அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு இலங்கையும் உதவியது
அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் உலகெங்கும் அமெரிக்கா மேற்கொண்ட சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு இலங்கையும் உடந்தையாக இருந்தது என்று மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
’ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன்ஸ்’ (open society foundations) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவாக செயற்பட்ட 54 நாடுகளும், அவை வழங்கிய பங்களிப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் இலங்கை 45வது நாடாக இடம்பெற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் அம்ரித் சிங் தயாரித்துள்ள இந்த அறிக்கையில், அமெரிக்காவுக்கு உதவிய 54 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில், உலகெங்கும் 136 பேர் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு, இரகசிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், சிஐஏயின் இந்த நடவடிக்கைக்கு 54 நாடுகள் உதவியளித்தாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் விமானங்களில் இடத்துக்கிடம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் இலங்கை எவ்வாறு உதவியது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ யின் விமானங்களை, வழமைக்கு மாறான நடவடிக்கைகளுக்காக தனது வான்வெளியையும், விமான நிலையங்களையும் பயன்படுத்த சிறிலங்கா அனுமதி அளித்திருந்தது.
சிஐஏயின் வழமைக்கு மாறான நடவடிக்கைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தும் விமானங்களை இயக்கும் றிச்மர் எவியேசன் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிறிலங்காவில் 2003ம் அண்டு தரையிறங்கியதாக 1471ம் இலக்க நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த ஆவணங்களில், 2003 ஓகஸ்ட் 12 ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடையில், என்85விஎம் என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஒரு றிச்மர் விமானம் வொசிங்டனில் இருந்து புறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அது பாங்கொக்கில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரித்தது.
பின்னர் அது காபூல், டுபாய் மற்றும் அயர்லாந்தின் சானொன் விமான நிலையத்துக்கும் பறந்தது.
2003இல் பாங்கொக்கில் றிடுவான் இஸமுதீன் கைப்பற்றப்பட்ட நேரத்திலேயே இந்தப் பறப்பு நிகழ்ந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் சிஐஏயின் இரகசியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னரே 2006 செப்ரெம்பரில் அவர் உயர் தடுப்பு முகாமான குவாண்டனாமோ சிறைக்கு மாற்றப்பட்டார். இப்போதும் அங்கேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சிஐஏ இரகசிய தடுப்பு மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்த நீதிமன்ற வழக்குகளோ விசாரணைகளோ ஏதும் இருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment