சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை பாடத்திட்ட மாற்றத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு..!
(சட்டத்தரணி சாஹிப்)
இலங்கை சட்டக் கல்லூரிக்கு ஒவ்வொரு வருடமும் குறித்த தொகை மாணவர்கள் போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணிகளாக வெளியாகின்றனர். இப் போட்டிப் பரீட்சை வினாக்கள் அனைத்துமே அடிப்படைச் சட்டங்கள் தொடர்பானவையாக 1999 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை அமைந்திருந்தன. 45 பல்தேர்வு வினாக்களும் 25 சுருக்க விடை வினாக்களும் கொண்ட இரண்டு மணித்தியால ஒரு வினாப்பத்திரமாகவே இது வரைகாலமும் பரீட்சை நடத்தப்பட்டு வந்தது. இதற்கென இலங்கை சட்டக்கல்லூரி"சட்டத்திற்கான பின்னணி' என்ற பாடத்திட்ட புத்தகம் ஒன்றையும் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்குவது வழமை, இப் பாடத்திட்டமானது, சட்டத்தின் இயல்பு, சட்டத்தின் மூலங்கள்,
அரசியலமைப்பு கோட்பாட்டு பின்னணியும், அடிப்படை உரிமைகளும், ஐக்கிய நாடுகள், சட்டத்தொழிலும் சமூகத்தில் சட்டத்தரணிகளும் என்ற ஆறு தலைப்புகளில் அமைந்திருந்தது.
திடீரென கடந்த வாரத்திற்கு முன்னர் சட்டக் கல்லூரி அதிபர் பத்திரிகையாளர் மகாநாடொன்றில் அனுமதிப் பரீட்சை இவ்வருடம் இரண்டு வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஒன்று ஆங்கிலம், இரண்டாவது பொது அறிவு அல்லது நுண்ணறிவு என அறிவித்தமை மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில்"சட்டத்திற்கான பின்னணி' பாடத்திட்டத்திற்கு அமைய மூன்று நான்கு தடவைகள் பரீட்சைக்காக தயாராகி தவறிப் போன மாணவர்கள்ஒரு புறம், இம்முறை பரீட்சைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வகுப்புகளுக்குச் சென்று பணங்களை செலவு செய்து நேரங்களை வீணடித்து கஷ்டப்பட்ட மாணவர்கள் இன்னுமொரு புறம் மிகப் பாரதூரமாக இப்பாடத்திட்ட மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு பாடத்திட்ட மாற்றம் கொண்டு வரும் போது அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். அல்லது இம்முறை பரீட்சை நடைபெறும் போது பழைய பாடத்திட்டமும் புதிய பாடத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு 50 வீதமான மாணவர்கள் புதிய முறையிலும் 50 வீதமான மாணவர்கள் பழைய முறையிலும் தெரிவு செய்யப்பட வேண்டும். இதுவே நியாயமான தீர்வாக அமையும். மாறாக ஒட்டு மொத்தமாக புதிய பாடத்திட்டப்படி பரீட்சை நடைபெறும் போது மிக அதிகமான மாணவர்கள் முயற்சிகள் பூச்சியமாகக் கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது.
எனவே, சட்டக்கல்விப் பேரவை இது தொடர்பில் மாணவர்களின் நலன் கருதி தமது முடிவுகளில் நியாயமான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
Post a Comment