Header Ads



முஸ்லிம்களை ஓடஓட விரட்டும் அரசாங்கம், அவர்களை அவமானமும் படுத்துகிறது


ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டு, நீதிகேட்க தமிழருக்குள்ள உரிமையில் எவரும் தலையிட முடியாது. எமது இந்த உரிமையில் அரசாங்கம் குற்றம் காண முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நமது மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா சென்று செயற்படுவதை ஜனநாயக மக்கள் முன்னணியும், இன்று இங்கே இந்த மேடையில் எம்முடன் கரம் கோர்த்துள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக அங்கீகரிக்கின்றன, ஆதரிக்கின்றன, வலியுறுத்தி நிற்கின்றன என்பதை எந்தவித தயக்கமுமின்றி மிகத்தெளிவாக, உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். 

எம்மை குறை கூறுபவர்கள், முதலில் தம்மை திருத்தி, இந்நாட்டில் தமிழரும், முஸ்லிம்களும் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறையை உறுதிப்படுத்தட்டும். இதை செய்யாமல் எம்மை, உலகத்திடம் முறையிடாதீர்கள் என்று சொல்லுபவர்களை நாம் நிராகரிக்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ், சிங்கள மொழிகளில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

இன்று இந்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் "ஜெனீவா, ஜெனீவா" என்ற கோஷமே கேட்கிறது. நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொன்னது போல் இன்று இந்நாட்டை ஜெனீவா காய்ச்சல் கடுமையாக பிடித்துள்ளது. 

இது நாட்டை காட்டி கொடுக்கும் செயல் அல்ல. இது எங்கள் அடிப்படை உரிமை. இதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. 1989களில் அன்றைய எதிர்க்கட்சி உறுப்பினர் மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெற்கின் சிங்கள மக்களின் மனித உரிமை கோரிக்கைகளை எடுத்துகொண்டு ஜெனீவா சென்றது நியாயம் என்றால் அதை இன்று ஏன் எம்மால் எமது மக்களுக்காக செய்ய முடியாது என்ற எனது கேள்வியை இங்குள்ள சிங்கள ஊடக நண்பர்கள் சிங்கள மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். 

இங்கே எனது பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் அசாத் சாலி கடந்த ஜெனீவா காலத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு தமது இனத்தின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. அவரது நம்பிக்கை நிறைவேறவில்லை. அரசாங்கம் இன்று முஸ்லிம் மக்களையும் ஓட ஓட விரட்டுகிறது. அவர்களை தேடி, தேடி அவமானப்படுத்துகின்றது. இதனால் இன்று அசாத் சாலியும் எங்களுடன் கரங்கோர்த்துள்ளார். முஸ்லிம் மக்கள் இன்று அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டுள்ளார்கள். இதுதான் முஸ்லிம் மக்களின் இன்றைய மனோ உணர்வு. அதை இன்று அவர் எங்களுடன் இணைந்து பிரதிநிதித்துவம் செய்கிறார். 

தமிழர்களும், முஸ்லிம்களும், ஐநா சபையும் இந்த அரசாங்கத்துக்கு வழங்கிய சந்தர்ப்பங்களை இந்த முட்டாள் அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவில்லை. தமது சொந்த தயாரிப்பான, கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளைகூட இதுவரை இந்த அரசு அமுல் செய்யவில்லை. இதை அமுல் செய்கிறேன் என்று தான் இவர்கள் ஐநாவில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்து வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 




No comments

Powered by Blogger.