எமது கோட்டைக்குள் எதிரிகள் நுழைய வழி விடாதீர்கள்..!
A.J.M. மக்தூம் (இஹ்ஸானி)
பேரினவாதிகள் கொண்டுவரும் சந்தேகங்களுக்கு எவ்வளவுதான் பதில் சொன்னாலும், தெளிவு படுத்தினாலும் திரும்ப திரும்ப வெவ்வேறு சந்தேகங்களையும், கோஷங்களையும் எழுப்புகின்றனர். இதன் மூலம் அவர்கள் எதோ ஒரு இலக்கை நோக்கி செல்வதற்காக இந்த வழிமுறைகளை பயன்படுத்துகின்றார்கள் என்பதை தெளிவாகவே உணர்ந்திடலாம். தமது சந்தேகங்களுக்கு தெளிவு பெறுவது அவர்களின் நோக்கமே கிடையாது மற்றுமல்ல உண்மைகளை எங்களை விடவும் விபரமாகவே அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் போன்றோர் பற்றியே இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல் குர்ஆன் 3:19)
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம். (அல் குர்ஆன் 2:146,147)
அந்த உண்மையை எந்த வழியில் சேதப்படுத்தலாம் என்பதையும் தெரிந்து அதற்கான பாரிய திட்டங்களையும் வகுத்து வைத்துள்ளனர் என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இது அவர்கள் இன்று நேற்று போட்ட திட்டமுமில்லை இத்துடன் முடிந்து விடுவதுமில்லை என்பதும் தெளிவானதே!
பேரினவாதிகள் ஆரம்பத்தில் இனவாத கோஷங்களை சற்று அமைதியாகவும், இரகசியமாகவுமே மேற்கொண்டு வந்தனர். சிறுக சிறுக அவர்களின் அடாவடித் தனங்களை சற்று பகிரங்கமாக கட்டவிழ்த்து விட ஆரம்பித்தனர். அப்போதும் நமது தலைமைகள் அமைதி காத்தே வந்தனர். திடீர் என பல்லாண்டு காலமாக அனுராதபுறத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ஒன்றை தகர்த்து தரை மட்டமாக்குவதில் வெற்றி கண்டனர். இது தான் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஊக்கத்தை வழங்கியது என்று சொல்லலாம். அதற்கு பிறகுதான் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இப்பொழுது நமது முஸ்லிம் சமூகம் விழித்துக் கொண்டது. விஷேடமாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா இதன் போது மேற்கொண்ட திட்டங்கள் பேரினவாதிகளை அதிர வைத்தது. தமக்குள் பிளவு பட்டு சிதறுண்டு கிடந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கூட ஒன்றிணைத்து ஒரே குரலில் பேசவைத்தது ஜமிய்யதுல் உலமா (பாராளுமன்றத்தில் அல்ல). தம்புள்ளை நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியாக பள்ளிவாசல் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் உலமா சபை என்பதை நன்றியுடன் முஸ்லிம் சமூகம் நினைவு கூற வேண்டும். இவ்வாறான எத்தனையோ தாக்குதல்களின் போது உலமா சபையினர் முன்னின்று உரிய தரப்பினர்களிடம் சென்று முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சியும் செய்தனர்.
இதுதான் பேரின வாதிகள் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை தூக்கிப் பிடிக்க காரணமாக அமைந்தது எனலாம். ஹலால் சான்றிதழ் வழங்குவதை ஜமிய்யதுல் உலமா சபை நிறுத்திக் கொண்டால் அவர்களும் இனவாத தாக்குதல்களை நிறுத்திக் கொள்வார்களா? என்றால் ஒரு போதும் இருக்க முடியாது. இது ஜம்மியத்துல் உலமா சபையில் ஆரம்பித்து முஸ்லிம் சமூகத்தை மொத்தமாக இல்லாதொழிப்பதற்கான திட்டம் என்பது நிதர்சனம்.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட பேரின வாதிகள் இஸ்லாத்தின் அசைக்க முடியாத கோட்டைக்குள் நுழைந்து அங்கே தமது அராஜகத்தை அரங்கேற்ற பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்தனர். அங்கே எல்லா வாயில்களும் உறுதியாய் இருப்பதோடு இரண்டு வாயில்கள் மாத்திரம் சற்று ஆட்டம் கண்டதை கண்டு கொண்டனர். அதுதான் ஹிஜாப், புர்கா எனும் வாயிலும், ஹலால் எனும் வாயிலும். ஹிஜாப், புர்கா எனும் வாயில் அவர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு ஆட்டம் காணவில்லை என்பதால் இப்போதைக்கு அதனை சற்று நிறுத்திக் கொண்டு ஹலால் எனும் வாயிலால் நுழைய முயற்சி செய்கின்றனர். பிறகு அவசியம் ஏற்படும் போது ஏனைய வாயில்களினால் நுழையலாம் என திட்டமிட்டுள்ளதாகவே உணர முடிகிறது. இதற்கு முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அவர்களுக்கு இடமளிக்காது நமது இஸ்லாம் எனும் கோட்டையை கட்டிக் காப்பது அவசியமாகும்.
நமக்குள் உள்ள முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், குரோதங்கள் போன்ற ஓட்டைகளினாலும் எதிரிகள் நுழையலாம். இதுவெல்லாம் நமது குடும்ப பிரச்சினை இதனை தீர்த்து வைக்க அவர்கள் யார்? என்ற எண்ணப் பாடோடு நாம் செயல்பட்டால் தீய சக்திகள் ஒருபோதும் எமது கோட்டைக்குள் நுழைய முடியாது.
எப்படியோ இஸ்லாம் இறைவனின் மார்க்கம்; அது மேலோங்குவதும், வெற்றி பெறுவதும் உண்மை. எனினும் அதற்கு சிறு கீறு ஏற்படுவதற்கும் நாம் காரணமாக அமைந்திட கூடாது என்ற நன்னோக்கத்துடனேயே இக்கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான். (அல் குர்ஆன் 3:139,40,41)
well done....bro
ReplyDelete