Header Ads



பெரும்பான்மையினரது சீற்றத்துக்கான பின்னணிகள்..!


(AshSeikh S.H.M.Faleel)

   பேராசிரியர் ஜயன்த செனவிரத்னவின் தலைமையில் இயங்கும் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான நிலையத்தின் (IFDC) ஏற்பாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர், சமூக ஆர்வலர்களுக்கான மூன்று நாள் (18–20/01/2013) கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. 

          அதில் பௌத்த மதத்தின் கருத்தைப் பிரதிநிதிப்படுத்திப் பேசிய கொழும்பு பாலி பௌத்த பல்கலைக்கழக விரிவுரையாளர் அளுத்கம விமலரத்ன தேரர் கூறிய கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. பௌத்த மதம் மெத்தா (அன்பு), கருணா (கருணை) முதிதா (பிறரது முன்னேற்றம் கண்டு சந்தோஷம்) உபேக்ஸா (தீவிரவாதமற்ற நடுநிலை) ஆகிய நான்கு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்து உண்மையான பௌத்தத்தின் தன்மையை   வெளிப்படுத்தினார். இவை பௌத்தர்களுக்கு மத்தியிலான உறவில் மட்டுமல்ல பிறருடனான தொடர்பிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தான் பெரிதும் வலியுறுத்துவதாகக் கூறினார். 

          அப்படியாயின் முதிதாவும், உபேக்ஸாவும் இந்நாட்டிலுள்ள சிங்கள சமூகத்திலுள்ள தீவிரவாதிகளால் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்படுவதை தற்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.முஸ்லிம்களது வியாபார முயற்சிகளைப் பார்த்து பெறாமை கொள்ளும் அவர்கள் மிகத் தெளிவாகவே தமது மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தி முஸ்லிம்களது வியாபாரத்தலங்களுக்குப் போக வேண்டாம் என்கிறார்கள். முன் எப்போதுமில்லாத வகையில் பௌத்த சமூகத்தில் மிகப்பயங்கரமான தீவிரவாதம் தலைவிரித்தாடுகின்றது. 

        முஸ்லிம்களது புனிதத் தலங்களைத் தாக்குவது, தீயிடுவது, பகிரங்கமாகவே அல்லாஹ்வையும் நபிகளாரையும் துஷனமான வார்த்தைகளால் ஏசுவது போன்ற இழி செயல்கள் அதிகரித்து வருகின்றன. குளியாப்பிட்டி நகரில் ஊர்வலமொன்றின் போது மிருக உருவமொன்றினைச் செய்து அதன் மீது அல்லாஹ்வின் நாமத்தை எழுதி அவமானப்படுத்தி அந்த உருவை இறுதியில் தீயிட்டுக் கொழுத்தியிருக்கிறார்கள். 

         ஹிஜாப், குர்பான், பலதார மணம், குற்றவியல் சட்டங்கள் தொடர்பான இஸ்லாமிய நெறிகளை படுமோசமான வார்த்தைகளால் சித்தரிக்கின்றார்கள். 

          கடந்த 1.1.2013 அன்று பாதுகாப்பு அமைச்சில் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் இஸ்லாமிய நிறுவனங்களது பிரதிநிதிகளுக்கும் உளவுத் துறைப் பிரதானிகளுக்குமான சந்திப்பொன்று இடம்பெற்ற போது மௌலவி கலீல் (சிங்கள மொழி) அவர்கள் கூறிய சம்பவம் அந்த அதிகாரிகளை ஈர்த்தது. மௌலவி கலீல் அவர்கள் வாகனமொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, அவரைக் கண்ட சிங்கள வாலிபர்கள் சிலர் "மரக்கலயா, தம்பியா' என்று சத்தமிட்டு ஏசியதாகவும் இதுபோன்ற அனுபவம் தனக்கு முதல் தடவையாக ஏற்பட்டமை அதிர்ச்சி தருவதாகவும் கூறினார். மேற்படி சந்திப்பின் போது முஸ்லிம் சமூகம் எந்த சந்தர்ப்பங்களிலும் வன்முறைகளில் இறங்கவில்லை என்றும் ஜெனிவாவுக்குக் கூட சென்று நாட்டின் இறைமையைப் பாதுகாக்க குரல் கொடுத்ததாகவும் முப்தி ரிஸ்வி அவர்கள் தெரிவித்தார். 

கடந்த 2.1.2013 அன்று குறிப்பிட்ட பிரதேசமொன்றில் (HNDE) கற்கை நெறியைத் தொடரும் சில மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் தமக்கு நிகழும் நெருக்குதல்கள் தொடர்பாகப் பேசினர். அவர்கள் தொழுகைக்காகப் பயன்படுத்திய இடம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புத்தர் சிலையை நிர்மாணிக்க பணம் தரும்படி பௌத்த மாணவர்கள் கேட்டதாகவும் தாடியை அகற்றும்படி சிலர் வற்புறுத்தியதாகவும் முறையிட்டனர். 

          இப்படியான சந்தர்ப்பங்களைப் பார்க்கையில் சிங்கள சமூகத்துக்கு மத்தியில் தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டுவிட்டார்கள் என தெளிவாகக் கூறமுடியும். அண்மையில் வெளியான ஒரு துண்டுப் பிரசுரத்தில் இலங்கை முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூறிப்பட்டிருந்தது. 

        இந்த நிலை உருவாகுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அவற்றை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்.

1. வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் உறவை முறிப்பதற்கு பண ரீதியாக, கருத்து ரீதியாக உதவிகளைச் செய்து வருவது நிரூபணமாகி வருகின்றது.

2. இந்த நாட்டில் இன உணர்வைக் கருவியாகப் பயன்படுத்தி வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்படும் அரசியல் வாதிகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. "முஸ்லிம் பயமுறுத்தல்'  ஊடாக மற்றுமொரு யுத்தத்துக்கு வழிசமைப்பது எனும் தலைப்பில் திசரணீ குணசேகர என்பவர் 30.1.2013 அன்று திவயின பத்திரிகையில் எழுதியிருந்த ஆக்கமொன்றில் இதனை மேலும் வலியுறுத்தியிருக்கின்றார். 65 வருடத்துக்குள் எமது கடந்த காலத்தை இருளடையச் செய்த பிரதான காரணி சிங்கள தீவிரவாதமாகும். சந்தர்ப்பவாத, பதவியாசை பிடித்த அரசியல்வாதிகள் இந்தத் தீவிரவாதக் குழுவை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதனூடாக ஆட்சியைத் தக்க வைக்கவோ ஆட்சிக்கு வரவோ செயல்பட்டதன் காரணமாக நிலைமை மென்மேலும் மோசமடைந்தது. 

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி கண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்களம் மட்டும் எனும் கோஷத்தை பிடித்துக்கொண்டது. இதனால் அக்கட்சி அரசியல் லாபமடைந்ததைக் கண்ட ஐ.தே.க யும் 83 ஜுலைக் கலவரமும் 30 வருட ஈழ யுத்தமும் ஏற்படக் காரணமாகியது. தற்போது சிங்கள தீவிரவாதக் குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்களால் முஸ்லிம் விரோத கிளர்ச்சி உருவாகினால் அது 83 ஜுலைக் கலவரத்தை விட பயங்கரமான முடிவுகளை ஏற்படுத்தும். அது ஈழப் போரைவிட மோசமாகும் என்று அவர் எழுதுகிறார். இதிலிருந்து இந்த தீவிரவாதத்தின் பின்னால் அரசியல் இருப்பது தெளிவு. இலங்கையில் அரசியல் கதிரைகள் அடையப்பட்டிருப்பது இன, மத, பிரதேச, மொழி உணர்வுகளைத் தூண்டித்தான் என்பது எமது வரலாறாகும்.

3. மூன்றாம் காரணி பற்றியும் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதாவது இந்த நாட்டு முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லாதிருப்பது பற்றிய விவகாரமே அதுவாகும். குறிப்பாக முஸ்லிம்கள் தமது கொடுக்கல் வாங்கல்களின்போது சமூகங்களுடன் நீதி, வாய்மையுடன் விரிந்த உள்ளத்தோடு நடப்பதில்லை என்பது பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பொய், ஏமாற்று, துரோகம், சுயநலம் என்பன ஏனைய இனத்து வியாபாரிகளை விட முஸ்லிம் வியாபாரிகளிடம் சற்று அதிகம் என்ற கருத்து சிங்களவர்களது மனதில் அதிகம் பதிந்துவிட்டது. இது சற்று மிகைப்படவுள்ளதாயினும் உண்மைகள் இல்லாமலில்லை. 

