முஸ்லிம்கள் மாற்று சமயத்தவர்களுக்கு பிரியாணி கொடுக்கும் போது..!
(அஸாம் அமீர்)
நீண்ட நாட்களின் பின் ஒரு சிங்கள நண்பியிடம் இருந்து அழைப்பு வந்தது. அண்மையில் புத்தகயா போய் வந்த அவருக்கு, நம் நாட்டு முஸ்லிங்கள் பற்றி அங்கு பேசிக்கொண்ட ஒரு விடயம் மூளையை குடைய, சரி உண்மைதானா என அறிய எனக்கு போன் போட்டு இருக்கிறார். விடயத்தை சொல்லி கேள்வியையும் கேட்டார்.
"முஸ்லிங்கள் மற்ற மதத்தவர்களுக்கு பிரியாணி கொடுக்கும் போது அதில் எச்சில் உமிழ்து விட்டுதான் கொடுப்பார்களாமே....உண்மையா? " என்று கேட்க ஒரு கணம் அசந்தே விட்டேன்.
இஸ்லாமிய எதிப்புப் பிரச்சாரம் சிங்களவர்கள் மத்தியில் கொஞ்சக் காலமாகவே அதிகமாகி வருவதை யாவரும் அறிவோம். ஒலி வாங்கியில் வாங்கு சொல்வதற்கான தடை, குர்பான் கொடுக்க முட்டுக்கட்டை, அனுராதபுர தர்கா தகர்ப்பு, தம்புள்ளைப் பள்ளி உடைப்பு, ஹலாலூக்கு எதிரான நடவடிக்கை, நாரம்மல முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை, நோலிமிட் மீதான தாக்குதல் என்று லிமிட்டே இல்லாமல் நீண்டு செல்கிறது பட்டியல்.
"இது ஒரு சின்ன குழுவின் வேலை பெரிதாய் எடுக்க வேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று அதிகாரத் தரப்பில் இருந்து எமது தலைமைகளுக்கு சமாதானம் சொல்லப்பட்டது. அதை என்னைபோல போல பாமரன்கள் நம்புவதை தவிர வேறு நல்ல வழி இருந்ததாக தெரியவில்லை.
மாற்று சமூகத்தில் முஸ்லிம்களிடம் இருந்த நல்லபிப்பிராயம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இறுதியில் எஞ்சி இருந்தது என்னவோ நாம் கொடுக்கும் பிரியாணியிலும் வட்டிலப்பதிலும் தான். அதையும் விடவில்லை பௌத்த மத தீவிரவாதிகளின் சதி.
நாலு பக்கம் விசாரித்து பார்த்ததில் இன்னும் கூடுதல் தகவல் கிடைத்தது. எனது நண்பனுடன் வேலை செய்யும் பெளத்த சகோதரர்கள் அண்மைக் காலமாக ஹலால் சின்னம் இல்லாத பொருட்களையே தேடி வாங்குவார்கலாம். ஒருமுறை வாங்கிய யோக்கட்டில் ஹலால் சின்னம் இருக்க அனைவரும் அதை வீசியே விட்டார்களாம். இன்னொரு புறம் முஸ்லிம் என்றால் வீடு வாடகைக்கோ விற்பனைக்கோ இல்லை என்று மறுக்கிறார்களாம் சிங்களவர்கள்.
போத்துக்கேயர் காலத்திற்கு முன் இருந்து, அண்மையில் ஜெனிவா வரை இலங்கைக்கும் சிங்களவர்களுக்கும் முட்டுக்கொடுத்த முஸ்லிம்களிடம் இவ்வளவு வெறுப்புவர என்ன காரணம் என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய விடயமாக இருக்கிறது.
இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றைப் பார்க்கையில், 1400 வருடங்களுக்கு முன்பே அதாவது முஹம்மது நபி (சல்லலாஹு அலைஹிவசல்லாம்) அவர்களின் காலத்துக்கு முன்பே அரபியர்களின் தொடர்பையும், இங்கு வாழ்ந்த முஸ்லிம்களின் இருப்பையும், கி.மு 326ல் கிரேக்க மாலுமி ஒனோஸ் கிறிடோசால் மற்றும் கி.பி 150ல் தொலமி எழுதிய குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
இலங்கை முஸ்லிம்களின் ஆதி வரலாற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் இங்கு வாழுகின்ற வரலாற்று ஆதாரங்கள் மறுக்கவோ அசைக்கவோ முடியாதவைகள் .
