இனிமேல் 'இளந்தென்றல்' என்று அழைக்கலாம்..!
பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா.. என்று சினிமா பாட்டு வரியில் வரும். ஆனால், அம்மா வைத்த பெயரே சர்ச்சையாகி டீன்ஏஜ் பெண் அவதிப்பட்டாள். ஒருவழியாக அந்த பெயரை வைத்து கொள்ள அவளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறந்தால், பெற்றோர் விருப்பப்படி பெயர் வைத்து கொள்ள முடியாது. அந்த நாட்டின் சட்ட திட்டங்கள், மொழி இலக்கணம், உச்சரிப்பு போன்றவை சரியாக இருக்கும் சொல்லையே குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பெயரை மாற்ற அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதுபோல் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்திலும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன.
அதன்படி பெயர் இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும். இல்லாவிட்டால் பெயரை மாற்ற சொல்லி உத்தரவு வரும். ஐஸ்லாந்து தலைநகர் ரேக்ஜாவிக்கை சேர்ந்தவர் பிஜோர்க் ஈட்ஸ்டோட்ரிர்.
இவர் தன் பெண் குழந்தைக்கு பிளேர் பிஜார் கர்டோட்டிர் என்று செல்லமாக வைத்தார். பிளேர் என்ற சொல்லுக்கு 'இளந்தென்றல்' என்று அர்த்தமாம். இந்த பெயருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அதிகாரிகள் குழு, பிளேர் என்ற சொல்லை ஆய்வு செய்து, இதை வைக்க கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர். 'பிளேர்' என்ற சொல் பெண் பெயர் இல்லை என்று அவர்கள் கூறினர். ஐஸ்லாந்து அகர வரிசையில் ஆங்கிலத்தில் வரும் 'சி' என்ற எழுத்து இல்லை.
அதனால் கரோலினா, கிறிஸ்டினா போன்ற பெயர்களை வைத்துக் கொள்ள முடியாது. அதுபோல் பிளேர் என்ற சொல் ஐஸ்லாந்து மொழி இலக்கணப்படி பெண் பெயரை குறிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அதனால், குழந்தை பிளேரை 'பெண்' என்றே பொதுவாக அதிகாரிகள் அழைத்து வந்தனர். இது தொடர்பாக மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த கோர்ட், 'பிளேர்' என்ற சொல்லை பயன்படுத்த நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது 15 வயது பெண்ணாக இருக்கும் பிளேர், தீர்ப்பை கேட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். 'அப்பாடா, இனிமேல் பிளேர் என்ற பெயரில் எனக்கு எல்லா அரசு ஆவணங்களும் கிடைக்கும். முக்கியமாக பாஸ்போர்ட் கிடைக்கும்' என்று சிரிக்கிறார்.
Post a Comment