வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலியா ஆராய்வு
(ஏ.எல்.எம்.தாஹிர்)
அவுஸ்திரேலியா எதிர்க்கட்சி பிரதி தலைவரும் வெளிவிவகாரம் மற்றும் வாணிபத்திற்கான நிழல் அமைச்சருமான ஜூலி பிஷப் தலைமையிலான குழுவிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனகசுகததாஸ மற்றும் உயரதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மீள்குடியேற்ற அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றத்திற்கு பிற்பாடான நிலைமைகள் அதனுடன் தொடர்புடைய விடங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் பரிமாறப்பட்டதுடன் மீள்குடியேற்ற நடைமுறைகள் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து திரும்பும் இலங்கை அகதிகளின் மீள்குடியேற்றம் போன்றவை தொடர்பாகவும் தூதுக் குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள், மீள்குடியேறியுள்ள மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பியுள்ள மக்களின் அடிப்படை வசதிகள், வீடு, நீர், சுகாதாரம் போன்றவை தொடர்பாக விளக்கமளித்தனர்.
இக்கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானியர் ரொபின் மூடி , அவுஸ்திரேலிய நீதி, சுங்கம், எல்லைப் பாதுகாப்பு அமைச்சின் நிழல் அமைச்சர் மைக்கேல் கீனன், மற்றும் குடிவரவு, பிராஜா உரிமைகளின் நிழல் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்கொட் மொரிசன் மற்றும் அமைச்சின் செயலாளர் ஜனகசுகததாஸ, ஏனைய உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment