இஸ்லாமிய குழுக்கள் பலவீனமடைந்தாலும் முற்றாக அழிக்கப்படவில்லை - பிரான்ஸ்
இஸ்லாமிய போராளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மாலியின் வட பகுதியை மீளக்கட்டியமைக்க தனது அரசு உதவுமென பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் போராளிகளுக்கு எதிராக கடந்த 3 வாரங்களாக நீடித்திருந்த இராணுவ நடவடிக்கைகளினால் மாலியின் வட பகுதி பிரான்ஸ் படையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. போராளிகளால் சேதமாக்கப்பட்ட பழைமை வாய்ந்த கலாசாரப் பகுதிகளை புனரமைக்கவும் பிரான்ஸ் அரசு உதவுமென மாலியின் தலைநகர் பம்கோவில் இடம்பெற்ற உரையில் தெரிவித்தார்.
இதேவேளை, மாலியின் வட பகுதியில் மாலி துருப்புகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இஸ்லாமிய குழுக்கள் பலவீனமடைந்துள்ளனர். ஆனால், அவர்களது செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்படவில்லை. எனவே மாலியில் பிரான்ஸ் படை நீண்ட காலம் தங்கியிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலியின் வட பகுதியில் நிலைகொண்டிருந்த காட்டு மிராண்டித்தனம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டுத் தந்தமைக்கு இடைக் காலத் தலைவர் டியோன்கவுண்டா ராஒரி , பிரான்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
யுனேஸ்கோ நிறுவனத்தால் உலக கலாசாரப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த திம்புக் நகரிலிருந்த பெறுமதி வாய்ந்த 2000 இற்கு அதிகமாக குறிப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், கலாசார கட்டிடங்களும் போராளிகளால் சேதமாக்கப்பட்டிருந்தன. இவற்றினை மீளக் கட்டியமைக்க உதவுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி உறுதிமொழியளித்துள்ளார்.
கடந்த வருடம் , இஸ்லாமிய சட்டத்தின் கீழ் இருந்த வட பகுதி பெண்கள் தற்பொழுது பல வர்ண ஆடைகள் அணிந்தும் நகைகள் அணிந்தும் வலம் வருவதாகவும் கூறப்படுகின்றது. பிரான்ஸின் காலனித்துவ நாடான மாலியின் வட பகுதியை பிரான்ஸ் ஜனாதிபதி சென்று பார்வையிட்டுள்ளதுடன், அங்கு நிலை கொண்டுள்ள பிரான்ஸ் மற்றும் மாலித் துருப்புகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதிகளுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் மனித உரிமைகள் கௌரவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலியில் 3500 பிரான்ஸ் துருப்புகள் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment