பாகிஸ்தானில் அப்சல் குருவிற்காக பிரார்த்தனை - காஷ்மீரில் விடுதலை இயக்கங்கள் மேலும் பலமடைவு
பாகிஸ்தான் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்தியர் சரப்ஜீத் சிங் விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், அப்சல் குருவின் மறைவுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் குலாம் நபி நெளஷிரி, காஷ்மீர் இஸ்லாமிய அமைப்பினர் பலர் இதில் பங்கேற்றனர்.
அப்போது யாசின் மாலிக் பேசியது,,
பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜீத் சிங்கை தூக்கிலிட வேண்டுமென்று இப்போது பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கக் கூடாது என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். அப்சல் குருவின் மரணத்தால் ஜம்மு-காஷ்மீரில் விடுதலை இயக்கங்கள் மேலும் பலமடைந்துள்ளன.
இந்தியாவில் தேர்தல் நடைபெற இருப்பதுதான் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படக் காரணம். அந்நாட்டில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழல்களால் கெட்ட பெயர் எடுத்துள்ளது. அதில் இருந்து திசை திருப்பவே அப்சல் குருவை தூக்கிலிட்டுள்ளனர்.
அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தில்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட காஷ்மீர் மாணவர்களிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் ஊரடங்கு உத்தர பிறப்பித்து, எதிர்ப்பை முடக்கியுள்ளனர். பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீர் தலைவர்கள், இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்காததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment