பொங்கியெழுந்த மாணவர்களும், பெற்றோர்களும்..! (படங்கள் இணைப்பு)
(எஸ்.அன்சப் இலாஹி)
பொத்துவில் சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதருமாறு மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (21.02.2013) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேற்படி பாடசாலையில் 575 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர், இப்பாடசாலைக்கு 32 ஆசிரியர் தேவையாகவிருந்தும் தற்போது 18 ஆசிரியர் மாத்திரமே கற்பித்து வருகின்றார்கள்;. க.பொ.த சாதாரணதரம்வரை இப்பாடசாலையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இருந்தபோதிலும் மாணவர்களின் தொகைக்கேற்ப ஆசிரியர் இல்லாததனால் தரம் 6 முதல் தரம் 11 வரை தமிழ், இஸ்லாம் ஆகிய இரண்டு பாடங்கள் மாத்திரமே தற்போது கற்பிக்கப்பட்டு வருகிறது. முதலாம் தவணைக்கான காலம் அண்மித்ததனால் இம் மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்ள முடியாத சூழ் நிலை தோன்றியுள்ளது.
இந்நிலை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை இம் மாணவர்களின் கல்வி விடயத்தில் யாரும் அக்கறை கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவ சங்கத்தினர் சுலோகங்களை ஏந்தியவாறு கோசமிட்டனர் அச் சுலோகங்களில் இடமாற்றாதே இடமாற்றாதே பதிலீடு செய்யாமல் இடமாற்றம் செய்யாதே, அதிகாரிகளே எமது சிறார்களின் கல்வியை மேம்படுத்த உதவுங்கள்,வேண்டும் வேண்டும் சிறந்த கல்வி வேண்டும், வேண்டும் 15 ஆசிரியர்கள் உடன் வேண்டும், எமது சிறார்களின் கல்வியை நாசம் செய்யாதே, நாளைய தலைவர்களை தீர்மானிப்பது கல்விதான், எங்கள் பின்னடைவுக்கு காரணம் நீங்களே, அல் அக்ஷா வித்தியாலயம் உங்களது கை பொம்மையா? அரசியல் வாதிகளே அல் அக்ஷா வித்தியாலயத்தை உதைபந்தாக பயன்படுத்துவது ஏன்?, அரசியல் வாதிகளே நீங்கள் இன்னும் தூங்குவது ஏன்?, புத்திஜீவிகளே புத்துணர்ச்சி பெறுங்கள், பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கு பதில் ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோசமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.அப்துல் அசீஸ் வருகை தந்து மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தி உரிய தீர்வைப்பெற்றுத்தருவதாக கூறினார். அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது, அத்துடன் ஆசிரியர்கள் நியமிக்கும்வரை பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில்லையென பெற்றோர்கள், பழைய மாணவ சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
Post a Comment