இருந்தும் முஸ்லிகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக, தாங்களது கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பௌத்த தீவிரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் மாறுபட்ட பல கருத்துக்கள் நிலவுகின்றது. சமூகப் பிரச்சனைகளை கணித சமன்பாடுகள் போல தீர்க்க முடியாது, இன்னும் இது தான் மிகச் சரியான வழிமுறை என்று யாருக்கும் உத்தரவாதமும் தரமுடியாது.
இந்த பிரச்சினையில் அதிகம் இழுபட்டுக் கொண்டது என்னவோ அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தான். ஹுதைபியா உண்டன்படிக்கை போல் விட்டுக்கொடு என்று ஒரு கூட்டமும்; அதிகம் மௌனம் காக்கிறீர்கள், பதர் யுத்தம் போல் போராடி தக்க பதிலடி கொடு என்று சிலரும் இரு வேறு பக்கங்களில் இழுத்துக்கொள்ள, பௌத்தர்களை மட்டுமின்றி முஸ்லிங்களையும் சமாளிக்க வேண்டி இருந்தது ஜம்மியத்துல் உலமவுக்கு.
போராடுவதற்கும், சவால் விடுவதற்கும் நாம் ஒன்றும் அணு குண்டு வைத்திருக்கும் இஸ்ரேலோ அமரிக்கவோ அல்ல. பெரும்பான்மை சமூகத்தில் வாழும் நமகென்று சில கடைமைகளும் வரம்புகளும் இருக்கிறன. நம் எந்த செயற்பாடும் மற்றவரது இருப்புக்கோ கலாச்சார விழுமியங்களுக்கோ பாதிப்பாய் அமைந்திடலாகாது. எதிலும் அவர்களுக்கு சந்தேகம் வராமல் நடப்பது மிக அவசியம். அவர்களுடனான கலந்துரையாடல்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் எம் கண்மணி நாயகம் சல்லலஹு அலைஹிவசல்லாம் அவர்களின் உம்மத்துகள் நாங்கள் என்பதை பறை சாற்ற வேண்டும். இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எம் மீதான இந்த வெறுப்பலைக்கு நம்மவர்கள் பலரின் துர் நடத்தைகளும் ஒரு காரணமாகும்.
ஹலாலை விட்டு விடவேண்டும் என்பது இன்னொரு வாதம். ஆனால் விட்டுக் கொடுத்தால் ஒவ்வொன்றாய் இழக்கவேண்டி வரும் என்கிறது ஜம்மியத்துல் உலமா சபை.
பலாங்கொடையில் உள்ள பிரபல்யனமான சூபித் தளமான, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜீலானி குகைப் பள்ளிவாசல்,பல தசாப்த காலமாகவே பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இழுபறியில் இருந்த விடயமாகும். இது தொடர்பாக தொடர்ந்தும் பொதுபலசென, சிங்கள ராவய, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபை, மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில், பள்ளிவாயல் கட்டடம் இடிக்கப்பட்டு, அப்பகுதி ஏப்ரல் 30ம் திகதிக்கு முன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைகளத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், தேவை ஏற்படின் இராணுவ உதவி நாடப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
சுயாதீனமாக விசாரிக்க நான் எடுத்த முயற்சியில் உலமா சபையின் பல தொலைபேசி இலக்கங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியேயே இருப்பதை தெரிந்துகொண்டேன். அலுவலகத்தில் வேலை செய்யும் சிலரோ இது பற்றி தெரியாது என கையை விரித்து விட்டனர்.
அதிகமாக தப்லிக் ஜமாஅத்தின் ஆதிக்கம் நிறைந்த அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை, சூபிகளின் பள்ளியை விட்டுக் கொடுப்பதில் கொஞ்சம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்திருக்கிறது போலத் தோன்றுகிது.
