சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டும் ஜனாதிபதியின் சுதந்திர தின உரை
(நவமணி பத்திரிகையில் கடந்தவாரம் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கம் இது)
இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களும் சம உரிமைகளுடன் வாழ்வதே சிறந்தது. இன ரீதியாகவும் மத அடிப்படையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்த முற்படுவது பயங்கரவாத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சமமானதாக கருதப்படும். நாம் சிறமப்பட்டும் தியாகங்களைச் செய்தும் வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது இந்நாட்டில் வாழும் அனைவரதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 65 ஆவது சுதந்திரதின உரையில் அலுத்திக் கூறியுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொன்டாட்டத்தில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். நாடு இன்று இருக்கின்ற நிலையில் அவரது இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'மத வாதத்தைப் போன்று இன வாதமும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். யாராவது இவ்வாறான பிளவை ஏற்படுத்த முயற்சி செய்வார்களானால் அது நாட்டைப் பிளவு படுத்த எடுக்கும் முயற்சியாகும். நாம் அதற்கு இடமளிக்க மாட்டோம். இந்நாட்டைக் கைவிட்டுச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் டயஸ்போராவை விட இந்நாட்டில் வாழும் மக்கள் உன்னதமானவர்கள். அதனால் நீங்கள் உங்கள் அயலவரை நம்புங்கள்' என்றும் ஜனாதிபதி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாக இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பரவாலாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் இந்நாட்டை வெளிநாட்டு உதவியுடன் கூறு போட முற்படுகின்றனர். திட்டமிட்ட அடிப்படையில் இந்நாட்டில் 2030 ஆம் ஆண்டளவில் பௌத்தத்தைப் பூண்டோடு அழித்து இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். ஜிஹாத் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் யுத்தம் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முகம் கொடுக்கும் வகையில் பங்ககர்களை உள்ளடக்கியதாக சவுதி அரேபியாவின் உதவியுடன் பள்ளிவாசல்களை நிர்மாணிக்கின்றனர். ஹலால், மற்றும் சரீஆ என்ற அடிப்படையில் பௌத்த மக்கள் மத்தியில் இஸ்லாத்தை திணிக்க முற்படுகின்றனர். ஹலால் சான்றிதழ் வழங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பெற்றுக் கொள்ளும் கட்டணம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு வழங்குகின்றது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பீதியைக் கிளப்பி வருகின்றனர்.
இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பொதுபல சேனா, சிங்ஹலயே ராவய அமைப்பு, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய பிக்கு முன்னணி போன்ற அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான ஆதாரமற்ற நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்த அச்சத்தையும் சந்தேகத்தையும் எற்படுத்தி வருகின்றனர். அத்துடன் இவர்கள் முஸ்லிம்களது வர்த்தக வாணிப வளர்ச்சியை இலக்கு வைத்து இந்த செயற்பாடுகளை முன்வைத்து வருவது தெளிவாகின்றது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற வர்த்தக வாணி நிலையங்களின் பெயர்களை அடையாளப்படுத்தி அவற்றில் பொருட்களை வாங்க வேணடாம் என்று பொளத்த மக்களை வலியுறுத்தியும் வருகின்றனர் நாளடாளவிய ரீதியில் முஸ்லிம் வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருப்பதோடு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமோ அனைத்து செயற்பாடுகளும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இன, மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படுவது பிரிவினை வாத்திற்கு துனை பேவதாக அமையும். அதற்கு இடமளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பது முஸ்லிம்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கின்ற. முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுககப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட இன, மத அடிப்படையிலான பிரச்சினைக்கு தூபமிடுவதாகவே நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.
அவ்வாறாயின் எதிர்காலத்தில் இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மெற்கொள்ளப் படும்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொலீசாரும் பக்கசார்பற்ற முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
கடந்த காலங்களில் பள்ளிவாசல்களுக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் வன்முறையாளர்கள் அவர்களது பலத்தைப் பிரயோகிக்கும் வரையில் சட்டம் ஒழுங்கைப்பாதுகாக்க வேண்டிய பொலீசார் நடுநிலையக செயற்படாததும் மேலிடத்து உத்தரவு என்ற அடிபப்டையில் நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனப் போக்குடன் நடந்து கொண்டமையும் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
அரசாங்கம் இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களையும் அரவனைத்துச் செல்லும் கௌ;கையைக் கடைபிடிப்பதாயின் அதுவே அரச ஆட்சியியல் தத்துவமாகவும் அமைய வேண்டும். வெறுமனே பேச்ளவில் மட்டும் அன்றி அது நடைமுறையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும். இன, மத ரீதியான ஒற்றுமைக்கு புரம்பான பிரச்சாரங்களைச் செய்து மக்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தூபமிடம் அமைப்புக்கள் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது ஊக்கமளிக்கும் சக்திகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரிகளும் பக்கசார்பற்ற முறையில் கருமமாற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். அரசாங்கத்தின் எல்லா இனங்களையும் அரவனைத்துச் செல்லும் கொள்கைபற்றி எல்லா அதிகாரிகளும் அறிந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்க வேண்டும். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலை இருக்கக்கூடாது.
அதேநேரம் முஸ்லிம்களும் நாம் சவுதி அரேபியா அல்லது ஈரான் போன்ற முஸ்லிம் நாடொன்றில் வாழுகின்றோம் என்ற நிலையில் செயற்படக் கூடாது. நாம் வாழ்வது பல்லின சமூகங்களைக் கொண்ட முஸ்லிம் அல்லாத நாட்டில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது இந்நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேனும் வகையில் முன்மாதிரியாக வாழவேண்டியது எமது பொறுப்பாகும். எமது மத, கலாச்சார செயற்;பாடுகள் ஏனைய இனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது. எம்மீதுள்ள பொறுப்பை உணர்ந்தவர்களாக செயற்படும் போது பிரச்சினைகள் சந்தேகங்களைத் தனித்து அந்நியோன்யமாகவும் நட்புரவுடனும் வாழும் நிலையை உறுதிப்படுத்த முடியும்.
Post a Comment