தான் அகதிகளாக இருக்கின்றார்கள்.   எனவே, அவர்கள் அங்கே இருந்தால் அம் முஸ்லிம்களுக்கு உதவி வழங்க வேண்டுமென்ற காரணத்தினாலே அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.   இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும்,  சுதந்திரத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்குமாக   முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.  இன்று இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி அனைத்து இன மக்களும் அச்சமின்றி நடமாடுவதற்காக எத்தனையோ முஸ்லிம்களின் உயிர்கள் பலியிடப்பட்டு இரத்தம் ஓட்டப்பட்டிருக்கின்றது. எத்தனையோ முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு,  தமது சொந்த இடங்களை விட்டு 22 வருட காலமாக அகதிமுகாம்களில்   வாழ்ந்து தியாகம் செய்திருக்கின்றார்கள்.  அவர்கள் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனையின் பயனாகவே இன்று இந்த நாட்டில் சமாதானம் நிலவுகின்றது.  இந்த நாட்டிலுள்ள மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.  எனவே, இத்தகைய சூழலை எவரும்  குழப்ப முனைய வேண்டாம் என  நாங்கள் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். 
මූලාසනාරූඪ මන්ත්රීතුමා
(தலைமைதாங்கும்  உறுப்பினர் அவர்கள்)
(The Presiding Member)
 
  Hon. Member, please conclude your speech now.

ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා
(மாண்புமிகு ஹுனைஸ் பாறூக்)
(The  Hon. Hunais Farook)
Give me just one more minute, Sir.  முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதற்காகத்தான் வட பகுதிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என LLRC Report இன்    9.1.9.2 பந்தியில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.   எனவே,      மீள்குடியேற்றத்தை அமைப்பதற்கான   ஆணைக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்வதன் மூலம் தான் திருப்திகரமான மீள்குடியேற்றத்தைச் செய்ய முடியும் என LLRC அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  
"பொதுபல சேனா" அமைப்புக் கூறுகின்றது, இது விடயத்தில் முஸ்லிம்கள் பலவந்தப்படுத்துகின்றார்கள் என்று. எந்த வகையில் முஸ்லிம்கள் பலவந்தப்படுத்துகின்றார்கள் என்று அவர்கள் நிரூபிக்கட்டும் என்று நான் இந்த நேரத்திலே சவால் விடுகின்றேன். அதாவது எந்த முஸ்லிமாவது சிங்கள சகோதரர்களுடைய காணியை அல்லது தமிழ்ச் சகோதரர்களுடைய காணியை அத்துமீறிப் பிடித்திருக்கின்றார்கள் என்று அவர்கள் முடியும் என்றால் நிரூபித்துக் காட்டட்டும்! ஆனால், முஸ்லிம்களின் எத்தனையோ உறுதிக் காணிகள் அல்லது அரச permit கொடுக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் காணிகள் எல்லாம் பலராலும் பறிக்கப்பட்டிருக்கின்றன, பலருக்கு அவற்றின் உருத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நாங்கள் நிரூபிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால், இவ்வாறு பொய்ப் பிரச்சாரம் செய்கின்றவர்கள் இதற்குத் தயாரா? என்று நான் இந்த நேரத்தில் சவால் விட்டு விடைபெற்றுக் கொள்கின்றேன். நன்றி வஸ்ஸலாம். 

 





2 comments:

  1. பாராள மன்றத்தில் பள்ளி உடைக்கப்படவில்லை என்று கூறி ஆதாரம் கேட்ட பொழுது உங்கள் வீர உணர்வு எங்கே ஒழிந்து கொண்டது. அரசியலுக்காய் மார்க்கம் பேசுவதை நிறுத்துங்கள் சகோதரரே

    ReplyDelete
  2. pesinaalum kuttam illavittalum kuttam, faslun enne seya vendum enru ethirparkinreerkal?

    ReplyDelete

Powered by Blogger.