இச்சம்பவமும், பொதுபலசெனவின் மகரகமை '10 அம்ச' பிரகடனமும், விட்டுகொடுத்தால் ஒவ்வொன்றாய் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்னும் வாதத்துக்கு உறுதி சேர்க்கிறது. மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாக ஜாதிக ஹெல உறுமைய உட்பட பௌத்த கடும் போக்கு அமைப்புகளுடன் 13 தடவைகளுக்கு மேல் பேச்சுவாரத்தை நடத்தியுள்ள ஜமியதுல் உலமா சபைக்கு, இவர்களின் அடுத்த நகர்வுகளை எளிதாய் எதிர்வுகூறக் கூடியதாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்கையில் இப்போது நம் கண் முன் தெரிவது கடற் பனிமலையில் முனை (Tip of the iceberg); முஸ்லிம்களுக்கு எதிரான சதி வலை இன்னும் ஆழமானது என்றே சொல்லலாம். மேலும் இவை அனைத்தும் உயர் மட்ட அதிகாரத் தரப்பின் ஆசிர்வாதத்துடன் நடக்கும் நாடகங்களே என்பது வெளிப்படை.
எப்படி இருந்தாலும் தம்புள்ளை பள்ளி விவகாரத்தை கையாண்டதைப் போல் இப்பிரச்சினைக்கான தீர்விலும் முஸ்லிம் தலைமைகளும், ஜமியதுல் உலமாவும் மிக கவனமாகவும் தீர்க்கமாகவும் முனேறுவதைப் போல தோன்றுகின்றது.
முஸ்லிங்களுக்கு வேறாக ஹலால் பொருட்களை வழங்கும் புதிய முடிவு நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை. வியாபரரீதியகவும் இத் திட்டம் சாத்தியம் அற்றது போலவே தோன்றுகிறது. ஒரே பொருளை ஹலால் முத்திரையுடனும் முத்திரை இல்லாமலும் இல்லாமலும் விநியோகிப்பது என்பது, "அதான் இது" என்ற பழைய வாழைபழ பகிடியை ஞாபகப் படுத்துகிறது. இதன் விளைவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேலும் முஸ்லிங்களை ஹலாலை சாட்டாக வைத்து தனிமைப் படுத்தினால், அதுவே அவர்களை எல்லா உற்பத்தி துறைகளிலும் தனித் தன்மையுடன் வளர்ச்சி பெற உதவும் என்னும் எதிர் மறை விளைவை பெளத்த தீவிரவாதிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள் போலும்.
இத்தருணத்தில் ஒரு தலைமைக்கும் அதன் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டியது நம் கடமையாகும். வேறுபட்ட குழுக்களை ஒற்றுமைப் படுத்துவது நம் தலைமைகளின் கடமையாகும். மேலும் முஸ்லிங்களின் வரலாற்றையும், எம் மீதான பொய்க் குற்றச் சாட்டுக்களையும் அதற்கான பதில்களையும் ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாய்த் தெரிந்திருக்க வேண்டும். மாற்று மத நண்பர்களுக்கும் அவற்றை பக்குவமாய், அன்பாய் எத்திவைக்கும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அசம்பவீதம் ஏற்படுகையில் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாகவும் தயாராகவும் இருக்க வேண்டும்.
ஹலால் தொடர்பான பிரதான குற்றச்சாட்டு, உலமா சபை ஹலால் சான்றில் மூலம் வருடத்துக்கு 7000 மில்லியன் வருமானம் ஈட்டுவதாகவும் அப் பணம் பள்ளி கட்டுவதற்கும், ஷரியாச் சட்டத்தை அமுல் படுத்தவும், ஜிஹாத் குழு ஒன்றை அமைத்து சிங்கள பௌத்தர்களை அழிக்க பயன்படுத்த படுகிறது என்பதாகும்.
