Header Ads



முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்குமா..?



(ஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில் அதன்  பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதிய ஆய்வுக்கட்டுரை இது. மொழியாக்கம் நித்தியபாரதி)

அக்கட்டுரையின் முழுவிபரம்,

சிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படா விட்டால், இத்தீவில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் வன்முறையும் இனப்போரும் மட்டுமே ஏற்பட வழிவகுக்கும். சிறிலங்காத் தீவில் நிலவும் பௌத்த தீவிரமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற நாசிச ஆட்சியை நினைவுபடுத்துகிறது. 

சிறிலங்காவில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத சமூகமானது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிறது. இந்த வரிசையில், கடந்த வாரம் சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான Bodu Bala Sena மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இது தற்போது சிறிலங்காவில் நிலவும் அடக்குமுறையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்ற செய்தியாக அமைந்துள்ளது. 

"சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன" என இந்த ஊர்வலத்தில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது. 

தன்னை பதவியில் அமர்த்த உதவிய 'புனிதமான சிங்கள வாக்குரிமை' பாதுகாக்கப்படுவதை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய Bodu Bala Sena அமைப்பின் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'கெரில்லா' போன்று முஸ்லீம்கள் உடையணிவதாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தீவிரவாத புத்தபிக்குகள் விமர்சித்தனர். 

அத்துடன் முஸ்லீம்கள் உண்ணுவதற்காக பிரத்தியேகமாக முத்திரை குத்தப்பட்ட உணவுவகைகள் (Halal) போன்றவற்றுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள் பௌத்தத்தை முதன்மைப்படுத்தி கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் முஸ்லீம் மத அடையாளங்களை விமர்சித்து தீவிர பௌத்த பிக்குகள் உரையாற்றிய போது அதற்கு ஆதரவாக தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

Halal என்பது 'அனுமதிக்கப்பட்டது அல்லது சட்டரீதியானது' எனப் பொருள்படும். Halal Foods என்பது முஸ்லீம்களின் உணவுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளாகும். அதாவது முஸ்லீம்கள் பன்றி, கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இறந்த மிருகங்கள், ஊண்உண்ணி மிருகங்கள், இறந்த பறவைகள் போன்ற குறித்த சில உணவுகளை உண்ணுவதற்கு குர்ஆனில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒழுங்கான முறையில் கொல்லப்படாத அல்லது மனிதாபிமானமாக கொல்லப்படாத மிருகங்களின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ற சட்டம் உள்ளது. 

"இன்றிலிருந்து நீங்கள் எல்லோரும் முஸ்லீம் நடைமுறைகளுக்கும் முஸ்லீம் வர்த்தக செயற்பாடுகளுக்கும் எதிராக காவற்துறை போன்று செயற்பட வேண்டும். நீங்கள் மக்கள் காவற்துறையினராக உங்களைக் கருதி செயற்படவேண்டும். ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் சிங்கள இனத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்" என Bodu Bala Sena என்கின்ற பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்த பிக்குவான ஞானசாரா தேரர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேபோன்று சிறிலங்காத் தீவில் வாழும் கிறிஸ்தவர்கள் தமது மத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். 

பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள மக்களின் பணம், தொழில் மற்றும் முயற்சியாண்மை போன்றவற்றை விழுங்குவதாக பிறிதொரு பிக்கு ஆவேசத்துடன் தெரிவித்தார். "இது சிங்கள தேசம். சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினர் பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் அதன் அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் இல்லாது வாழவேண்டும் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் கோட்பாடாகும்" என அந்தப் பிக்கு குறிப்பிட்டார். 

உணவுத் தடையை சிறிலங்கா அரசாங்கம் மார்ச் 31 இற்குள் அமுல்படுத்த வேண்டும் என Bodu Bala Sena அமைப்பின் பொதுச் செயலர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இந்தத் தடையைப் போடும் வரை தாம் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

"சட்டத்தை எமது கைகளில் நாங்களாக எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம்" என பொதுச் செயலர் ஆர்ப்பாட்டப் பேரணியில் வலியுறுத்தினார். 

அண்மைக் காலமாக சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு இச்சிங்கள தீவிரவாத அமைப்பே தலைமை தாங்கிவருகிறது. குருநாகல மாவட்டத்தின் நரம்மல என்கின்ற இடத்தில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் முஸ்லீம் உரிமையாளர்கள் அவர்களது வர்த்தக நிலையங்களை மார்ச் 31ற்குள் மூடிவிட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இந்த உரிமையாளர்களின் கொலை செய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டு Bodu Bala Sena அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை கடந்த வாரம் அனுப்பியிருந்தது. 

இதேபோன்று ஜனவரி மாதத்தில் வடமேற்கு மாகாணத்தின் வயம்ப என்ற இடத்தில் பௌத்த தீவிரவாத அமைப்பால் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் Halal உணவுப் பொருட்கள் விற்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி பிறிதொரு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. 

சிறிலங்காத் தீவு முழுமையிலும் வாழும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள் நாட்டில் மிகக் கிட்டிய எதிர்காலத்தில் பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பல நூற்றாண்டுகளாக சிறிலங்காத் தீவில் வாழும் பெரும்பாலான சிங்களவர்களும் சிறுபான்மை இன மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துள்ள போதிலும், இவ்வாறான சில பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்கள் நாட்டுக்கு ஆபத்தை உண்டுபண்ணுகின்ற காலம் தற்போது நெருங்கிவிட்டது. 

சிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் வளைகுடா ஒத்துழைப்புச் சங்கத்தின் உறுப்பு நாடுகள் கவனத்தைச் செலுத்துவதுடன் இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமான நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன. இந்நிலையில், பௌத்த தீவிரவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்காம் அமைதி காப்பது எச்சரிக்கையுடன் நோக்கப்பட வேண்டும். 

வளைகுடா ஒத்துழைப்புச் சங்கமானது சிறிலங்காவுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிபுரிகிறது. அதாவது சிறிலங்கர்களுக்கு தனது உறுப்பு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. இச்சங்கத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளாகவும் வியாபாரிகளாகவும் அடிக்கடி வருகை தருகின்றனர். 

இந்நிலையில் வளைகுடா ஒத்துழைப்புச் சங்கமானது சிறிலங்கா முஸ்லீம்கள் சந்திக்கும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். இதற்கான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காவிட்டால் அதன் பின்னர், சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும். 

முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமல்லாது சிறிலங்காவில் வாழும் அனைத்து சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பௌத்த தீவிரவாதம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரம் அல்ல. இது மனிதாபிமானம் சார்ந்த விவகாரமாகும். 

*Tariq A. Al Maeena is a Saudi socio-political commentator. He lives in Jeddah, Saudi Arabia.

1 comment:

Powered by Blogger.