         அத்துடன் எமது அரசியல்வாதிகள் ஆடும் நாடகங்கள் பிற சமயத்தவர்களையும் மிகைக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒரு கட்சியினர் மற்றைய கட்சியினரை காட்டிக் கொடுப்பது, ஊழல், லஞ்சம், அநியாயத்தின் போது வாய் மூடியிருப்பது, சுயநலத்துக்காகக் கட்சி மாறுவது போன்ற இழிகுணங்கள் முஸ்லிம் சமூகமே பிழையாகப் புரியப்படக் காரணமாகும். 

          இஸ்லாமியப் பணியிலும் தஃவா மற்றும் சமூக சேவைகளிலும் ஈடுபடும் அமைப்புக்களுக்கு மத்தியான குத்து வெட்டுக்கள், இழி சொல் அம்புகள், எதிரியிடம் சென்று தீர்ப்புக் கேட்கும் எதிரியிடம் சென்று தகவல்களை  ஏன் பொய்யான தகவல்களைக் கூட பரிமாறுவது என்பன பண்பாடற்ற சமூகமாக எம்மைக் காட்டியுள்ளது. எதற்கும் அவசரப்பட்டு முடிவெடுக்கின்ற கிட்டிய நலங்களில் கவனமெடுக்கின்ற, பிறரைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத சமூகமாக இனம் காணப்பட்டுள்ளோம்.      அத்தோடு, நாம் சிறுபான்மையாக வாழுகின்றோம் என்பதை மறந்து எமக்கு     வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உரிமைகளை அளவுக்கு மீறியும் பிறரை மதிக்கும் விதத்திலும் அனுபவிப்பது அவதானிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் அதனை "We are Minority but with a Majority mantality" (நாம் சிறுபான்மையாக இருந்தும் பெரும்பான்மையினது மனோ நிலையில் இருக்கிறோம்). 

            இரு வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் அருகருகே ஏட்டிக்குப் போட்டியாக பள்ளிவாசல்களை அமைத்து உச்ச தொனியில் சொல்லம்புகளை வீசி ஒலிபெருக்கிகளில் பயான்கள் என்ற பெயரில் எதனையோ செய்வதால் பிற சமயத்தவர்களுக்கு இதனால் தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றார்கள். பள்ளிவாசல்களை நிறுவுவதில் எந்த திட்டமிடலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இடத்தில் ஒரு பள்ளியை அமைப்பதற்கு முன்னால் அது தேவை தானா என்பது பற்றி நீண்ட ஆலோசனைகள் செய்யப்பட வேண்டும். அவசியம் கட்டத்தான் வேண்டும் என்றால் அதனை எவ்வாறு சிக்கனமாகவும் தேவைக் கேற்பவும் அமைக்கலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். 

          குர்பான் கொடுப்பதற்கு அனுமதி இருப்பினும் பிற சமயத்தவரது உள்ளம் புண்படாத வகையில் அவர்களது ஆத்திரத்தை தூண்டாத விதத்தில் அறுக்கும் முயற்சிகளும் விநியோக முறைகளும் இடம்பெறுவது அவசியமாகும். எனவே, உரிமைகளை சலுகைகளை அனுப்பவிப்பதிலும் எல்லைகளை மீறுவதும் பிற சமயத்தவரது துவேஷத்தை தூண்டி அவர்களை தீவிரமாக சிந்திக்கத் தூண்டி இருக்கின்றது. 

            முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலரது கடும்போக்கும் மார்க்கத்தை அமுலாக்குவதில் கடைப் பிடிக்கப்படும் தீவிரப் போக்கும் கூட முஸ்லிம் அல்லாதவர்களிடம் தீவிரவாதிகளைத் தோற்றுவித்திருக்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும். 

