சிங்கள பத்திரிகைக்கு தவ்ஹீத் ஜமாத்தின் விளக்கம்
(ரஸ்மின் M.I.Sc துணை செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ))
கடந்த 17 ஞாயிறு அன்று வெளியான ஹிரு தின பத்திரிக்கையில் மதுகம செனவிருவன் என்பவர் இஸ்லாத்தைப் பற்றி எழுதிய ஆக்கம் ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொலை செய்யும்படி குர்ஆன் தூண்டுவதாக எழுதியிருந்தார். இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட ஆக்கம் முழுவதும் முன்னுக்குப் பின் முரனாக, தவறான கருத்துக்களை சுமந்து இஸ்லாத்தைப் பற்றியோ, குர்ஆனைப் பற்றியோ எவ்வித ஞானமும் இன்றி தன்னிச்சையாக இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் எழுதப்பட்ட ஆக்கம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
அது மட்டுமன்றி கட்டுரையாளர் தனது ஆக்கத்தில் சுட்டிக் காட்டும் வசனங்களும் அதற்கு அவர் வழங்கியுள்ள தவறான விளக்கங்களும் அவருடைய சொந்த முயற்சியினால் குர்ஆனில் இருந்து தேடி எடுத்து எழுதப்பட்டவைகள் அல்ல என்பது கட்டுரையையும் அதன் வாதங்களையும் பார்க்கும் போதே தெளிவாக விளங்குகின்றது.
காரணம் இஸ்லாத்திற்கு எதிராக இந்த குற்றச் சாட்டை பல காலமாக பலரும் வைத்து வருகின்றார்கள். அந்தந்த காலத்திலேயே அவர்களுக்கு தெளிவான பதில் கொடுக்கப்பட்டு விட்டது. இருந்தும் திரும்பவும் இதே வாதத்தை மதுகம செனவிருவன் போன்றவர்கள் வைப்பதற்கான காரணம் அடுத்தவர்களின் ஆக்கங்களை காபி செய்து தனது பெயரில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டும் அளவுக்கு காபி செய்யப்படும் கட்டுரைகள் சொல்லும் செய்திகள் உண்மைதானா? குர்ஆனின் முன் பின் வசனங்கள் என்ன சொல்கின்றது? என்பவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு இவர்கள் காட்டுவதில்லை.
இறுதின கட்டுரையாளர் மதுகம செனவிருவன் வைத்துள்ள வாதங்களுக்கு அவர் எந்த வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளாரோ அந்த வசனங்களின் முன் பின் வசனங்களைப் பார்த்தாலே இவருடைய வாதங்கள் பொய்யானவைகள் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
குர்ஆனில் இடம் பெரும் இரண்டு வசனங்களை சுட்டிக்காட்டி ‘முஸ்லிம் அல்லாதவர்களை கண்ட இடத்தில் கொலை செய்யும்படி குர்ஆன் சொல்கின்றது’ என்று குறித்த ஆக்கம் தனது கருத்தை பதிவாக்கியிருந்தது.
உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொலை செய்யும்படி இஸ்லாம் எந்த ஓர் இடத்திலும் சொல்லவில்லை. அப்படி சொல்வதாக இருந்தால் இஸ்லாம் தனது கொல்லையை மற்றவர்களுக்கு திணிப்பதாக அது ஆகிவிடும். ஆனால் இஸ்லாம் ஒரு போதும் தனது கொள்கையை மற்றவர்களுக்கு திணிக்காது. விரும்பியவர்கள் இஸ்லாத்தை ஏற்று பின்பற்றலாம். விரும்பாதவர் இதனை விட்டும் விலகிவிடலாம். யாரையும் வலுக்கட்டாயமாக இந்த மார்க்கத்தில் இணைக்க முடியாது. இணைக்கவும் கூடாது.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. (2:256)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தில் யாரையும் இணைக்க முடியாது என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. குர்ஆன் இப்படி தெளிவாக தனது செய்தியை சொல்லியிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொல்ல வேண்டும் என்று குர்ஆன் சொல்வது அபத்தமாகும்.
இப்போது கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய வசனங்களுக்குறிய விளக்கத்தை நாம் ஆராய்வோம்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொல்லும் படி இஸ்லாம் சொல்கின்றது. என்ற தனது தவறான வாதத்தை நிலை நாட்ட கட்டுரையாளர் திருமறைக் குர்ஆனின் 08வது அத்தியாயம் 12வது வசனத்தையும், 09வது அத்தியாயம் 05வது வசனத்தையும் ஆதாரம் காட்டியுள்ளார். இவர் தவிர இதே குற்றச் சாட்டை முன் வைக்கக் கூடிய சிலர் திருக்குர்ஆனின் 02வது அத்தியாயம் 191வது வசனத்தையும் தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக முன் வைக்கின்றார்கள். இந்த அனைத்து வசனங்களும் என்ன கருத்தை சொல்கின்றன என்பதை நாம் இப்போது விரிவாக பார்ப்போம்.