ஆனால் ஹலால் சான்றிதழ் பொருளினதும் வியாபாரதினதும் தன்மைக்கு ஏற்ப ஒரு பொருளுக்கு மாதாந்தம் 100 ரூபா முதல் 2000 ரூபா வரையே அறவிடபடுகிறது என்றும், இது வரை பதிவுசெய்யப்பட்ட 204 நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் மாத வருவாய் சுமார் 1.5மில்லியன் என்றும், செலவுகள் போக மிஞ்சுவது வெறும் இரண்டு இலட்சம் மட்டும் தான் என்றும், இதன் கணக்கு வழக்குகளை யார் வேண்டுமானாலும் அதன் கணக்காய்வு அறிக்கைகளில் பார்வையிடலாம் என குற்றச் சாட்டை ஒரேயடியாய் மறுக்கிறது உலமா சபை.
இன்னொரு புறம் சில முஸ்லிம் சகோதர்கள் உலமா சபை ஹலால் விடயத்தை வியாபாரமாகி அதிக பணம் சம்பாதித்தாக குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு விடயத்தை நிறுவன ரீதியாக நெறிப்படுத்தி அமுல் படுத்த அதிகளவான நிதி தேவைப்படும் என்பது யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதே முறையில் தான் உலகெங்கிலும் ஹலால் சான்றிதல் வழங்கபடுகிறது. இதில் குற்றம் காணும் புத்தி ஜீவிகள் இதை வேறு எப்படி நடைமுறைச் சாத்தியமாகலாம் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.
ஒரு புறம் இயக்கங்களாக பிரிந்து செயற்படும் முஸ்லிம் சகோதரர்களில் சிலர், உலமா சபை மீதும் அதன் தலைமை மீதும் ஏலவே இருந்த வெறுப்பைத் தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள; மறுபுறம் சில அரசிய வாதிகள் இந்த பிரச்சினையை பொறுப்பற்ற விதத்தில் தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இது முஸ்லிங்களை எவ்வளவு ஆபத்தில் தள்ளிவிடும் என்பதை இவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி ஸ்ரீ லங்கா உலமா சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்க ஒரு குழு முயல்வதாகவும் ஒரு தகவல்.
இப்படித் தான் மாவனல்லை கலவரத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் எனும் அமைப்பு எல்லா இயக்கத்தினரையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. அடிக்கடி தலையை வெளியே கட்டும் இந்த அமைப்பு அதன் நோக்கத்தில் எவ்வளவு தூரம் முனறியுள்ளது என்பது மீளாய்வு செய்யப்படவேண்டும்.
"எங்கே வாசித்தாலும், யார் சொன்னாலும், அது நானாக இருந்தாலும் கூட நீங்கள் சுயமாய் சிந்தித்து பகுத்தறிவுக்கு சரியாய் படாத ஒன்றை நம்பாதீர்கள்" என்பது கௌதம புத்தரின் வாக்காகும். ஹலால் உட்பட பல குற்றச்சாட்டுகளை அநேக பௌத்தர்கள் மட்டும் இன்றி சில முஸ்லிம் சகோதரர்களும் நம்பியது வேதனைக்குரியது.
குற்றச் சாட்டுக்களை நம்புபவர்கள் யாராக இருந்தாலும் குற்றச்சாட்டை வருமான வரி திணைக்களதிடமோ, போலிசிடமோ முறையிட்டிருக்கலாம். நம்பிக்கை இல்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம். அல்லது அதற்கான ஆதாரங்களை ஊடகங்கள் மூலம் பகிரங்கப் படுத்தலாம். இவை எதுவுமிற்றி வதந்திகளைப் பரப்புவது புத்த தர்மத்துக்கு முரணானது என்பதை எம் சிங்களசகோததர்களுக்கு புரியவைக்க வேண்டும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் எம் சகோதரர்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளட்டும், மேலும் அவதூறுக்கான தண்டனை என்ன என்பது எல்லோரும் அறிந்ததே.
மற்றுமொரு குற்றச்சாட்டு மத்தியகிழக்கில் உள்ள 80,000 பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவிட்டர்கள் என்பதாகும். இதை பொதுபலசென சொல்லும் வரை யாரும் அறிந்திடாத ஒரு புள்ளிவிபரம். இவர்கள் சொல்வது உண்மை என்றால் இவ்வளவு பேர் பெளத்த சமயத்தை விட்டு போக பெளத்த மதத்திலோ அல்லது அதை விட்டு விட்ட மக்களிலோ பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது என்றே கருதவேண்டும். அதை விடுத்து இதை இஸ்லாத்தில் உள்ள குறையாக எப்படி பார்க்கலாம். இருந்தும் இந்த தகவலின் எங்கிருந்து பெறப்பட்டது என்பது போதுபலசெனவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
இது தவிர உதிரிகளாக பல குட்டி கதைகள் வேறு. நோ லிமிட் கடைத் தொகுதிகளில் சிங்களவர்களுக்கு குழந்தைப் பேறைத் தடுக்கும் இனிப்புப் பண்டங்கள் கொடுக்கபடுவதாகவும், ஹலால் உணவுகள் மந்திரிக்கபட்டவை, அதை உண்டால் முஸ்லிம் ஆகிவிடுவீர்கள் என்றும் பல சிறுபிள்ளைத் தனமான வதந்திகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டு வருகிறன.
எந்த நேரமும் இலங்கையை தாக்கி நாட்டை பிடிக்க தயாராக இருக்கும் 20,000 தற்கொலைப் போராளிகள் இலங்கையில் இருக்கின்றனர் என்றும், எப்போதும் வெள்ளை நிற ஜுப்பவுடனும் தாடியுடனும் இருக்கும் அவர்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று விஷேட பயிற்ச்சி பெறுகின்றனர் என்றும், குழுக்களாகவும் மக்களுக்கிடையிலும் வியாபாரத் தளங்களிலும்இவர்கள் கலந்திருகிறார்கள் என்றும் அனேக சிங்களவர்களை நம்ப வைத்திருகிறார்கள் இந்த விஷமிகள். பல்லியை பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்து டைனோசர் என்று சொல்லும் கூட்டத்துக்குள் வந்து மாட்டியிருக்கிறோம்.
இவைகளை நம்பும் சிங்களவர்களின் அப்பாவித் தனத்தை நினைத்து சிரிப்பதா இல்லை, பொதுபலசெனவின் சமாதியத்தை நினைத்து வியல்வதா என புரியவில்லை.
எது எப்படியோ எம்மை ஒரு பெரும் ஆபாயம் சூழ்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாகவே உணர முடிகிறது. இலங்கை முஸ்லிங்கள் கலவரங்களை கண்டிராதவர்கள் அல்ல. சுதந்திரம் அடைவதற்கு முன் 1915லும் அதன் பின் 2001இல் மாவனல்லையிலும் இலங்கை முஸ்லிங்கள் கலவரங்களை எதிர்கொண்டவர்கள்.
ஆபத்து வரும் முன் காப்பதும், அதை எதிர் கொள்ளத் தயாரயாரக இருப்பதும் சமயோசிதமான ஒரு சமூகத்தின் கடமையாகும்.மற்று சமூகத்துடன் கலந்து வாழும் முஸ்லிங்கள் பதட்டமான காலங்களில் தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இரவு வேளைகளில் பெண்கள் சிறுவர்கள் முதியவர்களை தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். பக்கத்துவீட்டு மாற்று மதத்தவர்களிடம் சுமூக உறவைப் பேணுவது கட்டாயமாகும். 1983ம் ஆண்டு கலவரத்தில் சிங்களவர்களால் பாதுகக்கபட்ட தமிழர்கள் ஏராளம். உங்கள் வீட்டுக்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்ற முன் ஏற்பாடுகளை பற்றி சிந்தித்து தயாராக இருப்பது சிறந்தது. இரு வாலிபர்கள் இருக்கும் வீட்டில் பாதுகாப்புக்கு ஒரு தடி வைத்திருப்பதில் ஒன்றும் தப்பில்லை.
