பயங்கரவாதம் என்றால் என்ன..? பாராளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை
(TL) பாராளுமன்றத்தில் 06-02-2013 புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருக்காமை தொடர்பில் ஆராய்வதற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இடைநிறுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தில் மேற்படி சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா பேச ஆரம்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரோசி கருணாநாயக்கவே முதலில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் பற்றி ஒழுக்கப் பிரச்சினை கிளப்பினார்.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ரவி கருணாநாயக்க, இச் சட்டமூலத்தில் பயங்கரவாதி என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் இந்த சட்டமூலம் நேற்றே ஆலோசனைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டமையால் அது பற்றி ஆராய போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்றும் கூறினார்.
அத்துடன் பயங்கரவாதி என்பதற்கான அர்த்தப்படுத்தல் இச் சட்டமூலத்தில் வழங்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனநாயக தேசியக் கூட்டணியின் காலி மாவட்ட எம்.பி.யான அஜித் குமாரவும் இவ் விடயம் தொடர்பில் இதன் போது ஒழுங்குப் பிரச்சினை கிளப்பினார்.
இதுபோன்றதொரு பாரதூரமான சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் போது அது பற்றி ஆராய ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் போதிய கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டமூலம் இன்று (நேற்று) தான் ஆலோசனைக்குழுவுக்கே சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் பயங்கரவாதி என்பதற்கு வரைவிலக்கணம் கிடையாது. யாரை பயங்கரவாதி என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெரியாது. கடந்த காலங்களில் பிரதம நீதியரசரைக் கூட பயங்கரவாதி என்றனர். ஆகவே இது பற்றி ஆலோசிக்க கால அவகாசம் வழங்கி சட்டமூலத்தைப் பின்னர் கொண்டு வாருங்கள் என்று அஜித் குமார இதன்போது கூறினார்.
எனினும் இது 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்துக்கு கொண்டு வரப்படும் திருத்தம் மட்டுமே என்றும் இந்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும் கூறிய பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் நிதி வருவதைத் தடுப்பதற்காகவே இந்த திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2011 ஆம் ஆண்டில் 11 ஆம் இலக்க சட்டத்தில் அனைத்திற்குமான வரைவிலக்கணமும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறிருப்பினும், ரவி கருணாநாயக்க எழுப்பியது நாட்டின் சட்டம் பற்றிய பிரச்சினை என்பதால் சபாநாயகர் சம்மதித்தால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தி வைத்து விட்டு அதுபற்றி ஆராய்ந்து முடிவொன்றுக்கு வர அரசு தயார் என்று ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதன் பிரகாரம், பிற்பகல் 3.05 மணியளவில் இடைநிறுத்தப்பட்ட சபை நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் மீண்டும் ஆரம்பமாகின.
சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பித்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அஜித் குமார எம். பி. மேற்படி விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்னவென்பது பற்றி தெரியாமல் விவாதத்தில் கலந்து கொள்வது சிரமமாக அமையுமென்று கூறினார்.
இதனையடுத்து பேசிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மீண்டும் கூடி மேற்படி விவகாரம் பற்றி ஆராயும் என்றும் அதன் பின்னர் 07-02-2013 சட்ட மூலம் மீண்டும் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும், ஆகையால் விவாதம் திட்டமிட்டதன் பிரகாரம் தொடர்ந்தும் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
Post a Comment