மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க ஊசி மருந்து
மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் வகை யில் ‘தடுப்பு மருந்தை’ சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இதன் சோதனை விரைவில் நடக்கும் என்றும் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் சிலி பல்கலை உள்ளது. இதன் செல் டைனமிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் ஜுவான் அசஞ்சோ தலைமையில் மது போதை ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. வெற்றிகரமாக, மதுபோதை பழக்கத்தை தடுக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாக குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ஜுவான் கூறியதாவது: மதுபோதைக்கு அடிமையாவது ஒரு நோய். மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். மது பழக்கத்தை நிறுத்துவது சாதாரண வேலையல்ல. திடீரென மதுவை நிறுத்தினால், உலகில் இருந்து தனித்து விடப்பட்டதுபோல, வெட்கமாக உணர்வார்கள். அவர்களது ஆளுமைத்திறன், சமூகத்துடனான பழக்க வழக்கங்கள் ஆகியவையும்கூட மாறிவிடும். அவர்கள் மனஉளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, ரசாயன ரீதியாக இதை கையாள்வதுதான் சிறந்தது என்பதால் மருந்தை உருவாக்கியுள்ளோம். மதுபோதையை ஒழிக்க மருந்து கண்டறிந்திருப்பது உலகில் இது முதல்முறை.
மதுவை உடலில் கலக்கச் செய்யும் ஜீனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. போதைக்கு அடிமையானவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு சிப் மது அருந்தினாலே தலை கிறுகிறுக்கும், மயக்கம் வரும், குமட்டல், வாந்தி வரும். ஹார்ட் பீட் எகிறும். இப்படியெல்லாம் இருந்தால் அடுத்த சிப் அருந்துவாரா? தடுப்பூசி போட்டுக்கொண்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அதன் வீரியம் இருக்கும். முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. எலிகளை வைத்து இந்த மாதம் சோதனை நடக்க உள்ளது. மனிதர்களை வைத்து நவம்பரில் சோதனை நடத்தப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, போதை தடுப்பூசி 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும்.
Post a Comment