கல்முனையை அச்சுறுத்தும் டெங்கு..!
(அகமட் எஸ் முகைடீன்)
தீவிர டெங்கு கட்டுப்பாட்டு ஆலோசனைக் கூட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று (08.02.2013) மாலை நடைபெற்றது.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விசேட அதிதிகளாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.நிஜாமுடீன், மலேரியா தடுப்பு இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மர்சூக், பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் டாக்டர் ஏ.அசீஸ், பிரதேச வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் இவ்வருடத்தில் இம்மாதம் 08ம் திகதிவரை மருதமுனையில் 16பேரும் கல்முனைக்குடியில் 12 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளார். சென்ற ஆண்டுடன் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது இவ்வாண்டு குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.
மக்களிற்கு டெங்கு நோய் தொடர்பான அறிவு இருந்தபோதிலும் நடத்தை மாற்றம் தேவைப்படுவதாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் இங்கு உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் நுளம்பின் வாழ்க்கை வட்டம் மற்றும் டெங்கு நோய் எவ்வாறு தொற்றுகின்றது என்பன தொடர்பான அறிவு பொது மக்களிற்கு இருந்தபோதிலும் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நடத்தை மாற்றம் ஏற்படுவது கற்றவர்கள் மத்தியிலும் குறைவாக காணப்படுகின்றது. அறிவியலாளர்கள் கூறுவது போன்று நடத்தை மாற்றம் ஏற்படுவதற்கு குறித்த விடயம் தொடர்பான அறிவு, திறன், மனப்பாங்கு என்பன காணப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மலேரியா தடுப்பு இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மர்சூக் உரையாற்றுகையில். நுளம்புகளை பொறுத்தவரையில் பல விதமான நுளம்புகள் காணப்படுகின்றன. எல்லா வகையான நுளம்புகளும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்புவதில்லை. ஒவ்வொரு வகையான நுளம்புகள் ஒவ்வொரு நோய்க்கு காரணமாக காணப்படுகின்றது. அதேவேளை அவைகள் பெருகுகின்ற இடங்களும் வித்தியாசமாக அமைகின்றது. டெங்கு, மலேரியா, யானைக் கால் போன்ற நோய்களை பரப்புகின்ற நுளம்புகள் பெருகுகின்ற இடங்களும் வித்தியாசமானதாக காணப்படுகின்றன.
சுரட்டை, கப் வகைகள், டயர்கள், டின்கள் போன்றவற்றில் நீர் தேங்குகின்ற சந்தர்ப்பத்தில் டெங்கு நுளம்பு பரவுகின்ற இடங்களாக அமைகின்றது. நீர் இல்லாதபோது முட்டையாக காணப்பட்டு எப்போது நீரைக் காணுகின்றதோ அப்போது தெறி புழுவாக மாறி நுளம்பாக மாறுகின்றது.
தற்போது இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு ஏற்பட்டதனால் இவ்வாறான இடங்களை மக்கள் துப்பரவாக வைத்திருக்கின்றனர். இருந்தபோதிலும் நுளம்பு தற்போது மாற்றமடைந்துள்ளது அவைகள் முட்டை இடுகின்ற இடங்கள் அகற்றப்பட்டுள்ளமையினால் அதற்கு ஏதுவாக இருக்கின்ற இடங்களில் முட்டையை இடுகின்றது. இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட இடங்களாக கூரைப் பீலிகள், கிணறுகள், கொங்றீட்டின் மேல் பகுதியில் உள்ள தவாழிப்பு என்பன காணப்படுகின்றன.
டெங்கினை பரப்புகின்ற வளர்ந்த நுளம்பானது தொங்க விடப்பட்டுள்ள ஆடைகளுக்குள், மேசைகளுக்கு கீழ் போன்ற இருட்டான இடங்களில் வீடுகளிற்குள் காணப்படும். சுவரில் இருக்கின்ற நுளம்புகலெல்லாம் மலேரியா நுளம்பாகும். டெங்கு நுளம்பானது காலையில் 5 மணி தொடக்கம் 10 மணி வரையும் பின்னேரம் 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையும் கடிக்கும். மலேரியா நுளம்பானது இரவு நேரத்தில் மட்டுமே கடிக்கும்.
சுகாதார திணைக்களத்தால் மாத்திரம் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்த முடியாது. எல்லா நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதோடு மக்கள் தானாக உணர்ந்து செயற்படுவதன் மூலம்தான் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் உரையாற்றுகையில் கல்முனை மாநகர சபையை பொறுத்தளவில் நாங்கள் விழிப்பாக இருக்கின்றோம். அடிக்கடி எங்களுக்கு இது தொடர்பில் வருகின்ற முறைப்பாடுகளை முடியுமானவரை கவனத்தில் கொண்டு தீர்வினை வழங்கி வருகின்றோம். இதற்கென மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து செயற்பட்டுவருகின்றது. மாநகர எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அவ்வப்போது கோரப்படுகின்ற தேவைப்பாடுகளை நாங்கள் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றோம். டெங்கினை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு மாநகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றைவிட ஒவ்வொரு தனி மனிதனிலுமே தங்கி இருக்கின்றது. இவ்வாறான பல கூட்டங்களை நடாத்தி மக்கள் மத்தியில் விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமாத்திரமல்லாது இங்கு வருகை தந்துள்ளவர்கள் செவியுற்ற விடயங்கள் தொடர்பாக உங்களது அயலவர்கள் நண்பர்கள் உறவினர்களுடன் உரையாடி அவர்களிடத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும். மாநகர சபையினால் இது தொடர்பில் என்னென்ன விடயங்கள் மேற் கொள்ளப்பட வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து தருவதங்கு நான் தாயாராக உள்ளேன் எனக் கூறினார்.
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டமிடல் தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.நிஜாமுடீன் உரையாற்றுகையில். கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் காணப்படுகின்ற 31 கிராம சேவகர் பிரிவுகளிலும் வெவ்வேறாக விழிப்புணர்வு கூட்டங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (12) முன்னதாக நடாத்தவுள்ளோம். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (14) மேற் குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படுகின்ற வீடு, வெற்றுக் காணி, வடிகான் என்பவற்றை சென்று பார்வையிட்டு டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களை அடையாளம் காண்டு அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் சுத்திகரிக்குமாறு உரிமையாளர்களை பணிக்கவுள்ளோம். இதனைத் தொடர்ந்து வௌளிக்கிழமை (15) மீண்டும் மீளாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Post a Comment