Header Ads



புதிய அமைச்சரவையும், நிலை தடுமாறும் முஸ்லீம்களின் தலைமைத்துவமும்


(கழுகுப்பார்வை)

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை..! என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி....! என்னொரு பாடல் கடந்த காலங்களில் வானொலியில் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டதை நினைவில் வைத்திருப்போம். இறைவனாகப்பார்த்து இந்நாட்டு சிறுபான்மையினரின் மீது வழங்கப்பட்டுள்ள ஒரு குற்ற உணர்வு நிலைமையை பேரினவாதிகளும், ஆளும் அரசுதரப்பும் அவர்கள்மீதான பகைமையை தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதைப்போல புதிய அமைச்சு மாற்றத்திலும் ஏற்பட்டுள்ளதாகவே அவதானிகள் தெரிவிக்கின்றனர். 'நாங்கள் பெரிய மரங்கள் எங்களைச் சுற்றி நீங்கள் வளருகின்ற கொடிகள்தான் இந்தச் சிறுபான்மையினர்கள்' போன்றவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் ஒருகால கட்டத்தில் இந்நாட்டில் சிறுபான்மையினரின் மனவலிமையைப் பவ்வியமாக கழற்றவைத்ததுமட்டுமல்ல அதன்பின்னைய நாட்களில் பேரினவாதத்தின் போக்குகள் வெளிப்படையாகவே வெளிப்படத் தொடங்கின. ஆனால் அது இன்று பல்வேறு அரங்குகளில் அரங்கேற்றப்படுகின்றன என்றுதான் கூறவேண்டியுள்ளது.

அதுமட்டுமல்ல அதற்கு முன்னதான ஒரு காலகட்டத்தில் வெறுமனே சமூகத்தின் உணர்வலைகளை ஊட்டி வம்புச் சண்டைக்கு இழுக்கும் பார்வைகள் ஏற்பட்டன. அக்காலங்களில் எல்லாம் பேரினத்ததுடன் ஒட்டி உறவாடிய அக்கால முஸ்லீம்கள் மிகச் சாதுர்யமாக தங்களுக்கிடையிலான பரிபாலங்களை காற்றாய் பறக்கவிடுவதில் தேசியத்துவத்தை நிலைநாட்டி இந்நாட்டின் பூர்வீகத்தவர்கள் என்பதையெல்லாம் புரியவைக்கின்ற தலைமைத்துவங்களாக முஸ்லீம் தலைமைத்துவங்கள் இருந்து வந்தன. ஆனால் இன்று தலைமைத்துவங்கள் தங்களுடைய அரசியல் வாழ்வை சிறப்பிக்கவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாது தங்களது சாக்குகளை நிறைத்துக் கொள்ளும் ஏற்பாடுகளிலும் காலம்தள்ளிக் கொண்டு செல்வதையும் பார்க்கின்றபோது உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை இவற்றுக் கெல்லாம் காலமும், கடவுளும் செய்த குற்றங்களாகவே பாடத்தோன்றுகின்றது.

கடந்த திங்கள்(28.01.2013) அலரிமாளிகையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்நாட்டு சிறுபான்மையினருள் ஒரு இனமான முஸ்லீம் சமுதாயத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவையில் எதிர்பார்க்கப்பட்டவாறு கிடைக்காததையிட்டு இந்நாட்டு முஸ்லீம்களுக்கு ஏமாற்றமும், தடுமாற்றமும் கிடைத்திருப்பாகவே ஆளும் கட்சியினுள் ஒட்டிக் கொண்டவர்கள் பலரின் கருத்துக்களாகக் கூறப்படுகின்றன. அதனை விளங்கிக் கொண்டவர்போல நமது ஜனாதிபதியும் அமைச்சரவையின் பின்னராக, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது முஸ்லீம்களையும் விரைவில் சந்திக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அப்படியானால் உண்மையில் முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவி;காக உறுதிமொழி வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை நமது ஜனாதிபதி ஒத்துக் கொண்டவர்போல அதற்கான பரிகாரத்தை தீர்க்கும் வகையில் நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்படி சந்தித்து ஆறுதல் கூறவிளைவது ஒருபுறமிருக்க அண்மையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் தேசிய கீதம் பற்றிய குறிப்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வின் ஒரு முடிவாகவும் அது அரசின் முடிவாகக் கொள்ளமுடியாது  மதசுதந்திரம் அனைத்து தரப்பாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது. நமது கலாசாரத்தை நாம் மறக்கக்கூடாது ஐரோப்பியரின் கலாச்சாரத்தினை நம்பி நாம் பலியாகக்கூடாது என்றெல்லாம் வரைந்து கட்டியுள்ளார் நமது ஜனாதிபதி. அதுமட்டுமல்ல இன்றைய இனரீதியான முறுகளுக்கு யாரோ காரணம். உரியவர்கள் கூறுவதுபோல அவர்கள் அல்ல. யாரோ எம்மையெல்லாம் குழப்ப எடுக்கப்பட்டுவருகின்ற ஒரு நிகழ்வாகவே பார்க்கின்றேன் என்றொல்லாம் அண்மையில் ஜனாதிப அவர்கள் கூறியிருந்தார். 

ஹலால் ரீதியான நிந்தனைகள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் (வணக்கஸ் தலங்கள்) கட்டமுடியாது, பள்ளிவாசல்களை அடித்து தூளாக்குவது, இன்னும் எத்தனையோ விடயங்கள் மூலமாக முஸ்லீம்களையும், அவர்களது மார்க்கத்தையும் கண்ணியப்படுத்;தாமல் அடியோடு சாய்த்துவிட்டு அவர்களின் பொருளாதாரங்களையெல்லாம் முற்றாகச் செயலிழக்கச் செய்யும் கைங்கரியத்தை மேற்கொண்டுவருவதுபோல பேரினவாதிகளில் சிலர் குறிப்பாக பொதுபலசேனா போன்ற இயக்கங்கள் ஊடாக அழிவைக் கொடுக்கும் அளவுக்கு இந்நாட்டில்  சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும், அவர்களது எழுச்சிகளுக்கான பாதைகளும் மறிக்கப்பட்டு, வாழும் உரிமையும் பறிக்கப்பட்டு அநாதரவானநிலையில் நடுக்கடலில் துடுப்பிழந்த படகுபோல தத்தளிக்கின்ற ஒருநிலைமையை ஏற்படுத்த முனையும் இவர்களுக்கு அமைச்சர் பதவியில் குறிப்பாக ஒட்டுக்கட்சிகளில் முக்கியமான கட்சியாக காணப்படும் முகாவின் ஊடாக கைவைக்கப்படுவதற்கான ஆரம்பமாகவே இது கருதப்படுகின்றது. இந்நடவடிக்கையானது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மையினருக்கும், நாங்கள் என்ன செய்தாலும் நாங்கள் தருவதைத்தான் நீர் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுமளவுக்கு அரசியல் நிலைமை மிகவும் குறுக்கலாக ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

குறிப்பாக நாட்டின் ஆட்சியதிகாரத்துடன் ஒத்தூதுகின்ற முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் மீதும் அதிகளவு செல்வாக்கின்றி புகுந்தவீட்டில் உண்டவர்கள் போல இவர்களை பயன்படுத்தி கறிக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலைச் சமுதாயமாக காலாகாலம் ஏமாற்றப்பட்டு வருகின்ற ஒருநிலைமை இன்றைய ஆட்சியில் குறிப்பாக அண்மைய அமைச்சரவை மாhற்றத்தி;ன் போது ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தொட்டுக் காட்டுகின்றனர்.  வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பட்டியலைப் பார்க்கின்றபோது தெரிகின்றது. குறிப்பாக முகாவினரின் அங்கத்தவர்களுக்கும் அமைச்சுக்கள் வழங்கப்படவேண்டும் என்கிற கோஷங்கள் எழுப்பட்டிருந்த போதிலும், இவ்விடயங்கள் ஜனாதிபதி மட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதையுமே பறைசாற்றுகின்றன. புதிய அமைச்சராக கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு பாராளுமன்றி உறுப்பினரும், முகாவின் அதிமுக்கியஸ்தருமான ஏறாவூர் பசீர்சேகுதாவூதுக்கு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் என்றொரு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இவ்வமைச்சானது பொருளாதார அமைச்சினிலிருந்து பிரிக்கப்பட்டு புதிப்பொலிவுடன் வெளியாக்கப்பட்டு புதுப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வமைச்சு ஊடாக இந்த சமூகம் எதிர்ப்பார்ப்பதுதான் என்ன? அப்படி சமுதாயத்திற்கு செய்ய நினைக்கத்தான் முடியுமா என்ன?

