விமானத்தில் புகைத்த குடும்பம் - விமானம் அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் அப்பா, அம்மா, மகன் ஆகிய 3 பேரும் சிகரெட் பிடித்து அலம்பல் செய்ததால், பெர்முடா தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கனடாவின் ஹலிபேக்ஸ் பகுதியில் இருந்து டொமினிக் குடியரசு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் சுமார் 50 வயதுள்ள ஆணும் பெண்ணும் அவர்களுடைய மகனும் (22 வயதிருக்கும்) பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 3 பேரும் ஆளுக்கொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தனர். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், 3 பேரும் தொடர்ந்து தம் அடித்து கொண்டிருந்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பெர்முடா தீவு பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த பைலட், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானத்தை தீவில் அவசரமாக தரையிறக்கினார். அங்கு தயாராக இருந்த போலீசார் திபுதிபுவென விமானத்துக்குள் நுழைந்து அப்பா, அம்மா, மகன் 3 பேரையும் கோழி அமுக்குவது போல் அமுக்கி இழுத்து சென்றனர். பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு ஓட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்கள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் தம் அடித்த 3 பேரின் பாஸ்போர்ட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
Post a Comment