பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
(பேகம் றஹ்மான்)
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பதனை வரையறுக்கும்போது பொது வாழ்க்கை மற்றும் தனி நபர் வாழ்க்கையில் உடலியல், பாலியல் மற்றும் மனோவியல் ரீதியாக அவர்களுக்கு பால்நிலையினை அடிப்படையாக வைத்து இழைக்கப்படுன்ற அநீதிகள் தொந்தரவு என்பவற்றுடன் சுய கௌரவம் வாழ்க்கைச்சுதந்திரம் என்பவற்றுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறை என்கின்ற வரையரைக்குள் வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இத்தகைய நிலையில் பெண்கள் உயிரியல் ரீதியாக ஆண்களிலிருந்தும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும் அவர்களை பால்நிலை அடிப்படையில் சமத்துவம் வழங்கப்பட வேண்டியது முக்கியமான ஒரு விடயமாக இருந்து வருகின்றது. மாறாக பால்நிலை அடிப்படையில் பெண்களை இரண்டாம் பட்சமாக நோக்கப்படுவதானது அவர்களை மேலும் மேலும் ஒதுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக மட்டத்தில் பரவலாக காணப்படுவதுடன் பெண்ணிலைவாதிகளின் செயற்பாடுகள் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. அவ்வகையில் நோக்கும் போது இத்தகைய பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளானது அவர்களுடைய தைரியம் மற்றும் சமூக அந்தஸ்து என்பவற்றை கேள்விக்குறியாக்கும் விடயமாகவே இருந்து வருகின்றது.
பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளாக நோக்கும்போது அவர்களை வெளிப்படையான உடலியல் வன்முறைகள், உளவியல் வன்முறைகள் என்று வரையறை செய்ய முடியும். உடலியல் வன்முறைகள் என்கின்ற போது குடும்ப மட்டத்திலும் வேலைத்தளங்கலிலுமே அதிகமாக இடம் பெறுகின்றது. உதாரணமாக சண்டையிடுதல், பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகம், என்பவற்றையும் கூற முடியும். உளவியல் ரீதியாக ஏற்படும் வன்முறைகள் என்கின்ற போது குடும்ப மட்டத்தில் கட்டாயத்திருமணம், பாலியல் தொந்தரவுகள், என்பவற்றைக்குறிப்பிடலாம். வளப்பங்கீட்டில் இடம் பெறுகின்ற இழப்புக்கள் அடிப்படையில் உடலியல் உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற தாக்கம் அதாவது சுகாதார வசதிகள் கல்வி வாழ்க்கைத்தரத்தில் சமத்துவமின்மை என்பவற்றை குறிப்பிடலாம். அவ்வாறாக இன்று பல்வேறுபட்ட இடங்களில் பெண்கள் நகைச்சுவை பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றமை இத்தகைய அசாதாரண தன்மைகளால் இன்று பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
பொதுவாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நோக்குகின்ற போது பாலியல் சித்திரவதை, பாலியல் வன்முறை என்பன உடலியல் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் சமூக மட்டத்தில் பெண்களின் அந்தஸ்து மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகள் என்பனவற்றில் செல்வாக்கு செலுத்தும் விடயமாக இருந்து வருகின்றது. இத்தகைய வன்முறைக்கு எதிரான பல்வேறுபட்ட சட்டங்கள் இருந்த போதிலும் கூட அவை பெண்களின் இழப்புக்களுக்கு ஈடாகுமா? என்பது கேள்விக்குறியே. 'மனிதர்கள்' என்கின்ற விடயத்தில் அனைவரும் பொதுவாக நோக்கப்படுகின்ற போது அது பெண்கள் என்று வருகின்ற போது இன்னும் ஏன் சமூகம் அவர்களை நலிவடைந்த இனமாக நோக்குகின்றது என்பது இன்னும்; விடை காண முடியாத வினாவாகவே இருந்து வருகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் வீட்டு வன்முறை என்பது ஒரு மன்னிக்கப்பட முடியாத ஒரு வன்செயலாகவே இருந்து வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போல்தான் இந்த வீட்டு வன்முறை என்பதும். அதாவது நெருங்கிய வாழ்க்கை துணைவரால் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளாக இது விளங்குகின்றது. இங்கு கணவன் தன்னுடைய மனைவியை அடித்தல், ஏசுதல் , தீ காயங்களுக்கு உற்படுத்துதல், போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய வன்செயல்கள் பெண்களுக்கு உடலியல் உளவியல் மற்றும் வார்த்தைகளால் அவர்களை துன்புறுத்துகிறார்கள்.
இந்த வீட்டு வன்முறை என்பது சமூகத்திற்கு வெளிப்படுத்தபடும் விதம் மிகவும் குறைவாகும். இவ்வன்முறையானது ஒவ்வொரு நபரினதும் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குதால் அதனை சமூக கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டுவதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. இருந்த போதிலும் வீட்டு வன்முறை தொடர்பாக இன்று பல சட்ட நடவடிக்கைகள் இவ்வாணாதிக்க சமூகத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளினால் இன்று பல நிறுவனங்கள் ஆக்கபூர்வமான பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமையானது பெண்ணியத்தின் வெற்றியிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இணைந்து செயற்படுகின்றனர். இங்கு பெண்கள் வெறும் ஜடமாகவே நோக்கப்படுவதுடன் அவர்கள் வெறும் பொம்மைகளாக எண்ணி அவர்களது சுயநம்பிக்கை மற்றும் மரியாதை என்பவற்றில் இழுக்கினை ஏற்படுத்தும் விதமாக செயற்படுகின்ற விடயங்களுக்கு இவை பெரும் சாவு மணி என்பதானது வெளிப்படை.
இத்தகைய நிலையில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரந்து பட்ட மட்டத்தில் காணப்படுகின்றது. அதனை இல்லாது ஒழிப்பதற்கு சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறுபட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதுடன் அவை தொடர்பான விழிப்புணர்வுகளும் இன்று வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆணாதிக்க சமூகம் அவர்களது பிழைகளை தவறுகளை உணரும் வரை இவ்வன்முறை இல்லாதொழிப்பது மிகவும் கடினமான ஒன்றே.
பேகம் றஹ்மான்
அரசியல் விஞ்ஞானப்பிரிவு
சமூக விஞ்ஞான துறை
தென்கிழக்குப்ல்கலைக்கழகம்
இலங்கை.
Post a Comment