08:12 வது வசனமும் 09:05 வது வசனமும் 02: 191வது வசனமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொல்லச் சொல்கின்றது என்பதே கட்டுரையாளரின் வாதம். கட்டுரையாளர் முன் வைக்கும் ஒவ்வொரு வசனத்தின் விளக்கத்தையும் நாம் இங்பே நோக்குவோம்.
நான் உங்களுடன் இருக்கின்றேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக! (08:12)
தனது வாதத்திற்கான முதல் வாதமாக கட்டுரையாளர் முன் வைக்கும் குறிப்பிட்ட வசனம் இஸ்லாமிய வரலாற்றில் எதிரிகளுடன் நடை பெற்ற முதல் யுத்தமான ‘பத்ர்’ யுத்தத்தின் போது இறக்கப்பட்டதாகும். பத்ர் யுத்தத்தில் இறக்கப்பட்டது என்பது கட்டுரையாளரால் புரிய முடியாமல் போயிருக்கும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒத்துக் கொண்டாலும் 08: 12 வது வசனத்தின் முன் பின் வசனங்களை அவதானித்திருந்தாலே இது யுத்த களம் தொடர்பாக பேசும் வசனம் என்பதை புரிந்திருக்களாம்.
அது மட்டுமல்லாமல் கட்டுரையாளர் சுட்டிக் காட்டும் 12வது வசனம் இடம் பெற்றுள்ள 08 வது அத்தியாயத்தின் பெயர் அல் அன்பால் என்பதாகும். இதன் பொருள் ‘போர் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்’ என்பதாகும். அத்தியாயத்தின் பெயரே போர்க்களம் தொடர்பாக இருக்கும் போது கட்டுரையாளர் கொஞ்சம் சிந்தித்திருந்தாலே இதன் உண்மை விளக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனால் கட்டுரையாளரோ தான் காபியடித்ததை சொல்வதில் தான் ஆர்வம் காட்டியுள்ளாரே தவிர அத்தியாயத்தின் பெயரைக் கூடப் பார்க்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
08 வது அத்தியாயம் ஆரம்பத்தில் இருந்தே போர்க்களத்தைப் பற்றியே பேசுகின்றது. உண்மை இப்படித் தெளிவாக இருக்கும் போது, தான் முன் பின் பார்காமல் காப்பியடித்து எழுதியதைப் போல் மற்றவர்களும் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து கட்டுரையை வெளியிட்டிருப்பது மதுகம செனவிருவன் அவர்களின் இயலாமையை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது.
இரண்டாவதாக திருக்குர்ஆனின் 09வது அத்தியாயம் 05வது வசனத்தை கட்டுரையாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
இப்போது 09:05 வது வசனத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்.
எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (9:5)
மேற்கண்ட வசனத்தைப்; பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அது யுத்த களத்தைப் பற்றித் தான் பேசுகின்றது என்பதை சந்தேகமற அறிய முடியும். முஸ்லிம்கள் புனிதமாக கருதும் 04 மாதங்களில் முஸ்லிம்களில் யாரும் எதிரிகளுடன் யுத்தத்திற்கு செல்ல மாட்டார்கள். செல்வதும் கூடாது.
முஸ்லிம்கள் யுத்தம் செய்வதாக இருந்தால் புனித மாதங்கள் நான்கும் கழிந்ததின் பின்னர் தான் யுத்தம் செய்வார்கள். அப்படி யுத்தத்திற்கு சென்றால் யுத்தத்தில் எதிரிகளை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று குர்ஆன் சொல்கின்றது.
யுத்தத்திற்கு சென்று யுத்த களத்தில் வைத்து கைகளை கட்டிக் கொண்டு யாரும் இருக்கமாட்டார்கள். இருந்தால் அவர்கள் இரானுவத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர்களாகிவிடுவர்.
யுத்த களத்தில் வைத்து எதிரிகளை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று சொல்வது தவறல்ல. அதுதான் இரானுவத்தின் செயல்பாடாகவும் இருக்க வேண்டும். இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்தது. அப்போது இரானுவத் தளபதி இராணுவ வீரர்களுக்கு எதிரிகளை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள் என்றுதானே கட்டளையிட்டிருப்பார். அப்படித் தானே கட்டளையிட வேண்டும்.
யுத்த களத்தில் வைத்து கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள் என்று இராணுவத் தளபதி சொல்வதை வைத்துக் கொண்டு கண்ட இடத்தில் கொல்லச் சொல்கின்றார் இதை எப்படி இரானுவத் தளபதி சொல்ல முடியும்? என்று யாராவது கேட்டால் அது எப்படி தவறானதோ அதே போல்தான் இந்த வசனங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றது என்று வாதம் வைப்பதும் தவறானதாகும்.
