நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகதிற்கு திடீர் விஜயம்
(சுலைமான் றாபி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் அவர்கள் இன்று (02.01.2013) சனிக்கிழமை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகதிற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இங்கு சுமார் 05 வருடங்களுக்கும் மேலாக நிலவி வரும் நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரச்சினையை கண்டறிந்து அதனை நிபர்த்தி செய்யும் நோக்கிலே இந்த விஜயம் அமையப் பெற்றிருந்தது.
இந்த விஜயத்தின் போது கர்ப்பிணிகள் விடயத்திலும், சிறுவர்களின் சுகாதார விடயத்திலும் தொற்று நோய் மற்றும் டெங்கு நோய் சம்பந்தமான விடயங்களிலும் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தார். குறிப்பாக டெங்கு நோய் சம்பந்தமாக பொது சுகாதார பரிசோதககர்கள் எதிர்காலத்தில் இந்நோய் விடயத்தில் பராமுகமாக இருக்கும் பொது மக்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நுணுக்கங்களையும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுருந்தார். மேலும் இங்கு நிலவி வரும் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) தேவையை மிக விரைவில் சீர் செய்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார். இதேவேளை இங்கு நிலவி வரும் ஆளணிப்பற்றாக்குறை பிரச்சினையில் இடமாற்றங்களும் நிகழ்வதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக இங்கு கடமை புரியும் ஊழியர்கள் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர். இது சம்பந்தமாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் உறுதியளித்தார்.
இவ்விஷேட சந்திப்பில் அமைச்சர் ALM அதாஉல்லாஹ் அவர்களின் இணைப்பதிகாரி அல் ஹஜ் MZM முனீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் A ஜௌபர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் S ஜீவராசா, பொது சுகாதார பரிசோதகர் KL மன்சூர் மற்றும் மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி பைரூஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் மாகாண சபை உறுப்பினர் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேலும் இங்கு நிலவி வரும் குறைபாடு சம்பந்தமாக கடந்த ஜனவரி 19ம் திகதி நமது யாழ் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment