Header Ads



மியன்மாரின் இனக்கலவரமும், அகதிகளாக்கப்படும் முஸ்லீம்களும்


(எஸ்.எல். மன்சூர்)

மியன்மார் இதன் பழைய பெயர் பர்மா. ஒருகாலத்தில் பொலநறுவையை ஆட்சி செய்த இலங்கை அரசனான பராக்கிரமாபாகு மன்னன் பர்மாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்தாக பள்ளிக்கூடத்தில் படித்திருக்கின்றோம். அப்படிப்பட்ட பர்மாவில் இன்று இனரீதியான எதிர்ப்பலைகள் சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எல்லை கடந்துள்ளது. காவியுடைதரித்த மதவாதிகளும், அரசும் இணைந்து அங்குவாழ் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி அந்நாட்டின் சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக துப்பாக்கியை நீட்;டும் துர்ப்பாக்கியமான சம்பவங்களின் எதிரொலியாக அவர்களை ஓடஓட விரட்டிக் கொண்டே வருக்கின்றனர். 

அதன் அடிப்படையில் ஓர் அங்கமாக பர்மியர்களும், வங்கத்து மக்களும் கடலில் காப்பற்றப்பட்ட சம்பவம் எல்லோருமே அறிந்த விடயம். ஆம். கடந்த 02.02.2013 அன்று தென்கிழக்கின் கடல்பிரதேசத்தில் படகொன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரே இடத்தில் தொடர்;ந்து நின்று கொண்டிருந்த படகைக் கண்டுகொண்ட மீனவர்கள் உடனடியாக கடற்படைக்கு அறிவிக்க படையினர் விரைந்து செயற்பட்டு கடலில் தத்தளித்;தவர்களை காப்பாற்றினர். அந்தப் படகில் மியன்மார் அகதிகளும், பங்காளதேச நபர்களும் இருந்தனர். நிலைமையை விளங்கிக் கொண்ட கடற்படையினர் செயலில் இறங்கினர். உடல்மெலிந்து, உருக்குலைந்து, சாகும் தறுவாயில் இனி விமோசனமே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிய போதுதான் இலங்கைப் படையினர்; அவர்களைக் காப்பாற்றி உயிர்ப்பிச்சை கொடுத்து உயிர்வாழ வைத்துள்ளனர்.

மியன்மார் தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் ஒரு நாடு. பர்மா எனும் பெயரை  நீக்கி கடந்த 1989ஆண்டிலிருந்து மியன்மார் ஆக மாற்றியது அந்நாடு. உள்;நாட்டு விடயங்களில் இரும்புத் திரைபோட்டு அடக்கியாளப்பட்டு வருகின்ற ஒருநாடாகவே அண்மைக்காலம்வரை மியன்மார் இருந்துவருகின்றது. ஒருகாலத்தில் ரங்கூன் என்ற நகரம் தலைநகராகவும் தற்போது நைப்பியித்தௌ என்ற நகர் 2006ஆம் ஆண்டிலிருந்து தலைநகராகவும் மாற்றப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுடன் ஆட்சி நடக்கிறது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டில் சுமார் 130க்கும் மேற்பட்ட இனங்களும், நூற்றுக்கும்மேற்பட்ட வட்டார மொழிபேசும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். பர்மியம் எனும்தேசிய மொழி அரசு மொழியாக இருக்கின்றது. பிரித்தானியரின் நீண்டகால ஆட்சிக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்நாட்டை 1948 ஜனவரி 04ல் சுதந்திரம் வழங்கி விடுதலைசெய்தனர். இயற்கை வளம் நிறைந்த இந்நாட்டின் பலபகுதிகளிலும் முஸ்லீம்களும் செறிந்து வாழ்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் வங்காள தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஒருகாலத்தில் ரங்கூன் தமிழர்களாலும், தமிழ் வியாபாரிகளாலும் நிரம்பி வழிந்தன. தமிழர்களுக்கான எதிர்ப்புக்கள் தலைகாட்டியவுடன் அவர்கள் வியாபாரத்தளங்களை முடித்துக் கொண்டு மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். சொற்பளவு தமிழர்களும் அங்கு வாழ்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக மியன்மார் எதிர்க்கட்சித் தலைவியான ஆங்சாங்சூயி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்தாண்டின் இறுதியில் அந்நாட்டின் இராணுவ அரசு விடுதலை செய்திருந்தமை உலகமறிந்;த விடயம். ஆனாhல் அந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகமான முஸ்லீம்களை நிம்மதியாக வாழவிடாது விரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வங்காளதேசத்திற்குச் செல்லுமாறும் வேண்டுகோள் விடுகின்றனர். செல்லாதவர்களை ஓடஓட விரட்டுகின்றார்கள். அப்பாவி முஸ்லீம்களும் தங்களது நிலைமையை யாரிடம்போய்ச் சொல்வது என்கிற நிலைதடுமாறி உலகின் நாலா பக்கங்களிலும் சிதறி ஓடுகின்றனர். பயங்கரமான கடல் பயணத்தை மேற்கொண்டு மலேசியா போன்ற நாடுகளுக்கு உயிர்தப்பினால் போதும் என்று நாட்டைவிட்டே ஓடுகின்றனர். உலக வல்லசரசுகளுடன் சல்லாபிக்கும் எண்ணெய் வளம்கொழிக்கும் அறபு நாடுகள் இவர்களைக் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை. முஸ்லீம்கள் என்கிற காரணத்தினால் உலகின் பல நாடுகளில் இந்த அவமதிப்பும், அவமரியாதையுடனும், வாழத்தகுதியற்ற நிலைமைகளும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருகின்றன. இதற்கு மியன்மார் முஸ்லீம்கள் மாத்திரம் என்ன விதிவிலக்கா?

இலங்கையில் ஒருகாலகட்டத்தில் வடபுலத்தில் வாழ்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரேநாளில் இடம்பெயர்ந்த வரலாற்றை நாம் பார்த்திருக்கின்றோம். அதனிலும் மோசமான ஒரு இனப்படுகொலை அந்த நாட்டு இராணுவத்தின் துணையுடன் நடைபெறுவதுதான் இதன் விசேஷமாகும். அந்த அடிப்படையில் கடந்தாண்டு ஒக்டோபர் 21ஆம்நாள் அங்கு நீண்டகாலமாக வாழ்ந்துவரும் முஸ்லீம்களுக்கும் அந்நாட்டுவாழ் பௌத்தர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. அன்றைய கலவரத்தில் மாத்திரம் 84 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 129பேர் படுகாயமடைந்ததை அந்நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவித்தன. அழிவுகள் இதனைவிட அதிகம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தனைக்கும் இந்த முஸ்லீம்களை விரட்டக் காரணமாக அமைந்த ஒரு சட்டம் 1982ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் பிரகாரம் மியன்மாரிலுள்ள 135 இனக்குழுக்களிலிருந்து இந்த முஸ்லீம்களை உள்வாங்கவில்லை என்பதுதான் சங்கதியாகும். பங்காளதேச நாட்டிலிருந்து குடியேறிவர்களாகக் கணிப்பிடப்படும் ரொஹிங்கியோ எனும் இனத்தை இந்த குழுவிலிருந்து நீக்கி சிவில் உரிமைகள் அற்று, அந்நாட்டின் பிரஜா உரிமையற்ற ஒரு சமூகமாக ஆக்கப்பட்டமையினால்தான் கடந்த 1982ஆண்டிலிருந்தே இந்த பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே வருகின்றது. அண்மையில் உக்கிரமான முறையில் இனக்கலவரம் வெடித்தபோது ஒரு லட்சத்த்pற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து காடுகளிலும், வங்காளதேசத்தின் எல்லையோரங்களிலும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடலில் பயனம் செய்து மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். சிலர் கடலில் முழ்கடிக்கப்பட்டு உயிரையும் மாய்க்கின்றனர். கடந்தாண்டுடில் இவ்வாறான பயணத்தில் படகு மூழ்கடிக்கப்பட்டு பலர் இறந்தும் உள்ளனர்.

அதேநேரம் பக்கத்து நாட்டில் முஸ்லீம்கள் விரப்பட்டு கொல்லப்படுகின்றனர். அதனை வங்காளதேசம் கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த ரொஹிங்கியோ இன மக்களை வங்காள தேச மக்களின் முக சாயலில் இருப்பதுதான் பிரச்சினையே. வங்காளதேசமும் இவர்களை ஏற்க மாட்டோம் என்றும் கூறுகின்றது. கடந்த வருடம் ஜூன் மாத்தில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் மாத்திரம் சுமார் 75000 முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 'கலவரம் ஏற்படுகின்றபோதெல்லாம் அரசுபடைகள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் எங்களை மனிதர்களாகக் கூட கவனிப்பதில்லை. வீடுகள், சொத்துக்கள், உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு தீவைத்துக் கொழுத்தப்பட்ட மிகமோசமான நிலைமை கடந்;தாண்டில் ஏற்பட்டன.' என இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு தற்போது ரகின மாநில தலைநகரான சித்வேயுக்கு அருகில் இருக்கும் அகதிமுகாமில் வசித்துவரும்  கியவ் மியின்ட் என்கிற ரொஹிங்கியோ இன முஸ்லீம் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். 

'நாங்கள் நரகத்தில் இருப்பதுபோல உணர்கின்றோம். எம்மைப் பாதுகாக்க எவருமே இல்லை. வாழ்வதற்கும் வழியில்லை. தொழில்செய்யவும் முடியாது. இறைவன்தான் பாதுகாக்க வேண்டும்' என்று கூறிய பர்மியர்கள் காடுகளிலும், வங்காளதேசத்து எல்லையோரங்களிலும் கூடாரமின்றி பலமாதங்களாக வாழ்ந்து, உயிரைக் கையில் எடுத்துக் கொண்டு பயங்கரமிக்க கடல்பயணத்திலாவது நிம்மதி கிடைக்கின்றதா என்று வழிதேடிக் கொண்டவர்கள் இன்று ஒலுவில் துறைமுகத்தினுள் இலங்கையின் கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் மனிதனை மனிதன் மதிக்காத மாண்பு இன்று மனிதரிடையே பெருகிவிட்டமையும், இனரீதியான மனப்பக்குவம் தலைக்குள் விஷம்போல் ஏறிவிட்டமையும்தான் காரணமா என்ன?

நாடு, மக்கள், தனியுரிமை, அனைத்தும் எனக்கே சொந்தம் என்று மற்றவரின் வாழ்வில் தலையீடு செய்து மற்றவனின் வாழ்வை சீரழிக்கச் செய்வதிலும், வாழ்க்கைச் செலவேற்றம், யுத்தம், அரசியல் வங்குரோத்துத் தனங்கள், மனித உரிமைகள் மீறப்ப்படுகின்ற தன்மைகள் எல்லாம் ஒன்ற சேர்ந்து தன்னுடைய இனம் மாத்திரம்தான் வாழப்பிறந்த இனம் என்று கொக்கரிக்கும் கூட்டம் மியன்மார்  மாத்திரமல்ல இன்று இலங்கையிலும் காணப்படுகின்றது. சிலபௌத்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து முஸ்லீம்களை வாழவிடமாட்டோம் என்று பள்ளிகளையும், ஹலால் என்கிற வாசகத்தையும் விதைத்துக் கொண்டு கோலாட்டம் போடுகின்றனர். இறைவனாகப் பார்த்து விரைவில் தீர்ப்பு வழங்குவான் என்பதை நம்பிக்கையில் கொண்டுள்ள உலக வாழ் முஸ்லீம்கள் உண்மையான முஸ்லீம்களாக வாழத் தலைப்படாதன் விளைவு மற்றவரால் இழிவுபடுத்தப்படுகின்ற ஒருநிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. 

முஸ்லீம்களின் பெருநாள் தினமான கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தைக்கூட கொண்டாடவிடாது கடந்தாண்டில் மியன்மாரின் ரகின் எனும் மாகாணத்திலுள்ள சித்வி நகரில் ஏற்பட்ட வன்முறைகளால் சுமார் 600வீடுகள் எரிந்து நாசமாக்கப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து பலநூற்றுக் கணக்கானோர் காயப்பட்டுக் கொண்டதும் கடந்த காலத்தில் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த அறிக்கைகள். ஆனால் இன்று அந்த மியன்மார் அகதிகள் நேரில் நமது நாட்டுக்குள்ளேயே வந்துவிட்டார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்து உண்மை என்பதற்கு இவர்களது பயணமும் சான்றாக அமைந்திருக்கின்றது. 

மியன்மார் வங்காளதேச அகதிகள் ஒலுவில் துறைமுகத்தில் !

நள்ளிரவு பத்து மனியிலிருந்து ஒலுவில் துறைமுகம் விழித்துக் கொண்டது. 200க்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிரமாக செயற்பட ஆரம்பித்தனர். படுக்கைக்கான பெட்சீட், நீர்போத்தல்கள், மருந்துப் பொருட்களுடன் இரவு 10மணிக்கு துறைமுகத்திற்குள் ஒடிக்கொண்டே இருந்தனர். ஏதோர் விபரீதம் நடைபெற்றுள்ளது என்பதையே இச்சம்பவம் காண்பித்ததாக துறைமுக ஊழியரான நளீம் என்பவர் தெரிவித்தார். சுமார் 10.30 மணியளவில் இரண்டு கடற்படை டோரா படகுகள் மூலம் 138 அகதிகள் இறக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை பார்ப்பதற்கு கவலைக்கிடமாக இருந்தது. உண்ண உணவின்றி, கடும் பசியுடன், மயக்கமுற்ற நிலையில், படகு உடைந்து கடலில் மூழ்க இருந்த தறுவாயில் காப்பற்றப்பட்டனர். 