             தேசிய கீதத்தில் 'சிர்க்' ஆன வாசகங்கள் இடம்பெற்றிருப்பதனால் அதனை பாடவோ, அது பிறரால் பாடப்படும் போது எழுந்து நிற்கவோ கூடாது என்றும் சிலர் கூறிவருவதும் அறிய முடிகிறது. ஆசிரியர்களோ, கல்வி அதிகாரிகளோ வகுப்புக்குள் நுழையும் போது எழுந்து நிற்கத் தேவையில்லை என்று சிலர் பிரசாரம் செய்வதாக அறிய முடிகிறது. ஆனால், வகுப்புக்கு வருபவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அது பாதிப்புக்களை ஏற்படுத்தாது விட்டாலும் முஸ்லிம் அல்லாத ஆசிரியர் அல்லது கல்வி அதிகாரி அவ்வாறு வரும்போது மாணவர்கள் எழும்பாது இருந்தால் அது அவர்களை அவமதிப்பதாக அமைந்து விடுகின்றது. 

            இந்த நிலைகளின் போது நாம் கடுமையான 'பத்வாக்களை' அமுலாக்காது சற்று விரிந்த நோக்கில் அவற்றைப் பார்க்க முயலாதபோது இந்நாட்டுக்கு விசுவாசமற்ற பிரஜைகளாக சித்தரிக்கப்படுவோம். நாம் இஸ்லாமிய நாடொன்றில் அன்றி முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் வாழுகின்றோம் என்பதை மறக்கலாகாது. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை, இறைமையை நாம் ஏற்றியிருப்பதனால் தான் இங்கு வாழுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் எல்லாவற்றையும் நூலுக்குப் பார்ப்பதாயின் குர்ஆன் ஹதிஸில் நாம் பின்பற்றாது விட்டிருக்கின்ற எத்தனையோ அம்சங்கள் உள்ள இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம், இஸ்லாம் கூறும் வியாபார ஒழுக்கங்கள், ஸகாத், குடும்பவாழ்வின் அடிப்படைகள், முஸ்லிம்கள் அல்லாதோருடான உறவுகள் போன்ற துறைகளில் நாம் இஸ்லாம் கூறும் போதனைகளில் மிக சொற்பமான அளவையே பின்பற்றி வருகின்றோம். எனவே, அவற்றை அமுலாக்க சிறுபான்மை, பெரும்பான்மை என்ற நாடு வித்தியாசம் இல்லை. பெரும்பான்பையினர் அதில் தலையிடமாட்டார்கள். 

          ஆனால், அவர்களுக்கும் எமக்கிடையில் மோதலைத் தோற்றுவிக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் நாம் தலையிடவும் பத்வா கூறவும் ஆரம்பித்துவிட்டால் ஏற்கனவே அனுபவித்து வரும் உரிமைகளிலும் அவர்கள் கைவைக்க ஆரம்பித்துவிடுவார்கள். 'பிக்ஹுல் அகல்லிய்யாத்' எனப்படும் சிறுபான்மை நாட்டில் முஸ்லிம்களது வாழ்வு முறை பற்றி அதிகம் பேச வேண்டிய காலம் உருவாகிவிட்டது. குறிப்பாக மேற்குலக நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் அன்றாடம் எதிர்நோக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய இஜ்திஹாத் எந்த வகை தீர்வு கண்டு வருகிறது என்பது பற்றி தஃவா களத்தில் இருப்போர் அதிகமதிகம் தெரிந்திருக்க வேண்டும். பிறரில் கரைந்து போகாமல் தனித்துவம் பேணிய நிலையில் சுகவாழ்வை எப்படி மேற்கொள்ளலாம் என்பது இன்றைய இலங்கை வாழ் உலமாக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். 

அந்த வகையில் பிற சமூகத்தவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சுருக்கமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலமாக்களது தாய் நிறுவனமான உலமா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு கட்டுப்படாதவர்கள் குர்ஆனின் கட்டளையே மீறுகிறார்கள்.             

