Header Ads



வடக்கு முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேற வேண்டிய கடப்பாடு உள்ளது - றிசாத்



(புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)

தமிழ் மக்கள் இடம் பெயர்ந்த போது அவர்களை மீள்குடியேற்றியமைக்கு என்னை பாராட்டியவர்கள்.அதே வடமாகாணத்தில் வாழ்ந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற நடவடிக்கையெடுக்கும் போது ஒரு சமூகத்திற்கு எதிரானவராக என்னை காட்ட முனைவது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழல் தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்றும் தெரிவித்தார்.

புத்தளம் காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் நஜ்மி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான்,பிரதி கல்வி பணிப்பாளர் அக்பர் ,வட மாகாண ஆளுநரின் மன்னார்,புத்தளம் பிராந்தியங்களுக்கான ஆணையாளர் சம்சுதீன் லியாவுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு வர்த்தக துறையில் 3 ஏ பெற்றுக் கொண்ட மாணவன் எம்.என்.எம்.நிப்ராஸ் மற்றும் மாகாண மட்டத்தில் கரப்பாந்தாட்ட போட்டியில் பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்த மாணவர்களை பாராட்டுதல்,இல்ல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கள் என்பனவும் இங்கு இடம் பெற்றது.

இங்கு உரையாற்றுகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

இன்று எமது மக்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன.தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் என்பது வடக்கில் வாழ்ந்த மக்களை மீண்டும் அவர்களது மண்ணில் மீள்குடியேற்ற தேவையான அடித்தளத்தினை இட்டுள்ளது.அந்த வகையில் வடக்கில் இருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்களும் அவர்களது மண்ணில் மீள்குடியேற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட மாகாண மக்களை தமது மக்களைப் போன்று பராமரித்து வந்த புத்தளம் மக்களுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்கள்.அவர்கள் செய்த தியாகங்களும்,உதவிகளும் ஒரு வரலாற்று பதிவாகும்.இன்று ஒரு சமாதான சூழல் காணப்பாடுகின்றது.இதனை பயன்படுத்திக் கொண்டு எமது மண்ணில் நாம் மீளக் குடியேறுவதன் மூலம் புத்தளம் மக்களுக்கு உதவிகளை செய்ய முடியும்.

இன்று வன்னி மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை நாம் செய்து வருகின்றது.கல்வி மேம்பாடுகளுக்காக பாடசாலை கட்டிடங்கள் கட்டப்பட்டும் மற்றும் கற்றல்,கற்பித்தலுக்கான வசதிகள் என்பனவற்றை செய்துவருகின்றது.இதன் மூலம் வெளியேற்றப்பட்ட மாணவ சமூகத்தின் கல்வித் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றை கவனத்திற் கொண்டு இந்த மீள்குடியேற்றம் மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த 11 வருட காலமாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக நான் இருந்து பணியாற்றியுள்ளேன். இனவாதம்,மதவாதம்,பிரதேச  வாதம்,மொழி வாதம் என்பன என்னிடத்தில் இருந்ததில்லை,எல்லோரும்,தேவைகளும்,உணர்வுகளும் உள்ள மனிதர்கள் என்ற பொது எடுகோலை மையமாக கொண்டே செயற்பட்டுள்ளேன்.தொடர்ந்தும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறே செயலாற்றுவேன்.

அன்று நாம் வெளியேற்றப்பட்டு வந்த போது எம்மால் கொண்டு வரப்பட்ட கல்வி இன்று எம்மை பல் துறையில் முன்னேறிச் செல்ல உதவி புரிந்துள்ளது.மாணவ சமூகம் பல் துறையில் தமது திறமைகளை வெளிகாட்டிவருவது பாராட்டுக் குரியது.அதே போன்று குறிப்பாக கல்வி துறையின் பால் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பது எனது ஆசைாயகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.




2 comments:

Powered by Blogger.