இவ்வமைச்சுப் பதவி மூலம் திருப்தியடைந்துவிட்ட பெருமையில் பசீர்சேகுதாவூத் காணப்பட்டாலும் சில சிற்றமைச்சர்கள் பதவிக்காக அம்பாறையில் சிலர் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று அம்பாரை மாவட்ட கட்சியின் ஆதரவாளர்கள் தொடக்கம் மேல்மட்டத்திலுள்ள முகாவின் உயர்பீடம் வரையிலும் வீறுகொண்டெழுந்து ஆர்ப்பரிக்கின்ற சங்கதிகள் நான் சொல்லித் நீங்கள் தெரியவேண்டிய அவசியமில்லை. கடந்தாண்டு ஜெனீவா தொடக்கம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் பங்காளியாகி முதலைமைச்சரையும் பறிகொடுத்துவிட்டு பாராளுமன்றில் திவிநெகும சட்டத்தின்முன் சரணடைந்து, கொழும்பில் முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸின் தலைவருக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக எவ்வளவுக்கு ஏசமுடியுமோ அந்தளவுக்கு ஏச்சுப்பேச்சுக்கள் வாயிலும், வயிற்றிலும் ஏற்றியபோதிலெல்லாம் பேசாது வாய்மூடி காதுகாத்து பள்ளிவாசலுக்குள் மௌலவி வெள்ளிக்கிழமை குத்தபா பிரசங்கம் செய்கின்றபோது போசமால் இருப்பது போல எதுவுமே பேசமால் ஆளுபவர்களுக்கு ஒத்தூதுகின்ற கடமைப்பாடுடன் இருந்துவரும் முகாவினருக்கு கிடைத்திருக்கின்ற ஒரு அமைச்சுப் பதவியின் மூலம் முகாவின் தலைமைப்பீடம் திருப்பதி அடைந்து விட்டதா என்ன? 

அறபு நாடுகளின் உதவிகள் அதிகமாக வழங்கப்படுவதன் நோக்குகளில் இந்நாட்டில் ஒருசிறுபான்மையினமான முஸ்லீம்களும் வாழ்கின்றார்கள் அவர்களது தேவைகள் இந்நாட்டின் ஆட்சியாளர்களினால் சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகின்றனர் என்பதையெல்லாம் முஸ்லீம்கள் தலைவர்கள் கூறுகின்றவற்றைக் கொண்டு உதவி வழங்கப்படுகின்றன என்பதுதான் யதார்த்தம். ஆனால் உள்நாட்டில் சிறுபான்மையினர்களுக்கு பேரினவாதிகளினால் வழங்கப்படும் மரியாதைகள் சொல்;லில் அடங்காது. எதிர்வரும் இலங்கையின் சுதந்திரதினத்தின் சேதிய வைபவம் நடைபெறுகின்றபோது தமிழிலும் கலந்துள்ள தேசிய கீதத்தை படிப்பதற்குக்கூட சிங்கள கடும்போக்காளர்களின் எதிர்ப்பலைகள் தோற்றம் பெறுவதற்கான ஒரு சூழ்நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. மனிதர்கள் என்கிற வகையிலும், இந்நாட்டின் சுதந்திரத்திற்காக கஷ்டப்பட்ட ஒரு இனத்தின் முதுகில் குதிரையோற்றுபவர்களாக மாறக்கூடாது என்பதை அழுத்தி உணர்த்திட இணைத்துவமிக்கதான சிறுபான்மையினரின் கூட்டுக்கள் எதிர்காலத்தில் வெளிப்படையாக தோற்றம் பெறுவதன் அவசியத்தை உணர்த்திடுவதாகவே இவைகள் தொட்டுக்காட்டுகின்றன.

