முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் - கோட்டவுடனான சந்திப்பில் இணக்கம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவுக்கும், முஸ்லிம் சமூக,சமய பிரமுகர்களுக்குமடையே இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் பொருட்களை விநியோகிக்கப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் சமூக பிரமுகர் ஒருவர் எமது இணையத்திற்கு தகவல் தருகையில்,
இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் முஸ்லிம்கள் தரப்பு வாதம், ஹலால் குறித்த இஸ்லாமிய நிலைப்பாடு, முஸ்லிம்கள் ஹலால் நுகர்வில் உள்ள உரிமை என பல்வேறு விடயங்களை அடுக்கடுக்காக விளக்கினார். சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக இச்சந்திப்பு நீடித்தது.
இதன்போது சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும், சிங்கள அமைப்புக்கள் சிலவும் ஹலால் பொருட்களை நுகர விரும்பவில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதன்போது முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் பொருட்களை விநியோகிப்பதெனவும், முஸ்லிம்கள் மாத்திரம் ஹலால் பொருட்களை நுகர முடியுமெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை விடுக்குமெனவும் அந்த பிரமுகர் எமது இணையத்திடம் கூறினார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இதன்போது முஸ்லிம் கவுன்சில் சார்பில் கோட்டபய ராஜபக்ஸவிடம் விரிவான அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment