Header Ads



நாட்டுப்பற்றும், தேசியவாதமும்...!



(A.M.Mahir Rashad)

இலங்கையின் சமாதானசகவாழ்விற்கும், அபிவிருத்திக்கும் இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டு...

இன்று இலங்கையில் ஒரு சில இனவாதிகல் நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருந்துவருவதை நிகழ்கால இலங்கையின் நிகழ்வுகளை அவதானிப்போருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிங்கள முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் இலங்கையை ஒரு யுத்த கலமாக மாற்றும் முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் அதிகரித்து வருவதையும்,இந்நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பலமான ஒரு சக்தி இருப்பதையும், அது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் இயங்குவதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இச்சூழ்நிலையில் எமது நிலைப்பாடுகளும், திட்டமிடல்களும் அதற்கான செயற்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பலர் தெளிவற்ற நிலையிலேய இன்னும் இருக்கின்றனர்.இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து அதனைக் காப்பாற்றிட வேண்டியது இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

இது விடயமாக ஜம்மிய்யதுள் உலமாவும், இயக்கங்களும், நிறுவனங்களும், பல தனி நபர்களும் காத்திரமான முறையில் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.இவ்வாறான பங்களிப்புகளையும் செயற்பாடுகளையும் விளங்காத சில பத்வா ஷைகுகள் இலங்கையின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைமைகளை கருத்திற் கொள்ளாது அல்லது தெளிவான ஆழமானதொரு நோக்கின்றி “...யானையின் வாலைப்பிடித்த குருடன் யானை ஒரு துடைப்பம் போல என்று வாதாடி குழப்பம் விளைவிப்பது போல்”நடந்துகொள்கின்றனர்.உதாரணமாக;

அண்மையில் ஜம்மியத்துல் உலமாவினாலும், சில தனி நபர்களினாலும், மற்றும் சில நிறுவனங்களினாலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தல்கள் வளங்கப்பட்டது.இவ் அறிவுருத்தளையும்,இன்றைய சூழலையும், எதிர்கால விளைவுகளையும் விளங்காமல் இஸ்லாத்தின் அடிப்படையில் நடுநிலைமையான நோக்கின்றி நாட்டுப் பற்றாம்...!!! தேசியவாதமாம்...!!! என்று “...யானையின் வாலைப்பிடித்த குருடன்” போல் சில பத்வா ஷைகுகள் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு யானையின் மற்றைய பகுதிகளும் அதன் முழு உருவமும் விளங்காமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல.

இன்றைய சூழ்நிலையில் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எமது திட்டமிடல்கள்,செயற்பாடுகள் மற்றும் நாட்டுப்பற்று அல்லது தேசியவாதம் பற்றிய தெளிவுகளை நாம் அறிந்து வைத்திருப்பது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியிலிருந்தும், இஸ்லாமிய வரலாருகளிலிருந்தும் பல உதாரணங்கல் இருக்கும்போது இந்த “யானையின் வாலைப்பிடித்த குருடர்களுக்கு” விளங்காமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல”. உதாரணமாக;

கந்தக் – அகழ்ப்போர்;

பகைவர்களை எப்படி சமாளிப்பது என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஸல்மான்  ஃபார்ஸி(ரலி)யின் தட்காப்புத்தந்திர ஆலோசனையை ஏற்று அதனை செயற்படுத்தியது.

அஷ்ஜஃ கோத்திரத்தைச் சேர்ந்த நுஐம் பின் மஸ்வூத் என்பவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் கூறியது, அதனை செயற்படுத்தியது.
யுத்தம் என்பதே ஒரு தந்திரம்தான் என்ற நபியின் முன்மாதிரி.

போன்ற பல வரலாற்றுச் சம்பவங்களினதும் அதன் படிப்பினைகளினதும் அடிப்படையிலும் இன்றைய இலங்கையின் சூழ்நிலையையும் அதற்கான திட்டமிடல்களையும்,செயட்படுகளையும் விளங்கினால் இவ்வாறானதொரு தெளிவற்ற நோக்கிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.மேலும்;

முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்;

முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் சந்தோசமாகச் சென்றுவருகின்ற சுற்றுலாவாக இருக்க வில்லை. அதுபோல அது வாழ்வாதாரத்தை தேடிய பயணமாகவும் இருக்கவில்லை. அதன் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் முயற்சி செய்யவுமில்லை. மட்டுமன்றி, ஒரு நாட்டிலிருந்து அதனை விட சிறந்த ஒரு நாட்டுக்கான பயணமாகவும் இருக்க வில்லை. மாறாக, அவர் பிறந்து வாழ்ந்த அனைத்து விதமாகவும் விரும்பிய தனது நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய்தார். அவர் நபிமார்களின், முன்னோர்களின் முதுசங்களையும்,புனிதப்பள்ளிவாயலையும் கொண்டுள்ள பூமியை விட்டு பயணித்தார். இதனையே அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது. அது அருள் பாளிக்கபட்டதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கிறது. மேலும், எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்." (03 : 96,97).

நபி(ஸல்) அவர்கள், அந்தஸ்தை உயர்த்த விரும்பிய நாடே மக்காவாகும். அதன் புனிதங்களை பாதுகாக்க விரும்பினார்கள். அதனை சிலை வணக்கத்திலிருந்து பாதுகாக்க முயற்சி செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டிலுள்ளவர்களின் அறிவையும் நடத்தையையும் உயர்த்தவே விரும்பினார். இதனை அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது;

"மனிதனே! கண்ணியமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றியது எது?. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி, உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன்உறுப்புகளைப்) பொருத்தினான்." (82 : 6-8).

நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டின் சமூக, பொருளாதார ஒழுங்குகளை சீர்படுத்த விரும்பினார்கள். அங்குள்ள மனிதர்களிடையேயுள்ள பிரிவினையை நீக்க பாடுபட்டார்கள். பலவீனர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயன்றார்கள். அங்குள்ள சமூகத்துக்கு ஞானம், அழகிய உபதேசம், அன்பு, ஆன் மீகம் போன்றவற்றைக் கொண்டு அழைப்பு விடுத்தார்கள்.

இவ்வாறெல்லாம் பாடுபட்டும் அந்த நபியை அவர்கள் பொய்ப்படுத்தினர். அவரை வேதனை செய்தனர். அவருக் கெதிராக சூழ்ச்சியும் செய்தனர். இறுதியில் அவர் தனது சொந்த நாட்டை விட்டே போகவேண்டிய நிலை வந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு செல்லும்போது பின்வருமாறு கூறினார்கள்;

"அல்லாஹ்வின் மீது ஆணையாக... மக்காவே! நீ அல்லாஹ்வின் பூமியில் அவனுக்கு மிக விருப்பமான இடமாகும். மட்டுமன்றி, நீ அல்லாஹ்வின் புமியில் எனக்கு மிகவும் விருப்பமான பூமியாகும். உன்னில் வசிப்பவர்கள் என்னை வெளியேற்ற முயற்சி செய்திருக்காவிட்டால் நான் இங்கிருந்து வெளியேறி இருக்கவே மாட்டேன்."

மதீனாவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தும் மக்கா மீதான நபி (ஸல்) அவர்களதும், ஸஹாபாக்களதும் விரும்பம் தொடர்ந்திருந்தது. அது இறுதியில் மக்கா வெற்றியாக மலர்ந்தது. அங்கு நீதியை நிலை நாட்டினார்கள். அதனை இணைவைத்தல் என்ற அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தினார்கள்.

இந்த அன்புதான் எமது தாய் நாட்டின் மீதும் எமக்கிருக்க வேண்டும். அதிலே நீதியை நிலைநாட்ட நாம் பாடுபட வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப உழைக்க வேண்டும்.

நாட்டுப்பற்றை அல்லது தேசியவாதத்தை முற்றாக எதிர்ப்பவர்களும், தேசத்தின் மீது நேசமும் நாட்டமும் கொண்டவர்கள் தேசியவாதம் என்பது நாட்டின் மீது அளவிலா அன்பு செலுத்துவதுதான் எனப் பொருள் கொள்வோரும் ஒன்றை விளங்க வேண்டும்; உண்மையில் இயற்கையாகவே நம்மிடம் பிறந்த மண்ணின் மீது ஒரு பாசம் இருக்கவே செய்கின்றது.அதன் எல்லைகளைப் பார்த்திடும் போது கண்கள் இதம் பெரும்,இதயம் அமைதி பெரும்,அத்தோடு இன்னுமொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும்.மனிதனுக்கு பிறந்த பூமியின்பால் பாசம் கொள்வது அவனது இயற்கையோடு ஒட்டியது என்பதோடு இஸ்லாம் நின்று விடுவதில்லை; அது இன்னும் சற்று மேலேயே இதை வளர்த்துள்ளது.

மேலும், தேசியவாதம் என்பது நமது நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை அப்புறப் படுத்துவதுதான் என்றால், இனவாதிகளின் கரங்களிலேயிருந்து இந்த நாட்டை மீட்பதுதான் தேசியவாதம் என்றால்,இந்த நாட்டின் பிரஜைகளின் இதயங்களிலே சமாதானம், சத்தியம்,அபிவிருத்தி, நீதி உணர்வை ஊட்டுவதுதான் தேசியவாதம் என்றால்,நாங்கள் இந்த தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருப்போம். உண்மையில் இஸ்லாம் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தே இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள்;

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மக்காவை நோக்கி “ நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல் : திர்மிதி).

நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின் அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள் மதீனா நோக்கிப் பயணமானார்கள். (அந்நேரம் ஹிஜாபுடைய வசனம் இறக்கப்பட்டு இருக்கவில்லை) நேராக ஆயிஷா (றழி) அவர்களிடம் சென்றார்கள், அப்பொழுது நீர் மக்கா எவ்வாறு இருக்கும் நிலையில் வந்தீர் என ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட போது அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்;  மக்கா பற்றி வர்ணிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வரும் வரை சற்று காத்திருக்குமாறு சொல்ல, சில வினாடிகளிலேயே நபியவர்களும் அவ்விடத்திற்கு வந்து, ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு தமது தேசம் பற்றியே விசாரித்தார்கள். அவர்கள் முன்பு சொன்னது போலவே மக்காவின் வனப்பை வர்ணித்துப் பாட அதைக்கேட்ட பெருமானார்(ஸல்) அவர்களின் கண்கள் பாசத்தால் பணிந்தன. அஸீலைப் பார்த்து பெருமானார்(ஸல்) அவர்கள் “அஸீல், (நிறுத்து) இதயம் சற்று இளைப்பாறட்டும்.மீண்டும் மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி) எம்மை கவலையில் ஆக்கிவிட வேண்டாம் என்றார்கள். (நூல்: அல்-இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா).

நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு வந்த போதிலும் சதாவும் தாம் பிறந்த தேசத்தைப் பற்றிய கவலையுடனே இருந்திருக்கிறார்கள். ஆனால் காலப் போக்கில் மதீனா பற்றிய அன்பு தமது உள்ளத்தில் வர வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்குத் தோன்றியது. ஏனெனில் தமது த.வாப் பிரச்சாரம் வெற்றி பெறத் தளமாக இருந்த பூமி அந்த மதீனா மாபூமி தான். எனவே தான் தமக்கு மதீனாவின் மீது பற்றை உண்டாக்கும் படி அல்லாஹ்விடத்திலே கீழ் வருமாறு பிராத்தனையும் புரிந்தார்கள்.

“யா அல்லாஹ்! எனக்கு மக்காவின் மீது எவ்வாறு அன்பு இருக்கிறதோ அதே போன்ற பற்றை மதீனாவின் மீதும் உண்டாக்குவாயாக. அல்லது அதை விட அதிகமான அன்பை உண்டு பண்ணுவாயாக”. (நூல்: புகாரி ).

“நபியவர்கள் யுத்தங்களுக்காகவோ அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் மதீனாவை விட்டும் வெளியே சென்றாலும் அவர்கள் உள்ளம் தமது தேசத்தின் சிந்தனையிலேயே லயித்திருக்கும். மீண்டும் திரும்பி வரும் போது மதீனாவின் எல்லையை நோக்கி தமது வாகனத்தை விரைவு படுத்துவார்கள் என அபூ அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்”. (நூல் : புகாரி ).

இதற்கு விரிவுரை எழுதும் அல்லாமா இப்னு ஹஜ்ர் இமாம் அல்-அய்னீ மற்றும் முபாரக் பூரி போன்றவர்களின் கூற்றாவது: மேற்படி நபியவர்களின் நடைமுறையிலிருந்து மதீனாவின் சிறப்பு மற்றும் தேசப்பற்று மார்க்கத்தில் உள்ளவை என்றும் அதன் மீது அன்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூற்கள்: ஃபத்ஹுல் பாரி உம்ததுல் காரி , துஹ்ஃபத்துல் அஹ்வதீ).

ஒரு தடைவ நபி (ஸல்) அவர்கள் : உஹது மலையைப் பார்த்து “ இந்த மலை எம்மை நேசிக்கிறது நாமும் அந்த மலையை நேசிக்கிறோம்” எனக் கூறினார்கள் (நூல்: புகாரி ,முஸ்லிம்)

இதுலிருந்து நபியவர்கள் தமது தேசத்தை எந்த அளவு பிரியம் கொண்டிருந்தார்கள் எனத் தெளிவாகிறது.

பிலால்(ரலி);

எம்மைவிட இஸ்லாத்தின் பால் ஆழ்ந்த பிடிப்பும்,அழுத்தமான ஈமானும் உடையவராகத் திகழ்ந்த ஹழரத் பிலால்(ரலி) அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த போதும்,மக்காவின் மீது தான் கொண்டிருந்த நேசத்தால் சில நேரங்களில் கண்ணீர் வடித்தவர்களாக  அமைதியிலந்தவர்கலாகக் காணப்பட்டார்கள்.அதன் காரணமாக அவர்களின் நாவில் பின்வரும் சொற்கள் எழுந்து விடுவதுண்டு.

“இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற் தரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் கிட்டாதா? ”.

“(மக்காவின்) மஜன்னாவின் நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா?”

“(மக்காவின்) ஷாமா, துஃபீல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? “.

அதே நேரம் அவர்களின் பிராத்தனை இவ்வாறு அமைந்திருந்தது;

“யா அல்லாஹ்! எம்மை இந்த ஷைபா பின் றபீஆ, உத்பா பின் றபீஆ, உமையா பின் கலஃப் போன்றோர் (எமது தேசத்தை விட்டும்) வெளியேற்றியது போலவே இவர்களையும் (உனது றஹ்மத்தை விட்டும்) வெளியேற்றுவாயாக” (நூல்: ஃபத்ஹுல் பாரி ).

இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்);

அபூ நுஐம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்) அவர்கள் கூறினார்கள்:

“தமது தாயகத்தை விட்டும் பிரியும் கஷ்டத்தை விட வேறெந்தக் காரியமும் கடுமையானதாக இல்லை”. (நூல்: ஹில்யத்துல் அவ்லியா)

பேரறிஞர் இப்னு பதூதா;

பேரறிஞர் இப்னு பதூதா அவர்கள் தமது சுற்றுலாவுக்காக தமது தாய் நாட்டை விட்டும் வெளியேறிய நிகழ்வைக் குறிப்பிடும் போது;

 “…சகல நாடுகளையும் விட என்னிடத்தில் சிறப்புப் பொறுந்திய நான் நேசித்த எனது நாட்டின் பிரிவை நினைக்கும் கஷ்டத்தினால்  எனக்கு மரணம் வந்து விடுமோ என எண்ணினேன்”. (நூல்: றிஹ்லத்து இப்னி பதூதா).

ஆகவே, பழமையும் தொன்மையும் வாய்ந்த எமது இலங்கை நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்வது, புகழ்வது. இஸ்லாத்தின் வரையறைக்கு உற்பட்டு இலங்கை கண்டெடுத்த முத்துக்களையும், கலையையும், அறிவையும், ஆற்றலையும் போற்றுவது புகழ்வது. இலங்கையின் அழகையும், தரத்தையும் பேசி பெருமைப்படுவது எந்த விதத்திலேயும் தவறாகாது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று அந்த நாட்டிலுள்ள குடிமக்களிடையே நல்லுறவையும் நேசத்தையும் ஏற்படுத்துமேயானால், அந்த நல்லுறவு நேசம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தக் குடிமக்களுக்கு நல்வாழ்வை அமைத்துத் தருமேயானால், அந்நல்வாழ்வின் அடிப்படையில் நீதி(சத்தியம்) நிலைநாட்டப்டுமேயானால் இந்தத் தேசியவாதத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.ஏனெனில் இஸ்லாம் இதை ஒரு கடமை என்றே பணிக்கின்றது.