இருளோடு இருளாக ஒலுவில் துறைமுகத்தின் கடற்படைத் தளத்தில் படகிலிருந்து அகதிகள் இறக்கப்பட்டனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான பரூஸா நக்பர் தலைமையில் மிக வேகமாக நடைபெற்றது. கடந்த ஜனவரி 14ஆந்திகதி மியன்மாரின் டெக்னோ எனும் பிரதேசத்திலிருந்து 11பேரும், வங்காளதேசப் பிரஜைகள் 128பேருடனும் மலேசியா நோக்கிப் புறப்பட்டு கடலில் சென்றபோது இடையில் தாய்ந்தாந்து கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகிய படகிலிருந்த அகதிகள் அனைவரும் உண்ண உணவின்றி திக்குத் தெரியாடமல் கடல் அலைகளுக்குள் சிக்கித் தவித்து இறுதியில் இலங்கையின் கடற்பரப்பில் திருக்கோவில் கடல்பிரதேசத்தில் நமது நாட்டு மீனவர்களின் கண்களில் பட்டு இறுதியில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். ஒரு பௌத்த நாட்டில் பௌத்தர்களால் பழிவாங்கப்படும் ஒரு கூட்டத்தை இன்னொரு பௌத்தநாட்டு கடற்படையினர் காப்பாற்றி அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளனர். 

ஒரு மனிதனின் மனதை மகிழச் செய்வதும், பசித்தவனுக்கு உணவு அளிப்பதும், துன்பத்திற்கு ஆளாவோருக்கு உதவி வழங்க விரைவதும், துயருறுவோரின் துயரம் துடைத்தலும் மிகச் சிறந்த சேவைகள் என நபிகள் நாயம்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த அகதிகள் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு தற்போது இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பின்கீழ் அக்கரைப்பற்று பொலிசாரின் விசாரணையின் பின்னர் சட்டவிரோத வெளிநாட்டார் தங்கவைக்கப்படும் மீரிஹான நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் உத்தரவிட்டார். 

இன்று பர்மாவின் ஆட்சியில் சிறபான்மையிரான முஸ்லீம் இனத்தின் மீதான கட்டுமீறிய சம்பவங்களின் வெளிப்பாடுகள் அண்மையக் காலமாக வெளிநாட்டு ஊடகங்களினால் வெளிப்படுத்தப்பட்டு வந்தாலும் அங்கு படுபயங்கரமான அடக்குமுறை மூடுமந்திரமாக காணப்படுகின்றது என்கிற விடயத்தை பர்மிய அகதிகள் தெரிவித்தனர். தங்களது நாட்டுக்கு தங்களை அனுப்பாதீர்கள் என்கிற தொனியில் கூறியிருந்தனர். அந்தளவுக்கு பர்மிய முஸ்லீம்கள் காடுகளிலும், அருகிலுள்ள தீவுகளிலும் ஒழிந்து மறைந்து உணவின்றி, உடையின்றி வாழ்ந்து வரும் மியன்மார் முஸ்லீம்களை காப்பாற்ற உலகின் மனிதாபிமானமுள்ள சமூகம் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டும். இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் அகதிகளாக்கப்பட்டு, துரத்தப்படுகின்ற இழிநிலை ஏற்பட்டுள்ள நவீன சமூதாயத்தின் மனிதாபிமானம் பற்றிய சிந்தனைகளில் மாற்றம் பெறுதல் அவசியமாகும். இதனைத் தடுக்கக்கூடிய, தவிர்க்கக்கூடிய செயலாற்றல்களை சக்திமிக்க சர்வதேச அமைப்புகள் குரல் எழுப்பவேண்டும். இவ்வாறு சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக செயற்படும் பர்மா போன்ற நாடுகளுக்கு எதிரான காட்டுத்தர்பார் ஒழித்துக் கட்டுவதை உறுதிசெய்வதும் உலக சமூகம் விழித்தெழவேண்டும்.

No comments

Powered by Blogger.