வதந்திகளைப் பரப்புவக்தை முற்றாக கைவிட வேண்டும். இந்த பொருள் ஹலால் அந்த பொருள் ஹராம் வாங்காதீர்கள் என்று வரும் குறுந் தகவல்களையோ மினஞ்சல்களையோ விசாரிக்காமல் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். மேலதிக தகவல் தேவைப்படின் உலமா சபையின் துரித இலக்கத்தைத் (0117425225) தொடர்பு கொள்ளலாம். (அநேக வேளைகளில் இந்த இலக்கமும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது தான் முஸ்லிங்களின் சோகம்)
உலமா சபை தொழுகை நேரங்களையும் மற்ற விடயங்களையும் வெளியிடும் குறுந்தகவல் சேவையை, அவர வேளைகளில் முஸ்லிங்களுக்கு தகவல் சொல்ல பயன்படுத்தலாம்.
அண்மைக்கால பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சு, இவ்வாறான சந்தர்பங்களில் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது. 24 மணி நேரம் இயங்கும் இந்த விசேட பிரிவின் தொடர்பு எண் 0113182904, 011318875 பெக்ஸ் இலக்கம் : 0112423944. இது தவிர உங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம், பிரதேச அரசியல் வாதி, கிராம சேவகர் மற்றும் மதத் தலைவர்களது தொடர்பு இலகக்களை தெரிந்து வைத்திருப்பது ஏதாவது ஒரு மூலையில் இருந்து நாமக்கு உதவி வந்து சேர உதவிடலாம்.
அனைத்தையும் விட அல்லாஹ் அருளிய துஆ எனும் ஆயுதத்தை மறந்துவிட கூடாது. எங்கிருப்பினும் எம்முடன் இருக்கும் அல்லாஹ்வின் உதவியை மறக்காமல் தொடர்ந்தும் கோருவோம். இஸ்லாத்தையும் அவனது அடியார்களையும் பாதுகாக்க அவன் போதுமானவன்.
மாஷா அல்லாஹ்.... நல்ல கட்டுரை, நல்ல அறிவுரை. ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
ReplyDeleteஇதெல்லாத்தையும் விட புத்தி சொல்ற நீங்க உட்பட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஜுஃமாவைபோல் ஸுபஹ் தொழ மஸ்ஜிதுக்கு வர சொல்லுங்க அப்படி நோன்புகாலம்போல் 365 நாளும் ஸுபஹ் நேரத்தில் மஸ்ஜித் நிறம்பி வழியும் யெனில் நீங்க கூறும் எந்த புத்திமதியும் அமுல்படுத்தபட முன்னர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் !!! முஸ்லிம் சமூகம் பிரயோஜனதிட்காக அனுபபட்டவர்கள் அவர்கள் பிரயோஜனம் அளிப்பதை மறந்து அடுத்தவர்களைபோல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் மார்கம் உண்டு என்று செயல்பட்டால் பிரயோஜனமற்றவர்களாகி போய் விடுவர் பிரயோஜனம் அற்றவைகளை யாறும் கூட வைதிருப்பதில்லை குப்பை தொட்டியில் எரிந்துவிடுவதே வழமை??? அதன் சாயல்தான் இன்று உறுவாகி கொண்டிருக்கிறது
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பின் காட்டுக்கோப்பான ஒரு பத்தி வாசித்த திருப்தி, நன்றி JAFFNA MUSLIM...சிறப்பான கருத்து வெளிப்பாடு, தொடர்ந்து எழுதுங்கள் எழுத்தளரே...
ReplyDeleteசிறந்த கருத்து!
ReplyDelete011318875 இலக்கத்தில் ஒரு இலக்கம் குறைகிறது!
sahotharare! neengal acju witku saathahamahawa allazu paathahamahawa eluthiyirukkireerhal?
ReplyDeleteஅருமையான கட்டுறை தயவு செய்து இக்கட்டுறைய எமது நாட்டில் வெளிவரும் ஏனைய நாடெடுகளில் பிரசுரிக்கும் .அல்லாஹ் உங்களுக்கு இரு உலகிலும் நட்பக்கியங்களை தத்தருல்வனாக (ஆமின் )
ReplyDeleteமாஷா அல்லாஹ்.
ReplyDeleteசிறந்த ஒரு ஆக்கம்.
இறைவன் உமது அறிவை மேலும் விருத்தியாகுவானாக ! ஆமீன் .
wow, mind-boggling after long time i read ,very clearly point out every thing ,divine article jazakallhu kara.
ReplyDelete