         "ஈமான்கொண்டவர்களே, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.  தூதருக்கும் (உங்களது) விடயங்களுக்கு பொறுப்பானவர்களுக்கும் கட்டுப்படுங்கள்" என்று கூறுகின்றான். இதில் வரும் "உலூல் அமர்' என்போர் பொறுப்பாளர்கள், அறிஞர்கள் போன்றோரைக் குறிக்கும். 

             அந்த வகையில் தனிப்பட்ட முறையில் சிலர் எடுக்கும் சில நிலைப்பாடுகள் முழு சமூகத்தையும் பதிக்கும். இந்த தீவிரமும் கூட பிற சமூதாயத்துத் தீவிரவாதத்துக்கு வித்திட்டுள்ளது. "தீவிரவாதிகள் நாசமடைந்து விட்டார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மீட்டிமீட்டிச் சொன்னார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 2670), “கடும் முறுக்குத் தெறிக்கும்” என்று தமிழில் கூட கூறப்பட்டுள்ளது. நிதானமாகப் பேசுவது பிறரது விமர்சனங்கள் யாவை என்று சிந்திப்பது, தீவிரவாதங்களும் மோதல்களும் உருவாகும் காரணங்களை ஆராய்ந்து, கலந்தாலோசித்து முடிவுகளுக்கு வருவது என்பது காலத்தின் தேவையாகும். நிர்ப்பந்தமான சூழலில் மனதில் ஈமானை பசுமையாக வைத்துக் கொண்டு வாயினால் குப்ரின் வாசகங்களை மொழியலாம் என்ற குர்ஆன் அனுமதி கூட சிந்திக்கத்தக்கவை (16:106) மக்கா சூழலில் அன்றி மதீனா சூழலில் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டவை பற்றியும் நாம் "பிக்ஹுல் அகல்லிய்யாத் பிரிவில் ஆராயலாம். 


2 comments:

  1. " with majority mentality" இதில் என்ன தவறு இருக்கிறது, இந்தியாவில் சீக்கிய இனத்தவர் சிறு பான்மைதான், ஆனால் அவர்களுக்கு இருக்கும் மதிப்பும் கௌரவமும் எந்த பெரும்பான்மைக்கும் இல்லை, ஆகவே நாம் MINORITY என்பதால் மட்டும் எல்லாவற்றையும் சகித்து தான் ஆக வேண்டும் என்பது எமது இளம் தலை முறைக்கு நாம் செய்யும் துரோகம் , 2012 census report Budhist 70.2, Hindu 12.6, Islam 9.7, Christianity ( Rc & Non Rc) we pay the TAX as others to srilanka, regardless of ratio.

    ReplyDelete
  2. Mr.S.H.M.Faleel அவர்களே உங்கள் பார்வை தூய்மையானதாக இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து,அடுத்து குர்ஆனுடைய எச்சரிக்கையை ஏன் முழுவதுமாக சொல்ல மாட்டீர்கள் என்கிறீர்கள். குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக எவர் செயற்பட்டாலும் அவர்களையும் பின்தொடரனுமா? இங்கு அ.இ.ஜ.உ. தவறு செய்யவில்லை ஆனாலும் சிலர் காட்டிக்கொடுத்துக்கொண்டும்,...........கொண்டும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை, வஹாபி என்றும் சலபி என்றும் சிங்கள பலசேனா கூறுவதிலிருந்து தெரிகிறது இது தூயஇஸ்லாத்துக்கெதிரான போக்கு என்று. நீங்களும் உங்களுடன் சேர்ந்திருப்பவர்களையும் குர்ஆனில் அன்னிஸா 58 முதல் 60 வரையான எச்சரிக்கை யாருக்கு என்று விளங்கப்பாருங்கள்., விட்டுக்கொடுப்புகள் உங்கள் சொத்துக்களில் செய்யுங்கள் இஸ்லாத்தில் செய்யவும் வேண்டாம்,தூண்டவும் வேண்டாம், இறுதியாக உங்களுக்கு அறிவுரை செய்யுமளவுக்கு நான் அறிவாளி அல்ல ஆனாலும் மனதில் பட்டவைகளை சொல்லியுள்ளேன் உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தான் நேர்வழி காட்டனும்.

    ReplyDelete

Powered by Blogger.