அது மட்டுமல்லாமல் கட்டுரையாளர் காட்டிய வசனத்தின் தொடர்ச்சியில் இடம் பெரும் வசனங்களை கவணித்தாலே குறிப்பிட்ட வசனம் யுத்த களத்தைப் பற்றித் தான் பேசுகின்றது என்பதை சந்தேகமற அறியலாம்.
இதோ கட்டுரையாளர் காட்டும் வசனத்தையும் அதன் தொடர்ச்சியையும் இங்கே தருகின்றேன்.
எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (9:5)
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (09:06)
அந்த இணை கற்பிப்போருக்கு அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் எவ்வாறு உடன்படிக்கை இருக்க முடியும்? மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களைத் தவிர. அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடக்கும் வரை அவர்களிடம் நீங்களும் நேர்மையாக நடங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான். (9:07)
மேற்கண்ட வசனங்கள் மூன்றையும் பார்க்கும் போது இது யுத்த களத்தைப் பற்றி பேசும் வசனம் தான் என்பதை அறிவுள்ள யாரும் அறிந்து கொள்வார்கள். மட்டுமல்லாமல் 09:06 வது வசனம் இணை கற்பிப்போர் அடைக்கலம் தேடினால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்றும் சொல்கின்றது. இப்படி தெளிவான வசனங்கள் தொடர்ச்சியாக இருந்தும் கட்டுரையாளர் குறிப்பிட்ட வசனத்தின் முன் பின் பார்க்காமல் சம்பந்தமில்லாமல் கட்டுரையை தொகுத்திருப்பது இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் அவருக்குள்ள காழ்ப்புணர்வை தெளிவுபடுத்துகின்றது.
அதே போல் மதுகம செனவிருவன் அல்லாத இன்னும் சிலர் திருக்குர்ஆனின் 2வது அத்தியாயம் 191வது வசனத்தை ஆதாரம் காட்டுகின்றார்கள் இந்த வசனம் சொல்லும் செய்தியைப் பற்றியும் நாம் இங்கு பார்க்க வேண்டும்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம்இ கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. (2:191)
இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.
இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?
போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.
நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாதுஇ உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?
திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?
சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.
எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.
நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.
இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும்இ வழிபாட்டுத்தலங்களும்இ அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)
தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 60:8)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுஇ நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)
முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.
மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். ”உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்” என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். ”இவளைக் கொன்று விடட்டுமா?” என நபித்தோழர்கள் கேட்டதற்கு ”கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம், அஹமது நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் பயன்படுத்தினார்கள்..
மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நல்ல ஒரு விளக்கம், மாஷா அல்லாஹ்..
ReplyDeleteWell Said!
ReplyDeleteDid they published in the same paper? if not no use,
ReplyDeleteஇந்த கருத்துகள் அனைத்தையும் தமிழில் எமக்கு சமர்பித்து என்ன பயன் நண்பரே.. இதை சிங்களத்தில் மொழிபெயர்த்து, குறித்த பத்திரிகையில் அல்லவா பிரசுருத்திருக்கவேண்டும்.. குறித்த கட்டுரையை வாசித்த ஒரு சிங்கலவர்கேனும் இந்த பதில் கருத்து சேர்ந்திருக்குமா...??
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும்.
ReplyDeleteகட்டுரை சற்று நீளமாகப் போயிருக்கின்றது. இன்னும் சுருக்கமாக ஆக்கிக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன். மேலும் இதனை சிங்கள மொழியில் அம்மக்களைச் சென்றடையும் வகையில் சமர்ப்பித்தால் அவர்கள் அல்குர்ஆனைத் தேடி வாசிப்பதற்கும் இஸ்லாத்தை அதன் மூலவடில் புரிந்து கொள்ளவும் வழிகோலும். நன்மக்கள் விஷயமறிவதாகவும், வம்பர்கள் அவர்களது கைகளாலேயே அவர்களது கண்களைக் குத்திக் கொண்டதாக ஆகிவிடும். இன்ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.
hallo cn ou please trnslate in singhala and publich in the same papaer, to understand the singhala community as a reply to his false identification. there is no need to publish in tamil , please do it in singhala and english .
ReplyDeleteஸலாம்.
ReplyDeleteஇந்த ஆக்கத்தை சிங்கள மொழியில் சிங்கள பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியுள்ளோம் . இன்ஷா அல்லாஹ் இந்த வார பத்திரிக்கைகளில் அவை வெளியிடப்படலாம். இன்ஷா அல்லாஹ். நாளை ஜப்னா முஸ்லிம் தளத்திற்கும் அதனை அனுப்பி வைக்கின்றேன் இன்ஷா அல்லாஹ்.
இவண் :
ரஸ்மின் MISc (துணை செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் - SLTJ)