அதேவேளை பாவம்... எழும்புத்துண்டுகளுக்காக காத்திருப்பதுபோல காத்திருந்து காத்திருந்து பெற்றுக் கொண்ட இவ்வமைச்சினைப் பெற்றதும் இல்லாமல் அது திருகோணமலைக்கு கிடைக்கவில்லை, அம்பாரைக்கு கிடைக்கவில்லை என்கிற கோசங்கள் ஒருபுறம் இத்தனைக்கும் முகாவின் தலைவர் இந்தியாவில் உல்லாசம் என்று வசைபாடும் அதே கட்சி ஆதரவாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர். அன்று கிழக்கு மாகாணத்தில் திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டபோது முகா தலைமைப்பீடம் வெளிநாட்டில் இருந்தது. இன்றும் அப்படித்தான் நடைபெற்றுள்ளது. அப்படியானால் தலைமைப்பீடத்திற்கு எதுவும் தெரியாது என்று கூறுமளவுக்கு அமைச்சரவை மாற்றம் நடைபெற்றிருக்காது என்கிற வாதமும் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கின்றது. அப்படியானால் ஏற்;கனவே தன்னால் தூக்கிவீசப்பட்ட அமைச்சுப் பதவிக்குப் பதிலாக புதிய வலிமையுள்ள ஒரு அமைச்சைத் தரவேண்டும், தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்துத்தானா அன்று தேர்தல் காலத்தின்போது பசீர்சேகுதாவூத் அமைச்சை தூக்கிவீசினார்? எனவும் முகாவின் ஒரு பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு முகா தலைமைப்பீடத்தின் குறிப்பாக தலைவர் பதிலளிக்க வேண்டும். என்பதையே முகாவிற்கு இரவுபகல்பாராது பாடுபட்ட அடிமட்டத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

பல்வேறு கட்டங்களில் ஆட்சிக்கு உதவியவர்கள் இந்த முகாவினர் அவர்களில் சிலர் தமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த போதிலும் அது கிடைக்காமல் போனது துரதிஷ்டமே என்றும் கூறப்படுகின்றது. அரசின் பங்காளிக் கட்சிகள் என்கிற ரீதியிலும் சரி, தலைகொடுத்த தம்பி என்கிற வகையிலும் கொடுக்கப்பட வேண்டிய பிரதியமைச்சுக்கள் வழங்கப்படாமையானது பொறுமையிழந்தவர்கள்போல சிலர் அரசை விட்டொதுங்குவதேசரி என்கிற வாதங்களும் கட்சி வட்டாரத்தில் வெளிக்கிளம்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது. கின்னியாவின் பிரதேச சபையின் தலைவரான எம்.ஏ. நிஹார் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டம் இவ்வமைச்சுப் பதவியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லீம்காங்கிரஸ் கட்சியும் எங்களது பிரதேசத்தை புறக்கணித்துவிட்டது. முகாவின் வளர்ச்சிக்கு நாங்கள் கணிசமான முன்நிலை வகித்திருக்கின்றோம். புதிய அமைச்சின்போது உறுதிமொழி முகா. வின் தலைவரினால் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அவை நிராகரிக்கப் பட்டுள்ளதாகவும், கட்சி ஆதரவாளர்கள் கடுமையான கொதிப்புக்குள் காணப்படுகின்றார்கள் எனவும் எதிர்காலத்தில் இப்பிராந்தியத்திலிருந்து முகாவினருக்கான ஆதரவுகள் கிடைக்காமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கின்னியா பிரதேசசபைத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்படப்போகும் அபாயகரமான கண்டங்களிலிருந்து விடுபடுபதற்குரிய ஆச்சரியமிக்க ஆசியாவின் நிலைமை கவலைக்கிடமாகவே தோன்றும் அறிகுறிகளும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கைக்குள் வருகைதந்திருந்த அமெரிக்காவின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பதும் ஒருவிடயமாகும். எது எப்படியிருப்பினும் எதிர்காலத்தில் இப்படியான மனக்கிலேசங்கள் ஏற்படுவதிலிருந்து சிறுபான்மைச் சமூகத்தைக் காப்பாற்ற விளையும் நடவடிக்கைகளை முஸ்லீம் தலைமைகள் சரியான முறையில் திட்டமிட்டு வேலைத்திட்டங்களை முன்னnடுக்கவேண்டும். அமைச்சுப்பதவிக்காக மாத்திரம் நமது கட்சியையும், கட்சிக் கொள்கைகளையும் விற்று வயிறுபிழைக்கும் அரசியல் வாதிகளையும், ஒட்டுண்ணி அரசியல்வாதிகளையும், சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் சந்தர்ப்ப அரசியல்வாதிகள் மக்கள் வாதிகளாக மாற்றம் காணவேண்டும். அமைச்சுப் பதவிகளைக் கொண்டு காரியம் சாதிக்கும் நிலைமையைத் தவிர்த்து மக்கள் மயப்படுத்திய அரசியல் கட்சிகளாக முஸ்லீம்களின் கட்சிகள் உருவாக்கம்  பெற்று மாற்றம் அடையவேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் இப்பதவியை எனக்குத் தந்து முஸ்லீம் சமூகத்தை அழகுபார்த்துள்ளார் ஜனாதிபதி. என்று கூறியிருந்தார். வெறுமனே ஒரு பிரதியமைச்சர் பதவியா இந்த அனைத்து முஸ்லீம்களையும் அழகுபார்க்கின்றது. எங்குதான் இந்த வசனத்தை எடுத்தாரோ தெரியாது. முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் நாடுமுழுவதும் குறிப்பாக கிழக்கை பொருளாதார ரீதியில்; முன்னேற்றம்காணவேண்டிய தேவையுள்ளது. இந்தவேலையைச் செய்வதற்கும், வறுமையை ஒழித்துக்கட்டவும், உல்லாசத்துறையை மேம்படுத்தவும், உற்பத்திகளை மேற்கொள்ளவும் ஆச்சரியமிக்க ஆசியாவின் அதிசயமாக மாற்றியமைக்கவும் இந்த அமைச்சைப் பயன்படுத்துவேன் எனவும் பிரதியமைச்சர்; தெரிவித்திருந்தார். இப்படியான ஒரு அமைச்சு இந்த முஸ்லீம் சமூகத்திற்கு போதுமானதாகும் என்கிற பிரமை  ஏற்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய ஆர்ச்சரியாகும். 

ரூசோ கூறியபோல 'அரசியல் சமுதாய அமைப்புக்கள் நல்ல தலைவர்களைக் கெடுத்துவிடுகின்றன' என்றும் 'அறிவும், தீர்ப்புச் சொல்லும் திறனும் தலைவருக்கான குணங்களாகும்' என்று டாசிடஸ் போன்றோர் கூறியபோல நல்ல தலைவர்கள் மக்களை கெடுக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டார்களாக இருந்தால்; அவர்கள் கெட்டுவிடுவார்கள் என்பதற்கிணங்க இன்றைய ஆளும் ஆட்சியாளர்களும்சரி, அவர்களோடு ஒட்டுக்கொண்டவர்களும்சரி சமுதாயத்தின் நலனில் அக்கரை கொண்டவர்களோடு மாத்திரம்தான் நமது அரசியல் பயணம் அமையவேண்டும். அதனைவிடுத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் யார் என்பதையும் அமைச்சுக்காவும், தேர்தல்காலத்தில் மாத்திரம் வருகை தந்து அது செய்வேன், இதுசெய்வேன் என்று கூறுவார்கள். வரவேமாட்டார்கள். ஆனால் மக்களை ஆத்திரமூட்டி ஊரை இரண்டாக்க, நோன்புகாலங்களில் மாத்திரம் வருகைதந்து வீதியில் நோன்பு திறக்கும் அரசியல் கலாசாரத்தை மறந்து எப்பவோ செய்த தவறுகளை மறைப்பதற்காக ஆளும் கட்சியுடன் சேர்ந்து முன்னர் செய்த தவறுகளை மற்றவர்கள்தான் செய்தார்கள் என்கிற பொடுபோக்குத் தனமான அரசியலிருந்து விடுபட்டு கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பாதைவிருத்தி, தொழில் துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் மக்களுக்கான செயற்றிட்டங்களை மாத்திரம் மேற்கொள்கின்ற ஒரு சமுதாய அரசியல்வாதிகளாக உருவாக முனையவேண்டும். காந்தி கூறிவதுபோல 'உபயோகப்படாத ஆடைகளை கழற்றி விட்டெறிந்து விடுவதுபோல, தவறான தலைமைகளை அகற்றிவிடுவார்கள் மக்கள்' இதனை அரசியல் செய்வோர்கள் நன்கு புரிந்து கொண்டு செயற்படவேண்டும் என்பதே நமது அவா!

1 comment:

Powered by Blogger.