“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்”. (குர்ஆன்,5:8).

தேசியவாதம் என்பது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்து நின்று சண்டையிடுவதும், வஞ்சகத்தையும், பகையையும் மனதிலே தேக்கிக்கொண்டு ஒருவரையொருவர் வைவதும், புறங்கூறுவதும், இவற்றின் அடிப்படையிலே உள்நாட்டுக் கலகம் ஏற்படுவதும், சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட போர்கள் இடம் பெறுவதும்தான் என்றால் அந்தத் தேசிய வாதத்திற்கு நாங்கள் பரம எதிரிகளாக இருப்போம்.ஏனெனில் தேசியவாதம் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றதொரு சூழலை உருவாக்கினால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு எதிரிகள் நாட்டு மக்களை ஒன்று சேரவோ ஒருமைப்படவோ விடமாட்டார்கள்.மாறாக தங்களுடைய சூழ்ச்சிமதியால் இதுபோன்ற நாட்டு மக்களை தங்களுக்குச் சாதகமாக் வளைத்துப் போட்டுக் கொள்வார்கள். இதன் பயனாக இந்நாடு மக்கள் எங்கேயாவது போகவேண்டும் என்றால் அந்த எதிரிகளிடம்தான் போக வேண்டும். இவர்கள் எங்கேயாவது கூடிப் பேச வேண்டுமென்றால் அது அந்த எதிரிகளின் கோட்டங்களிலேதான் இருக்கும். இவற்றிற்கெல்லாம் இடம்கொடுக்கும் ஒரு தேசியவாதம் பயனற்ற ஒரு தத்துவமேயாகும். இந்தத் தேசியவாதத்தால் இந்நாட்டு மக்களோ,தேசியவாதத்தின் சொந்தக்காரர்கள் என்று பீற்றிக் கொண்டவர்களோ எந்தப் பயனும் அடைய மாட்டார்கள்.

இங்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக விளங்க வேண்டும். நட்டு மக்களின் ஒற்றுமைக்கும், அபிவிருத்திக்கும், நல்வாழ்விற்கும், நீதிக்கும் வகை செய்யும் தேசியவாதத்திற்கு நாங்கள் துணை செய்வோம். அது மட்டுமல்ல, அத்தகையதொரு தேசியவாதத்தின் தீவிரவாதிகளாகவே நாங்கள் இருப்போம்.இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும்; இந்தத் தேசியவாதம் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாத்தின் ஒரு பகுதியே ஆகும்.

முஸ்லிம்களுக்கு தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்பது ஈமான் என்ற நம்பிக்கையின் வரையரைக்குட்பட்டதாகும். பிறருக்கோ தேசியவாதம் என்பது பூகோள எல்லைக்குட்பட்டது.

வேறு வார்த்தையில் சொன்னால், எங்கெல்லாம் ஈமான் கொண்டு இறைவனுக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ,எங்கெல்லாம் லாயிலாகஇல்லல்லாஹ் என்று உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட உயிர்கள் வாழும் இடமெல்லாம் நமது நாடு, நமது தேசம். அவர்களின் நல்வாழ்வுக்கு, கண்ணியத்துக்கு உழைத்திட வேண்டியது நமது கடமையாகும்.அதே நேரம் மிக முக்கியமாக; இந்த உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும், அவர்களின் நலனிலும், நல்வாழ்விற்கும் நாம் அக்கறையுடையவர்களாக் இருப்போம். அவர்களின் துன்ப துயரங்களில் நாம் சரி பாதி பங்கெடுத்துக் கொள்வோம்.ஆனால் தமது எல்லைக்குள், தமது வட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருப்பவர்களின் நிலைமை முற்றிலும் மாறானது. அவர்கள் தங்களது எல்லைக்குள் மட்டுமே கட்டுண்டு சிந்திப்பார்கள். அதற்கு வெளியே இருப்பவர்களைப்ப்ற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

ஒரு தேசியவாதி தனது நாட்டுப்பற்றின் எல்லையாக அந்த நாட்டின் முன்னேற்றம்,அபிவிருத்தி இரண்டையுமே கொள்வார். ஆனால் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட நம்மைப் பொறுத்தவரை இதையெல்லாம் கடந்து இன்னொரு மகத்தான பொறுப்பும் உள்ளது. அந்தப் பொறுப்பு மனிதர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்தி, ஈமான் என்ற ஒளியை ஏற்றிவெய்த்து உண்மையை - சத்தியத்தை – இந்த உலகில் நிலை பெறச் சைவதுமாகும். இன்னும், நாம் விரும்பும் தேசிய வாதம்; கொள்கை சுயநலம் – நமது இனம் மட்டும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் – அடுத்த இனத்தவர்களை அடிமைப்படுத்தி நமது கீர்த்தியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்கவெறி, ஆகிய குறுகிய குறிக்கோள்களைக் கொண்டதாக ஒரு போதும் அமையாது. எல்லா இனத்தவர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும், எல்லத் துரைகளிலேயும் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும், உண்மை(சத்தியம்) வெல்ல வேண்டும் என்ற அடிப்படைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த அடிப்படைகளைக் கொண்டுதான் நாம் நாடும் நாடு, நமது தேசியம், என்று நமது முன்னவர்கள் அன்றைக்கு அத்தனை பிரமிக்கத்தக்கவகையில் எமது நாட்டிற்கு விசுவாசமாக நடந்துகொண்டார்கள்.அதனை வரலாற்றிலிருந்து படிக்கும்போது நாம் புருவங்களை உயர்த்தி ஆச்சர்யத்தை வெளிப்படுத்தவில்லையா?அன்றைக்கு நம்மவர்கள் நிலைநாட்டிக் காட்டிய நீதி, நேர்மை, ஒழுக்கம், கண்ணியம்,கட்டுப்பாடு,விசுவாசம் இவற்றிலிருந்து நாம் படிப்பினை பெற்று அதனை செயற்படுத்த வேண்டாமா!.

அக்காலங்களில் சிங்கள மன்னர்களின் மிக நெருங்கிய நன்பர்களாக மட்டுமின்றி, அரசர்களின் வைத்தியர்களாக, அந்தரங்கச் செயலாளர்களாக, தமது இரகசியங்களைக் பாதுகாப்பவர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.

சிங்களவர்களுக்கு எதிரான சக்திகள் போர் தொடுக்க வந்த போதும் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு கை கொடுத்து காப்பாற்றினர். (நூல்: சிறீ லங்காவே முஸ்லிம்வரு –லோனா தேவராஜ்).

முஸ்லிம்களுடன் இருந்த நம்பிக்கை நாணயம் போன்ற இருக்கமான தொடர்புகளினால் பல பிக்குகள் தமது விகாரைக்குச் சொந்தமான பல பூமிகளை பள்ளிவாசல்கள் அமைக்க கொடுத்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூல்: சிறீ லங்காவே முஸ்லிம்வரு).

இப்படி பேரின சமூகத்துடன் நெருக்கமாக இருந்த எமது உறவு இன்று ஆரோக்கியமற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான காரணம் யாது? அந்த உறவை உறுதியாக கட்டி எலுப்புவதற்கான திட்டமிடல்கள் செயற்பாடுகள் எவை,எவ்வாறு??? என சிந்திக்க வேண்டாமா.

உண்மை நிலை இவ்வாறு இருக்க நாம் ஏன் நமது முழு வலிமையையும், வழிகளையும்,முயற்சிகளையும் பயன்படுத்தி இந்நாட்டை தற்காத்துப் பலப்படுத்திடக் கூடாது?முஸ்லிம்களின் (ஈமான்) நம்பிக்கையும் தேசப்பற்றும் ஏன் ஒன்றோடொன்று இயைந்து போகாது?

நாம் இந்த நாட்டின் தேசப்பற்று மிக்க குடிமக்களாக இருப்பதில் பெருமையடைகிறோம். நாம் இன்னாட்டிற்க்காக உழைக்கவும் அநீதிக்கேதிராக உதிரம் சிந்திடவும் தயாராக இருப்போம்.நம் உடலோடு உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் நாள்வரை நாம் இந்நாட்டின் நல்வாழ்வுக்காகப் பாடுபடுவோம்.ஏனெனில் இதுதான் “நமது இலட்ச்சியத்தை நோக்கி” நாம் எடுத்து வைக்கும் முதல் படியாகும்.                

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை”.(குர்ஆன், 21:107).

“ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை”. (குர்ஆன்,68:52).

No comments

Powered by Blogger.