இப்படியும் ஒரு கிளி..!
ஸ்காட்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து $1100 டாலரை திருடி சென்றது கியா என்றழைக்கப்படும் ஒரு வகை கிளி.
நியூசிலாந்து, கியா என்ற கிளி வகைகளுக்கு பெயர் போன இடம். இந்த கியா வகை கிளிகள் மிக சாமர்த்தியமானவை. நன்கு பூட்டி வைத்து இருக்கும் உணவை சாமார்த்தியமாக எடுப்பதில் மிகுந்த வல்லமை படைத்தது. அதன் பலம் மிகுந்த அலகு மற்றும் கால்களால் எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக உடைத்து விடும்.
நியூசிலாந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உடமைகளை காருக்குள் பூட்டி வைத்துவிட்டு சென்று இருந்தாலும், இந்த கியா கிளிகள் கார் கண்ணாடிகளை தங்கள் அலகால் உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை திருடி சென்று விடும். அதே போன்று கார் பீடிங், டயர் மற்றும் ஏரியல்களை சேதப்படுத்தி விடும்.
இந்த கியா கிளிகளை பற்றி அறியாத ஸ்காட்லாந்தை சுற்றுலா பயணி தனது லாட்ஜ் ஜன்னல் கதவை திறந்து வைத்துவிட்டு போட்டோ எடுக்க வெளியில் சென்று விட்டார். பூட்டி வைக்கும் கார்களை விட்டுவைக்காத இந்த கியா கிளிக்கு ஜன்னல் கதவை திறந்து வைத்து இருந்தால் கேட்கவா வேண்டும். இவரது லாட்ஜ்க்குள் புகுந்து விளையாடியது. பின்னர் என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஒரு துணியில் ஏதோ கனமாக சுற்றி வைத்து இருப்பதை கண்டு, அதை அலாக்காக தூக்கி கொண்டு கம்பியை நீட்டியது.
வெளியில் புகைட்படம் எடுத்துவிட்டு லாட்ஜ் திரும்பிய ஸ்காட்லாந்தை சுற்றுலா பயணி தனது அறை சூறையாடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது பர்ஸ் களவாடப்பட்டு இருப்பதையும் உணர்ந்த அவர், ஹோட்டல் நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு புகார் அளித்தார். அறையின் முன் கதவு உடைக்கப்படவில்லை, ஜன்னல் வழியாக ஒரு ஆள் உள்ளே வரும் அளவுக்கு இடம் இல்லை, வீட்டில் எந்த பிங்கர் பிரின்ட்ஸ்களும் இல்லை! கடைசியில் தான் தெரிந்தது இவரது பர்சை திருடி சென்றது ஒரு கியா கிளி என்று! அவர் தொலைத்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாய் 60,000 ஆகும். இவரது அறை ஜன்னலில் இருந்து ஏதோ ஒன்றை கியா கிளி ஒன்று எடுத்து சென்றதை அவ்வழியாக சென்ற தம்பதிகள் பார்த்துள்ளனர். பின்னர் வேறு வழி இன்றி நண்பர்கள் சிலரிடம் கைமாத்தாக கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு நடையை கட்டினார் அந்த ஸ்காட்லாந்தை சுற்றுலா பயணி.
Post a Comment